Last Updated : 01 Jul, 2020 05:19 PM

 

Published : 01 Jul 2020 05:19 PM
Last Updated : 01 Jul 2020 05:19 PM

மாநில முதல்வராக இருந்தபோதும் மருத்துவர் பணி; பி.சி. ராயின் மகத்தான சேவை! 

இன்று தேசிய மருத்துவர்கள் நாள். இந்த நாளின் பின்னணியில் ஒரு வெற்றிகரமான மருத்துவரின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அந்த மருத்துவர், பிதான் சந்திர ராய். சுருக்கமாக பி.சி. ராய். அவர் நினைவாகவே மருத்துவர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிதான் சந்திர ராய் வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1882 ஜூலை 1 அன்று பிஹார் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே மருத்துவத்தில் எம்.டி., டி.எஸ்.சி., எம்.ஆர்.சி.பி, எஃப்.ஆர்.சி.எஸ் என உயர் பட்டப் படிப்புகளை முடித்தவர். அந்தக் காலகட்டத்தில் நாட்டில் அறியப்பட்ட மருத்துவராக விளங்கினார் பி.சி. ராய். பட்டம் பெற்ற பிறகு சுகாதாரச் சேவையில் சேர்ந்தார் பி.சி. ராய். அந்தப் பணியை அர்ப்பணிப்போடு செய்தார். கடின உழைப்பையும் வெளிப்படுத்தினார். ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார். உதவிக்கு செவிலியர் இல்லை என்றால், கவலைப்படமாட்டார் பி.சி. ராய். அவரே செவிலியராக மாறிப் பணி செய்வார்.

ஏழைகள் மீது மிகுந்த அன்பும் கனிவும் கொண்ட மருத்துவராக விளங்கினார் பி.சி. ராய். அந்தக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இலவச சிகிச்சையே பெரும்பாலும் அளித்தார். பிறரிடம்கூடப் பெயரளவுக்கே கட்டணம் வசூலித்தார். மருத்துவத்தின் முதல் சிகிச்சையே நோயாளிகளை அன்பாக அணுகுவதுதான் என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்தவர் அவர். எனவே, அவரைக் காண வரும் நோயாளிகளுக்கு அன்புடனான மருத்துவத்தைப் பார்த்து மக்கள் மனங்களிலும் வாழ்ந்தார். மருத்துவப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அவர், ஒரு கட்டத்தில் தன் வீட்டை ஏழைகளுக்கு மருத்துவமனை கட்டுவதற்காகக் கொடுத்து மக்கள் மனங்களில் சிகரம் அளவுக்கு உயர்ந்தார்.

மருத்துவச் சேவையோடு மகாத்மா காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திலும் பங்கெடுத்தவர் பி.சி. ராய். சுதந்திரப் போராட்ட காலத்தில் மேற்கு வங்காளத்தில் பெரும் தலைவராக விளங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு 1948-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகவும் உயர்ந்தார் பி.சி. ராய். 1960-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தார். முதல்வரான பிறகும் பி.சி. ராய் சிகிச்சை அளிப்பதைக் கைவிடவில்லை. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்குத் தினமும் தன் வீட்டில் இலவச சிகிச்சை அளித்து வந்தார் பி.சி. ராய்.

மருத்துவம், சமூகத் தொண்டு, அரசியல், நிர்வாகம் எனப் பல துறைகளில் பன்முகத்தன்மையோடு விளங்கிய பி.சி. ராயின் சேவையைப் பாராட்டி 1961-ம் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவித்தது. பிறந்த நாளிலேயே உயிரிழப்பது சற்று அரிதான நிகழ்வு. அது பி.சி. ராய்க்கும் நடந்தது. 1962 ஜூலை 1 அன்று அவருக்கு 80-ம் பிறந்த நாள். காலையில் வழக்கம்போல் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். ஆனால், மதியம் 3 மணிக்கு மேல் அவர் திடீரென்று இந்த உலகை விட்டுப் பிரிந்தார். தான் இறப்பதற்கு முன்பே, 1961-ல் கடைசியாகத் தான் வாழ்ந்த வீட்டையும் தன் தாய் பெயரில் மருத்துவமனை நடத்த வழங்கிவிட்டுத்தான் இந்த உலகை விட்டுச் சென்றார் பி.சி. ராய். அந்த அளவுக்கு மருத்துவத்தைப் பெரும் சேவையாகவே பார்த்தவர் பி.சி. ராய்.

பி.சி. ராயின் மருத்துவச் சேவையை நினைவுகூரும் வகையில் இந்திய மருத்துவக் கழகம் 1962-ம் ஆண்டில் ‘பி.சி. ராய்’ விருதை உருவாக்கியது. 1973-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம், கலை, இலக்கியம், சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்த விளங்குவோருக்கு அந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மருத்துவர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் 1991-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x