Published : 01 Jul 2020 11:21 AM
Last Updated : 01 Jul 2020 11:21 AM
கரோனாவிற்கு எப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்? எப்போது விடிவு காலம் பிறக்கும்? - இதை எண்ணாதவர்கள் யாரும் உண்டோ?
ஒரு நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள்-தாங்கள் எதிர்கொண்ட கடுமையான காலகட்டத்தை எண்ணிப் பார்ப்பார்கள்! சிலர் அவர்கள் கண்முன்னே நிகழ்ந்த முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் - போன்ற மனிதகுல அழிவை நினைவில் வைத்திருப்பர்.
சிலர் உலக அரசியலில் ஏற்பட்ட அமெரிக்க-ரஷ்யப் போட்டிகள், ஆளுமையினாலும், பொறாமையினாலும் ஏற்பட்ட விளைவுகள் பற்றி நினைவுகூர்வர்.
சிலர் மனித குலத்தை, இனம், மதம் பாகுபாட்டால் அழித்த நாடுகள், சர்வாதிகாரிகளை நினைவு கொள்வர்- அதனையே வரலாறாகப் போதிப்பர்!!
சிலர் தங்களைச் சார்ந்த தலைவர்களின் வெற்றியினை, தங்கள் வெற்றியாகவே கொண்டாடி மகிழ்வர்.
“ வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்”
வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களைபற்றி மட்டுமே எழுதுவது!! அந்த வரலாற்றுப் பக்கங்களில் கறைகளை மறைக்கவே பயன்படுத்துவர் .
பல்வேறு சிந்தனைகளும், எண்ணங்களும் உள்ள மனிதர்கள் எவரும், மனிதகுலம் இன்றுவரை வாழ-தழைத்தோங்கி வளர காரணமாக இருந்த, வாழ வைத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களை, அறியாமலேயே இருப்பதற்குக் காரணம்- நாமே!!
எட்வர்ட் ஜென்னர், லூயிஸ் பாஸ்டர், மொரீஸ் ஹீல்மென், சால்க் மற்றும் சாபின் - இவர்கள் யார் ? நாம் நோயின்றி வாழ்வதற்கும், பல்வேறு தொற்று நோய்களை மனிதகுலம் வென்றதற்கும் என்ன தொடர்பு?இதைபோன்ற மாமனிதர்களை அறியாமல் - நாம் இருப்பதற்கு யார் காரணம்?
இன்று இவர்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல ஆயிரம் மணிநேரத்தை, தங்கள் ஆயுள்காலத்தை இதற்காகவே அர்ப்பணிக்கின்றனர் - இதற்கான விதையை நட்டவர்கள், மேலே குறிப்பிடத்தக்க மருத்துவர்களே ஆவார்கள்!!
மனிதகுலம் அழிவு விளிம்பிற்குச் செல்லக் காரணமாக இருந்த உலகப்போர்கள், இயற்கைப் பேரிடர்கள், நோய்த்தொற்று அனைத்திற்கும் காரணம் மனிதனின் பேராசையே காரணம்.
“ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்”.
மனிதன் இயற்கைப் பேரிடர்களைச் சமாளித்தான், பல போர்களைத் தொடராமல் முடிவுக்குக் கொண்டுவந்தான். ஆனால் கண்ணிற்குத் தெரியாத, சில மைக்ரான் அளவே உள்ள நோய்கிருமிகள் - மனிதனின் ஆணவத்திற்கு மரண பயத்தைக் காட்டி ,பல நூறு ஆண்டுகளாக சவால் விட்டுக்கொண்டே இருக்கின்றது!
“ நான் வீழ்வேன், என்று நினைத்தாயோ?“என்று நோய்த்தொற்றுகள் நம்மைப் பார்த்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. 400 ஆண்டுகளாக நடந்த போர்களில் ஏற்பட்ட உயிர் இழப்பைவிட, சென்ற ஒரு நூற்றாண்டில் நோய்த்தொற்றால் உயிர் இழந்தவர்கள் அதிகம் .
நொப்போலியன் படை வீழ்த்தப்பட்டதும் நோய்த்தொற்றாலே, ஜெர்மானியப் படை வீழ்த்தப்பட்டதும் நோய்த்தொற்றாலே! முதல் உலகப்போரில் ரஷ்யாவில் மட்டும் ‘டைபஸ் ‘ என்கின்ற நோய்த்தொற்றினால், இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சம் பேர்!
இதனை மனித குலத்தை காக்கவந்த சித்தர்கள் / உயிரைச் செதுக்கிய சிற்பிகள்/ குலசாமிகள்/ஆராய்ச்சி மருத்துவர்கள்- இவர்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்- அவர்களின் அர்ப்பணிப்பை அறிந்துகொள்வோம்.
‘இரீக்கட்சியே பிராவாஸ்கி’( Rickettsia Prowszeki-1916) என்ற கிருமியே ,‘டைபஸ் ‘காய்ச்சலை ஏற்படுத்துவதைக் கண்டறிந்தனர்.
இதன் பெயர்க் காரணம் அறிந்தால் - நம்மில் பலர் மருத்துவ ஆராய்ச்சி என்றால் என்ன? இந்த நிகழ்கால உலகின் ‘அறிவியல்பூர்வமான ஆதாரம் சார்ந்த’ மருத்துவம்(Scientific Evidence based medicine) என்றால் என்ன?அதற்காக இந்த மருத்துவர்கள்- செய்த தியாகம் எத்தகையது என்பதை அறிய முற்படுவர்.
இதுபற்றி சாதாரண மக்களுக்கும் புரிய வைப்பதற்கான சிறு முயற்சியே - இக்கட்டுரை.
‘இரீக்கட்சியே பிராவாஸ்கி’( Rickettsia Prowszeki-1916)பெயரிடப்பட்ட, இரீக்கட்சியே வகை நோய்க்கிருமி - பாக்டீரியாவிற்கும் வைரஸுக்கும் இடைப்பட்ட கிருமி வகையைச்சேர்ந்தது!
அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் ஹெச். டி.இரீக்கட்ஸ் மற்றும் ஆஸ்ரியா சார்ந்த எஸ்.வான் பிராவாஸ்க்- இவர்களின் பெயரை ஏன் வைத்தார்கள்? இவர்கள் கண்டுபிடித்ததால் என்று தவறாக எண்ணவேண்டாம்!!
இந்தக் கிருமி தொற்று ஆராய்ச்சியில் தாங்களே தொற்று ஏற்படுத்தி- நோயின் அறிகுறிகள், தன்மைகளைக் கண்டறியும்போது உயிரிழந்தனர். அதன் காரணமாகவே பெயர் வரக்காரணமாக அமைந்தது!!
நோய்த்தொற்றுக்கான காரண காரியங்கள், மருந்துகள்-ஒருசில நாட்களிலோ, கற்பனையிலோ வந்தது அல்ல!!
‘அலோபதி’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை தவறாக இங்கே புரிந்து வைத்துள்ளனர் .நவீன அறிவியல்பூர்வமான ஆதாரம் சார்ந்த மருத்துவம்( Modern scientific Evidence based Medicine ) என்ற வார்த்தையே சரியான புரிதலாக இருக்கும்.
“டைபஸ்” நோய் உலகப்போரின் போது, பலரின் உயிர்பலியாக் காரணமாக அமைந்தது! இந்தத் தொற்று -உடலின் மேற்பரப்பில் உள்ள ஒருவகை பேன் ( Louse) கடிப்பதால் ஏற்படுகின்றது என்பதைக் கண்டறிந்தனர்!! இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது - இந்த அறிவியல்சார் ஆதார மருத்துவமே!!
முதலாம் உலகப்போரின் முடிவில் 1918-ம் ஆண்டு , மற்றுமொரு தொற்று உலகை அச்சுறுத்தியது! அது தற்போது ஏற்பட்டுள்ள கரோனா வைரஸின் தாத்தாவாகிய - இன்புளூயன்சா!
ஸ்பானிஷ் புளூ என்கின்ற பெயரில் உலா வந்த இன்புளூயன்சா வைரஸ், கரோனாவிலிருந்து பிறிதோர் வகை என்றாலும்- இவை அனைத்துமே ஆர்.என்.ஏ (RNA ) வகை வைரஸே!! இவை அனைத்துமே மனித இனத்திற்கு மிகச் சவால் விடும் குடும்பமாகவே இருக்கின்றது!!
1918ல், கரொனா தொற்றின் மூதாதையரான இன்புளூயன்சா - உலகம் முழுவதும் ஐந்து கோடிமக்கள் இறப்பதற்குக் காரணமாக அமைந்தது! அதே சமயத்தில் முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடி . அமெரிக்காவில் 25 சதவீதம் மக்கள் இன்புளூயன்சாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய சராசரி வாழும் வயது 12 ஆண்டுகள் குறைந்தது.
அப்போது, அமெரிக்காவில் குழந்தைகள் பாடும் பாடல்
“ நான் சிறு பறவை வளர்த்தேன்
அதன் பெயர் என்ஸா
அதன் கதவினை திறந்தேன்
இன்- புளு( பறந்தது)-என்ஸா!”
(I had a little bird
It’s name was Enza
I opened the window
And in- flu-enza)
உலகமே இன்புளூயன்சா வைரஸால் நடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் - இந்தியாவில் என்ன ஆனது? 1000 பேர் பாதிக்கப்பட்டால் 50 பேர் இறந்தனர். இதை நாம் ஆவணப்படுத்தத் தவறிவிட்டோம் . உலகப்போரைப் பற்றித் தெரிந்த மக்களுக்கு, இன்புளூயன்சாவைப்பற்றி அறியவில்லை. ஆனால் அமெரிக்காவில் - அது நர்சரிப் பாடலாக அறிவியல் மருத்துவம் போதிக்கப்பட்டது!
தொலைநோக்குப் பார்வை கொண்ட பெரியார் சொற்பொழிவில், “தோழர்களே ,1952ல் நமது சராசரி வயது 25 , இன்று 52 !! 2000 வருடம் வரும்போது நாம் 75 வயது இருப்போம். அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது- பல ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறான்!!” என்றார்.
தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் - எவ்வளவு ஆண்டுகள் ஆகும்? அதற்காக உழைப்பு என்ன? அதில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மருத்துவர்களின் தியாகத்தினை அறிய - இரு வல்லவர்களைப்பற்றி அறிந்து கொள்வோம்!!
“ அறிவறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி
உறுவ துல வெப்பச்செய்து - பெறுவதால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது!”
நன்கு கற்று அறிய வேண்டியதை அறிந்து, அடக்கம் உடையவராய் , அஞ்சக்கூடிய செயல்களுக்கு நாணி ஒதுங்கி நின்று, தமக்குத் தகுந்தவாறு உரிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்து- அதனால் மகிழ்கிறவர் , வாழ்க்கையில் துன்பம் என்பதே இல்லை!!
அந்த இருவல்லவர்களின் அர்ப்பணிப்பால், அறிவியல்சார், ஆதாரம் உடை மருத்துவத்தால் - இன்று உலகம் முழுதும் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக , மகிழ்ச்சியாக ஓடி விளையாடுகின்றன !!
குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசியிலே மிகச்சிறந்த தடுப்பூசி - போலியோ நோய் தடுப்பு மருந்தே! நாற்பது வயதிற்குக் கீழே உள்ளவர்களில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவரை தற்போது பார்ப்பதே அரிதாகி போனது! போலியோ நோயும் வைரஸ் தொற்றே!
இதனை அழித்த சாதனை மருத்துவர்கள் ஜொனஸ் சால்க் மற்றும் ஆல்பட்டு சாபின். இவர்களுடைய ஆராய்ச்சி இன்புளூயன்சா முதல் எச்ஐவி கிருமிவரை- கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆராய்ச்சி மருத்துவத்தில் நாளொன்றுக்கு 14 முதல் 18 மணிநேரம், தங்கள் ஆயுட்காலத்தின் பெரும்பகுதியை மனித இனத்திற்கு அரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
20 ஆம் நூற்றாண்டின் முதல்பாதி- வெயில் மற்றும் இளவேனிற்காலம், உலகில் அப்போது பிறந்த குழந்தைகளுக்கு வேதனைக்காலமாகவே இருந்தது. பகல் வேளையில் வெகுநேரம் விளையாட நேரம் கிடைத்ததால்- அவ்வேளைகளில் போலியோ வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போலியோவால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் முழுவதுமாக செயல் இழந்து போகக்கூடிய முடக்குவாதம் ( Paralytic Polio) ஏற்பட்டது! நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செயல் இழந்த கை கால்களுடன் வாழ்ந்தனர். மேலும் சிலர் உயிரிழக்க நேரிட்டது!!
மனிதக் கழிவுகளால் பரவும் இந்த வைரஸ் என்ற கண்டுபிடிப்பு , பல முன்னேற்றத்தை ஏற்படுத்தின.
அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் டிலானோ ரூஸ்வெல்ட், தன்னுடைய 39-ம் வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். நான்குமுறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர், அணுகுண்டினை ஜப்பான் மேல் வீசியவர் - ஆனால் வைரஸுக்கு இதைப் பற்றி ஒன்றும் அறியாது!!
அப்போது வருடத்திற்கு 25000முதல் 50000 மக்களை இந்த நோய் செயல் இழக்கச்செய்தது!
இந்த நோயின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சால்க் மற்றும் சாபின் - இவர்களின் ரஷ்ய பெற்றோர்கள், முதலாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் குடியேறியவர்கள்.
இவர்கள் இருவரும், தனித்தனி வழிமுறையிலேயே தங்கள் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டனர். மருத்துவர் ஜோனஸ் சால்க் சிறுவயதிலிருந்தே படிப்பில் சுட்டி. 1933 ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதிலேயே, நியூயார்க் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத் தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பம் முதலே மருத்துவ ஆராய்ச்சியில் மட்டும் கவனம். மருத்துவராகப் பணியாற்றினால் அமெரிக்காவில் நன்றாகப் பணம் கொழிக்கும் என்று அறிந்திருந்தும் , ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக அர்ப்பணித்தார்.
1939 ஆம் ஆண்டு , தேசிய ஆராய்ச்சி மையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மருத்துவர் சால்க்.அங்கு ஏற்கெனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுருந்த மருத்துவர் பிரான்சிஸ் உடன் ஆறு ஆண்டுகள், இன்புளூயன்ஸா வைரஸ் தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆறு ஆண்டுகள், கடுமையான உழைப்பின் பலனாக கொல்லப்பட்ட இன்புளூயன்சா வைரஸ் கிருமியிலிருந்து, தடுப்பூசியினை 1943 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்திற்கும் இந்த தடுப்பூசி பயனளித்தது! அதுவரை உயிருள்ள வைரஸ்கிருமியையே பலமிழக்கச்செய்து தடுப்பூசியாக பயன்பாட்டில் இருந்தது. அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால் - இந்த புதுவகை தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. உலகை அச்சுறுத்திய இன்புளூயன்சா கட்டுக்குள் வந்தது!
1947ஆம் ஆண்டு பிட்ஸ்பெர்க் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொறுப்பேற்றார் மருத்துவர் சால்க். அப்போது சவாலாக இருந்த போலியோ வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
1951 ஆம் ஆண்டு மூன்று வகை போலியோ வைரஸ் இருப்பதையும், கொல்லப்பட்ட வைரஸிலிருந்து தடுப்பூசி போதிய வீரியம் பெற , அதிக அளவு போலியோ வைரஸ் தேவைப்படுவதையும் அறிந்தனர்.
அதே சமயத்தில் மருத்துவர்கள் ஜான் என்டர், தாமஸ் வெல்லர், மற்றும் பிரடரிக் இராபின் தங்கள் ஆராய்ச்சியினால் போலியோ வைரஸை செயற்கை முறையில் வளர்க்கக்கூடியதை கண்டுபிடித்தனர். இதற்காக அவர்களுக்கு 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசும் பெற்றனர்.
இதனால் மருத்துவர் சால்க், போலியோ வைரஸை செயற்கைமுறையில் குரங்கின் சிறுநீரக செல்களில் வளர்க்க இயன்றது. போதிய அளவு போலியோ வைரஸை வளர்த்து, அதன் மூலம் கொல்லப்பட்ட போலியோ தடுப்பூசியினைக் கண்டுபிடித்தார்.
( ஸ்ஸ் கண்ண கட்டுதா- இதற்குப் பிறகுதான் கதையே ஆரம்பமாகிறது- ஒரே நாளில் மருந்து, தான் சொல்வதே மருந்து, சரியான நோயை, தன் மருந்தாலேயே குணமானது என்று யாரும் வியாபாரம் செய்ய இயலாது- பல கட்ட சோதனைகள் தாண்ட வேண்டும்)
இந்தத் தடுப்பூசியினை முதல்கட்ட சோதனையாக குரங்கின் மேல் செலுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களையும், நோய்தடுத்து எதிர்வினையாற்றும் ஆன்டிபாடி அளவினை ஆராய்ச்சி செய்தார்.
குரங்குகளை இந்தத் தடுப்பூசி காப்பாற்றியதையும், பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்தபிறகு -1952 ஆம் ஆண்டு , மனிதர்களிலே ஏற்கெனவே போலியோ பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. அவர்களின் நோய்தடுக்கும் ஆன்டிபாடி அளவினை ஆராய்ந்தார்கள்.சால்க் அவர்களின் உழைப்பு வீண் போகவில்லை, தகுந்த நோய்எதிர்ப்பு ஆன்டிபாடி உருவாகி இருந்தது.
1954 ஆம் ஆண்டு, அடுத்த கட்ட சோதனை தொடங்கியது. இம்முறை 20 லட்சம் குழந்தைகள் 6 முதல் 9 வயதிற்குள் இத்தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக ஆன செலவினை தேசிய போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகள் மையம் ஏற்றுக்கொண்டது.
மேலும் அமெரிக்கா முழுவதும் தன்னார்வளர்களை இரண்டு விதமாகப் பிரித்து -தடுப்பூசியும் , மருந்தே இல்லாத ஊசி - பிளாசிபோ ( Placebo) கொடுக்கப்பட்டது. அவர்களை மருத்துவர் சால்க் இடம்பெறாத மற்றொரு மருத்துவக்குழு ஆராய்ந்து - முடிவுகளை வெளியிட்டது. இந்தக் கொல்லப்பட்ட போலியோ தடுப்பூசி 90 சதவீதம் மக்களை - குறிப்பாக குழந்தைகளைக் காப்பாற்றும் என்பதை உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டனர்.
அதே வேளையில் மற்றுமொரு மனித இன காப்பாளி மருத்துவர் ஆல்பெர்ட் சாபின் பற்றி தெரிந்து கொள்வோம். இவரும் சால்க் போன்ற ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தவர். மருத்துவம் படிக்கும்போதே வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினார். அதனால் அவரின் மருத்துவப் படிப்பிற்கான பண உதவி செய்த சாபினின் உறவினர் , அதனை நிறுத்திக்கொண்டார். அதனால் அவர் பல்வேறு பகுதி நேர வேலைகளை மேற்கொண்டார்.
1928 ஆம் ஆண்டு நியூயார்க் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் நிமோனியாவைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
1931 ஆம் ஆண்டு லண்டனில் லிஸ்டர் நோய்த்தடுப்பு மையத்தில் தொடர் ஆராய்ச்சி செய்தார். பின்னர் அமெரிக்கா ராப்பெல்லர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பணியில் அமர்ந்தார். அங்கு போலியோ விடுத்த பல விடுகதைகளுக்கு விடை தேடினார்.
1936 ஆம் ஆண்டு - மனித கருவில்உள்ள மூளை நரம்பியல் திசுக்களில் போலியோ வைரஸ் வளர்வதைக் கண்டறிந்தார்.
தொடர் ஆராய்ச்சிக்கு இடைவெளியாக இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது!
மருத்துவர் சாபின் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அங்கேயும் கொசுவினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல், டெங்கு முதலிய நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஆராய்ச்சியினை தொடங்கினார்.
போர்முடிந்த உடன் சின்சினாட்டி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள்நல ஆராய்ச்சிப் பிரிவில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
அங்கு போலியோ நோயினால் இறந்தவர்களின் உடலினை - உடற்கூறு ஆய்வு செய்தார். பல வியத்தகு உண்மைகளைக் கண்டறிந்தார். உடற்கூறு ஆய்வில் போலியோ வைரஸ் குடல்பகுதியினை பாதித்த பின்னரே , நரம்பு மண்டலம் பாதிப்பதைக் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு, நரம்பு மண்டலம் இல்லாமல் மற்ற திசுக்களில் போலியோ வைரஸை வளர்க்கலாம் என்பதைக் காட்டியது.
இதே போன்ற ஆய்வினால் தான் மருத்துவக்குழு என்டர், வெல்லர், இராபின் நோபல் பரிசு பெற்றனர் என்று முன்னர் குறிப்பிட்டு இருந்தேன்.
மருத்துவர் சாபின், சால்க் போன்று இல்லாமல்- வலுவிழந்த உயிருள்ள வைரஸிலிருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும், ஊசிக்குப் பதில் சொட்டுமருந்து எளிதாக இருக்கும் என்பதனையும் - தன் குறிக்கோளாக வைத்திருந்தார். மூன்று வகை மாறுபட்ட ( Mutant) போலியோ வைரஸிலிருந்து எதிர்வினையாற்றும் ஆன்டிபாடி உற்பத்தியாவதும், அதனால் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார். முதலில் தனக்கும் , தன் குடும்பத்தாருக்கும் - இந்தத் தடுப்பு மருந்தினை உட்கொண்டனர். பின்னர் பக்கவிளைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்ற மருத்துவர்களுக்கும், அருகே இருந்த சிறைச்சாலையில் உள்ள தன்னார்வம் கொண்ட, கைதிகளுக்கும் இந்தத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது .
ஏற்கெனவே அமெரிக்காவில் மருத்துவர் சால்க்கின் கொல்லப்பட்ட போலியோ தடுப்பூசி நடைமுறையில் இருந்ததால், மருத்துவர் சாபினின் போலியோ சொட்டு மருந்திற்கான அமெரிக்க அரசாங்கத்திடம் சரியான வரவேற்பில்லை!
1957 ஆம் ஆண்டு மருத்துவர் சாபின் , சோவியத் ரஷ்யாவின் சுகாதாரத்துறையின் சம்மதத்துடன் - பல்வேறுகட்ட மனித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
1960-ல் சோவியத் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதனை முயற்சிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டதால் , அமெரிக்காவின் பொது சுகாதாரத்துறை - இந்தத் தடுப்பு மருந்தினை தயாரிக்க ஒப்புக்கொண்டது.
1962 ஆம் ஆண்டு உலக சுகாதாரத்துறை இந்தவகையான வலுவிழந்த உயிருள்ள போலியோ சொட்டு மருந்து சோவியத் ரஷ்யாவில் தயாரித்து , உலகமெங்கும் பயன்படுத்த முடிவு செய்தது. ஆனாலும் - மிக அரிதிலும் அரிதாக , இந்த வகை தடுப்பு மருந்து நோய் ஏற்படுத்தியது.
உலக சுகாதாரத்துறை 1994 ஆம் ஆண்டு - போலியோ வைரஸ் உலகில் பெரும்பான்மையான இடங்களில் அழிக்கப்பட்டதாக அறிவித்தனர். 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா - மருத்துவர் சால்க் கண்டுபிடித்த கொல்லப்பட்ட வைரஸ் தடுப்பூசியினை மீண்டும் ஆரம்பித்தனர்.
மருத்துவர் ஜோனஸ் சால்க் - நோபல் பரிசு வெல்லாவிட்டாலும் , அவரின் மாணவர்கள் ஐந்து பேர் நோபல் பரிசு வென்றனர். சால்க் கடைசிவரை - தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சியில் (எச்ஐவி தடுப்பு மருந்து ஆராய்ச்சி வரை) தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.
இப்போது, முதல் கேள்வியான கரோனாவிற்கான விடிவுகாலம் எப்போது? என்பதை இதைப் புரிந்து படித்தவர்கள் விடை அறிவர். மனித இனத்தின் காவலர்கள், மனித வாழ்வை மாண்புறச் செதுக்கிய சிற்பிகள் , தன் முயற்சியில் சற்றும் தளராத சித்தர்கள்- அறிவியல் சார், சான்றுசார் ( Scientific Evidence based) மருத்துவ ஆராய்ச்சிகளால் - மனித குலம் தழைத்தோங்க காரணமாக இருக்கிறனர் .
இந்தவகை மருத்துவத்தை அந்நியப்படுத்தும் முயற்சிகள் பல !! பல திடீர் மருந்துகள் சான்றுசார் ஆராய்ச்சிகளின்றி பெரும் நிறுவனங்கள் கொண்டுவரும் போது - தடுப்பு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் ஸோனஸ் சால்க் , அதற்கான காப்புரிமையை -பலர் வற்புறுத்தியும் வாங்கவில்லை. காப்புரிமை வாங்கி இருந்தால் , அவருக்கு 7 பில்லியன் டாலர்களைப் பெற்றிருப்பார். அதாவது 700 கோடி டாலர்கள்-அதாவது இந்திய மதிப்பின்படி 49,000 கோடி ரூபாய் .
“நமது மிகப்பெரிய கடமை - நல்ல மூதாதையர்களாக இருப்பதே”.
-மருத்துவர் ஜோனஸ் சால்க்.
- மரு.சேகுரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT