Published : 28 Jun 2020 12:45 PM
Last Updated : 28 Jun 2020 12:45 PM
கரோனா தடுப்புக்கும், சிகிச்சைக்கும் மருந்து கண்டறியும் ஆராய்ச்சி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் எவர்க்கும் மனதளவில் நன்மருந்தாக இருந்துவருவது கர்நாடக இசை உள்ளிட்ட நல்லிசை.
மருத்துவமனைகளில் டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வருவது மாதிரி, முகநூல் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் தளங்களில் கடந்த நூறு நாள்களாக சுபஸ்ரீ தணிக்காசலம் நடத்திவரும் 'quarantine from reality' என்ற நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பலர். பிரமாதமான, அதிகம் பிரபலமாகாத அன்றைய திரைப்படப் பாடல்களை தேர்வு செய்து, அதன் சுருக்க வரலாறு சொல்லி, இன்றைய இளம் பாடகர்களை சுபஸ்ரீ பாட வைப்பது ஒருவகை ' சிகிச்சை'தான்!
இது ஒரு பக்கம். ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதம் முதல் இதுநாள் வரை கர்நாடக இசைக் கலைஞர்கள் பலரும் சோஷியல் மீடியாக்களில் இசை ' சேவை ' புரிந்து வருகிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடின்றி யாராவது ஒருவர் முகநூலிலோ, இன்ஸ்டாவிலோ தோன்றி பாடி வருகிறார்கள். சீனியர்கள் சிலர் தங்களின் பழைய கச்சேரிகளின் பதிவுகளை பரணிலிருந்து தூசித்தட்டி எடுத்து தினமும் ஒன்றாக பதிவேற்றம் செய்கிறார்கள். ஒருசில சபாக்களும் தங்கள் archives-களிலிருந்து தினம் ஒன்றாக முழுக்கச்சேரியை முகநூலில் ஒளிப்பரப்புகிறார்கள். மருத்துவர்கள் க்ளீனிக் வைத்து நடத்துவது மாதிரி சங்கீதக் கலைஞர்கள் நடத்திவரும் இசை முகாம்கள் இவை!
இப்படி கொத்துக் கொத்தாக பாடகர்கள் பலரும் பாடிப் பரவசப்படுத்தியும் அமைதிப்படுத்தியும் வரும் வேளையில் புதுசாக ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்திருக்கிறார்கள் பிரபலப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்.
ஸ்மார்ட் போனை செல்பி மோடில் வைத்து குளோசப்பில் தோன்றி ஒரு பாட்டு பாடிவிட்டு வேறுவேலைப் பார்க்க சென்றுவிடாமல், முழுக் கச்சேரியை புதுசாகப் பாடி பதிவேற்ற விரும்பியிருக்கிறார்கள் ராகா சகோதரிகள். இதற்கு முன்னோட்டமாக, தங்கள் வீட்டு மொட்டைமாடியை கச்சேரி மேடையாக்கிக் கொண்டார்கள். தோட்டாதரணி செட் போட்ட மாதிரி பின்னணியில் பூக்கள் பூத்துக் குலுங்க, இலைகள் தாலாட்ட, இருவரும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பக்கவாத்தியம் எதுவுமின்றி உயர்ந்த, விறுவிறுப்பான சங்கீதம் கொடுத்து அசத்தினார்கள். Voncerts.com-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு இது இலவசமாக வழங்கப்பட்டது - டாக்டர்கள் தரும் சாம்பிள் மாத்திரைகள் மாதிரி!
பாட்டு சகோதரிகளின் அடுத்த முயற்சி, ' வர்ஷய வர்ஷய '. இந்தமுறை எல்.ராமகிருஷ்ணன் வயலின், சாய் கிரிதர் மிருதங்கம் என்று பக்கவாத்திய கூட்டணியுடன்.
ஒருமணி நேரம், 40 நிமிடங்கள் நடக்கும் முழுநேரக் கச்சேரி இது. நாரதகான சபா சிற்றரங்கில் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆடியன்ஸ் ஒருவரும் கிடையாது. எனவே, பாட்டுக்குப் பாட்டு, ஸ்வரத்துக்கு ஸ்வரம் கைத்தட்டல்களும் கிடையாது. கச்சேரி முடிந்ததும் மாமூலான standing ovation கிடையாது! துல்லியமான ஒலி - ஒளி அமைப்புடன் கூடிய ஒரு தவம் மாதிரியான கச்சேரி இது.
கேதாரம் ராகத்தில் ' சிதம்பரம் நடராஜம் ' என்று தொடங்கும் தீட்சிதர் பாடலில் ஆரம்பித்து மீரா பஜனில் முடிகிறது. நடுவே, ரஞ்சனி ராகத்தில் ராகம் தானம் பல்லவி. ' ஆயுள் ஆரோக்கிய வரம் வர்ஷய..... வர்ஷய' என்று தன்வந்தரியை வேண்டும் விதமாக பல்லவி வரிகள் இந்த கரோனா நாட்களுக்குப் பொருத்தமாக.
Voncerts.com- ல் நுழைந்து மிக்சர் மென்றுக் கொண்டே 30 நாட்களுக்குக் கேட்டு மகிழலாம். கரோனாவையும் முழு ஊரடங்கையும் மறக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT