Published : 27 Jun 2020 02:28 PM
Last Updated : 27 Jun 2020 02:28 PM
மதுரையின் முக்கியமான பகுதிகளில் எல்லாம் கரோனா விழிப்புணர்வு விளம்பரம் ஒலிப்பெருக்கியில் அலறிக் கொண்டிருக்கிறது. 'வைட்டமின் சி மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்' என்று விடாமல் பிரச்சாரம் செய்கிறது அரசு. ஆனால், மதுரை அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மாத்திரைகள் கிடைப்பதில்லை என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
சென்னை மண்டலத்துக்கு அடுத்தபடியாக இப்போது மதுரை வட்டாரத்தில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக இருக்கிறது. சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை நாடினால், முதலில் மார்பகப் பகுதியை எக்ஸ்ரே எடுக்கிறார்கள். நுரையீரலில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தெரிந்தால் மட்டுமே கரோனா பரிசோதனைக்குப் பரிந்துரைக்கிறார்கள். அப்படி இல்லாதபட்சத்தில் வழக்கமான காய்ச்சலுக்குக் கொடுக்கும் பாரசிட்டமால் போன்ற மருந்துகளுடன் ஜிங்க் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகளை மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள்.
ஆனால், மருந்துச் சீட்டுடன் மருந்து விநியோகிக்கும் இடத்துக்குச் சென்றால் “வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் இங்கே ஸ்டாக் வருவதே இல்லை. இந்த மாத்திரைகள் அனைத்தும் கரோனாவுக்கான சிறப்பு மருத்துமனைக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் வெளியில் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி மருந்துச் சீட்டில் ஜிங்க் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகள் மீது NA (not available) என்று எழுதி அனுப்பிவிடுகிறார்கள். நான் கரோனா சிறப்பு மருத்துவமனையில் வாங்கிக் கொள்கிறேன் என்று நோயாளிகள் கேட்டால், “அதற்கு நீங்கள் அங்கே புதிய சீட்டுப் பதிய வேண்டும். நோய்த் தொற்று உறுதி செய்யப்படாமல் உங்களைச் சிறப்பு மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்" என்று பதிலளிக்கிறார்கள்.
மருந்தகத்தில் இல்லாத மருந்தை மருத்துவர்கள் ஏன் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று கேட்டால், "நீங்கள் வேண்டுமானால் டீனைப் பார்த்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று வெடுக்கென பதில் வருகிறது.
இந்தப் பிரச்சினையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீனின் கவனத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்றால் அவர் நம்மைச் சந்திக்கக்கூடத் தயாராக இல்லை. உதவியாளர் மூலம், "வந்து கொண்டிருக்கிறது. இன்னும் அரைமணி நேரத்தில் அனைவருக்கும் மாத்திரைகள் கிடைக்கும்" என்று பதில் சொல்லி அனுப்பினார் டீன்.
பிறகு ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பே, சம்பந்தப்பட்ட மாத்திரைகள் கரோனா சிறப்பு மருத்துவமனையில் இருந்து கொண்டுவந்து தரப்பட்டன. அதற்குள்ளாக பல நூறு நோயாளிகள் மாத்திரைகளை வாங்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டனர்.
கரோனாவை ஒழிப்பதில் கண்ணும் கருத்துமாகப் போராடுவதாகச் சொல்லும் அரசு, கரோனா வரும் முன்பே அதைத் தடுப்பதற்கான இதுபோன்ற முன்முயற்சிகளிலும் முழுக்கவனம் செலுத்தினால் நல்லது.
-கே.விக்னேஷ்வரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT