Published : 26 Jun 2020 08:40 PM
Last Updated : 26 Jun 2020 08:40 PM
உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ சகமனிதனை வதைக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. எல்லா நாட்டின் சட்டங்களும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு அளிக்கும் உத்தரவாதம் அது. சொல்லப்போனால் சட்டங்களின் அடிப்படை சாராம்சமே அதுதான். இருப்பினும், சட்டத்தின் பாதுகாவலர்களால் இந்த அடிப்படை உத்தரவாதம் தொடர்ந்து மீறப்படுகிறது. வளர்ந்த நாடு, வளரும் நாடு, வளராத நாடு என்றெல்லாம் இதற்குப் பாரபட்சம் இல்லை. எல்லா நாட்டிலும் இதுவே நிலை.
அமெரிக்காவில் நிகழ்ந்த கொடூரம்
அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட், காவல்துறையின் கொடூரத் தாக்குதலில் சிக்கி சமீபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த உலகின் மனசாட்சியை உலுக்கியது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயைப் போன்று பரவிய அந்தத் தாக்குதல் வீடியோ, போலீஸ் அதிகாரி தங்களுடைய பூட்ஸ் கால்களால் ஜார்ஜின் கழுத்தை மிதித்துக் கொன்றதை வெட்டவெளிச்சமாக்கியது. நிறம், இனம், மதம், தேசம் போன்ற பாகுபாடுகளை எல்லாம் கடந்து, அமெரிக்கா முழுவதும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. கரோனா பரவலின் வீரியம் அங்கே உச்சத்திலிருந்தும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, அமெரிக்க மக்கள் ஒன்றுகூடி, சமூக இடைவெளியைப் பின்பற்றியபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, அந்நாட்டின் அதிபர் வெள்ளைமாளிகையின் பதுங்கு அறையில் சில மணிநேரம் பதுங்க நேரிட்டது. இத்தகைய தாக்குதலைக் கண்டிக்க வேண்டிய அதிபரோ, 8 ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்பினத்தவர் ஒருவர் ஒரு வெள்ளையரைத் தாக்கிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, இதற்கு ஏன் யாரும் போராடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். நிறவெறியில் ஊறிக்கிடக்கும் மனிதரை, அதிபரைக் கொண்டிருக்கும் நாட்டில், கறுப்பினத்தவருக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
இதற்கு நம் நாடும் சற்றும் சளைத்ததில்லை என்பதை நடப்புச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தரமணியில், கையூட்டு அளிக்க மறுத்த காரணத்துக்காகக் காவல்துறையினரின் கீழ்த்தரமான வசவுக்கு உள்ளான கால் டாக்ஸி ஓட்டுநர், பட்டப்பகலில், அனைவரும் கண்முன்னே தன்னைத் தானே பெட்ரோலால் எரித்து மாய்த்துக்கொண்டார்.
சாத்தான்குளத்தில் நிகழ்ந்த மரணங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை தூத்துக்குடியின் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜும் அவருடைய மகன் பென்னிக்ஸும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கரோனா லாக்டவுன் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி தங்களது மொபைல் போன் கடையைத் திறந்து வைத்திருந்ததே அவர்கள் புரிந்த குற்றம். வெறும் வழக்கிலோ அபராதத்திலோ முடிய வேண்டிய அந்தக் குற்றத்துக்காக அவர்கள் தங்களுடைய உயிரையே இழந்துள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவர்கள் மீது மனிதாபிமனற்ற கொடூரத் தாக்குதலைக் காவல்துறையினர் நடத்தியதாக அவர்களுடைய குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். “இது இரட்டைக் கொலை. வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்புறுத்தல் நடந்துள்ளது. ஒரு பெண்ணாக அது குறித்து என்னால் விவரிக்கக்கூட முடியாது” என்று ஜெயராஜின் மகள் பெர்சிஸ் அழுகையுடன் தெரிவித்துள்ளார்.
மகனின் கண்முன்னால் தாக்குதலுக்கு உள்ளாகும் தந்தையின் மனநிலையையும், அதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் மகனின் மனநிலையையும் அதனால் நேரும் மனவேதனையும் நம் கற்பனைக்கும் எட்டாத ஒன்று. நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்களுடைய ஆசன வாயிலிருந்து ரத்தம் நிற்காமல் வடிந்ததாக அவர்களுடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். பரிணாம வளர்ச்சியால் மனிதன் தோன்றினானா அல்லது பரிணாம வீழ்ச்சியால் மனிதன் தோன்றினானா என்ற சந்தேகத்தைக் காவல்துறையினரின் இந்தக் கொடூரத் தாக்குதல் எழுப்புகிறது. இத்தகைய தாக்குதலைக் கண்டிக்க வேண்டிய முதல்வரோ, அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர் என்று பிரேதப் பரிசோதனை நடப்பதற்கு முன்பே அறிவித்து, வக்கிரம் பிடித்த அவர்களின் செயல்களின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்கிறார்.
ஸ்டெர்லைட் படுகொலை
லாக்கப் மரணங்களும் காவல்துறையினரின் அத்துமீறல்களும் நமக்குப் புதிதல்ல. சொல்லப்போனால் வெள்ளையரின் ஆட்சியில் நிகழ்ந்த அத்துமீறலுக்கு இணையானது அது. 1999-ல் வெறும் 30 ரூபாய் ஊதிய உயர்வைக் கோரி போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், 2019 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தன்னிச்சையாக ஒன்றுகூடிப் போராடிய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குச் சற்றும் குறைந்தது அல்ல என்றால் அது மிகையல்ல.
காவல்துறையினரின் தாக்குதலுக்குப் பயந்து மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் 18 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர். இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டைச் சமாளிக்க அரசாங்கமே காரணத்தைத் தேடிக்கொண்டிருந்த சூழலில், வெற்றிடத்தை நிரப்பி முதல்வராகும் கனவிலிருக்கும் நமது உச்ச நடிகரோ, போராட்டக்காரர்களைத் தீவிரவாதிகள் என்று கூறி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் மட்டும் சற்று சூதானமாக நடக்காமலிருந்திருந்தால், அதனால் நேர்ந்திருக்கும் விளைவுகளை நினைத்துப் பார்க்கக்கூட அச்சமாக உள்ளது.
கடுமையான தண்டனை தேவை
அதிகாரம் என்பது ஒருவித போதை. மனத்தளவில் சமநிலையை வாய்க்கப்பெற்ற ஒருவரால்தான் அந்தப் போதையைத் திறம்படச் சமாளிக்க முடியும். அதிகாரத்திலிருப்பவர்களின் சமநிலையைப் பேணுவதற்கு மனநல மருத்துவர்களின் துணையுடன் தகுந்த பயிற்சியை அரசு வழங்க வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், இதுபோன்ற அத்துமீறல்களும் துர்பாக்கிய மரணங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
சொல்லப்போனால், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த மரணங்களுடன் தொடர்புடைய அதிகாரி, ஏற்கெனவே இது போன்ற சில நிகழ்வுகளுடன் தொடர்புடையவராக இருந்திருக்கிறார். அப்போதே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தாலோ தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்பட்டு இருந்தாலோ, தற்போது மரித்துப் போன தந்தையும் மகனும் நம்மோடு உயிருடன் இருந்திருப்பார்கள்.
சீஸரின் மனைவி எப்படிச் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமோ, அதே போன்று அதிகாரத்தில் இருப்பவர்களும் சட்டத்தைக் காக்கும் பொறுப்பிலிருப்பவர்களும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை சாமானியர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைவிடக் கடுமையானதாக இருக்க வேண்டும். வெறும் பணி இடை நீக்கத்துடன் அந்தத் தண்டனை சுருங்கிவிடக் கூடாது. உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இது முக்கியமாகக் காவல்துறையினருக்குப் பொருந்தும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
கைது செய்யப்படும் நபர்களை கையாளும் விதம் பற்றி உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. காவல்துறையில் பணிபுரியும் கீழ்நிலை பணியாளர்களுக்கு அது தெரியாது இருக்கலாம். ஆனால், உயர்மட்ட அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அது அறியாமல் போனது எப்படி? உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டிருந்தால், இந்த துர்சம்பவம் நேர்த்திருக்காதே? உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி இனியாவது அரசு செயல்பட வேண்டும். அதற்கு இரு உயிர்கள் அநியாயமாக காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
0
0
Reply