Published : 26 Jun 2020 10:49 AM
Last Updated : 26 Jun 2020 10:49 AM
கரோனா ஊரடங்கால் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் பெரும்பாலும் முடங்கியுள்ளன. ஆங்காங்கே தனிப்பட்ட இசை சேர்க்கும் பணிகள் சின்ன திரை தொடர்களுக்காக நடந்தாலும், திரைப்படத்துக்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கவில்லை. சென்னை, சாலிகிராமத்தில் இருக்கும் இசைக் கலைஞர்கள் உதயகுமார் – நின்ஸி தம்பதி இந்த ஊரடங்கு காலத்திலும் மனதுக்குப் பிடித்த பாடல்களை கவர் வெர்ஷனாக வெளியிடுவதிலும் தனிப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணிகளிலும் கவனம் செலுத்துவருகின்றனர். இந்தப் பணிகளுக்காக `ட்ரீம் மியூசிக்’ எனும் யூடியூப் சேனலையும் தொடங்கியிருக்கின்றனர். இசைத் துறையில் இதுவரையிலான தன்னுடைய பயணத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நின்ஸி வின்சென்ட்.
“எனக்கு சொந்த ஊர் கேரளத்தின் கொல்லம். என்னுடையது இசைக் குடும்பம். அப்பா தபேலா வாத்தியக் கலைஞர். அம்மாவும் அக்காவும் பாடகிகள். சிறுவயதில் அப்பாவின் ஆர்கெஸ்ட்ராவில் பாடத் தொடங்கினேன். ஆறாவது, ஏழாவது படிக்கும் போது நிறைய மேடைக் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தேன். 3,500 மேடைக் கச்சேரிகள் செய்திருப்பேன். பின்னணி பாடுவதற்கான முயற்சிகள் செய்வதற்காகவே அங்கிருந்து குடும்பத்தோடு சென்னைக்கு வந்தோம்.
இசை ஞானியால் அறிமுகம்
இளையராஜா இசைக் குழுவில் வாசிக்கும் கலைஞர்களோடு என்னுடைய தந்தைக்கு நல்ல நட்பு இருந்தது. அதிலும் குறிப்பாக கிதாரிஸ்ட் சந்திரசேகரன், டிரம்மர் புருஷோத்தமன் ஆகியோருக்கு எங்கள் குடும்பத்தோடு 25 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு இருந்தது. அவர்கள் எனக்கு நிறைய ஆலோசனைகள் தருவார்கள். பாடுவதில் இருக்கும் நுட்பங்களை சொல்வார்கள். அவர்கள்தான் என்னை இளையராஜா சாரிடம் ஆடிஷனுக்கு அழைத்துப் போனார்கள். ஆடிஷன் பாடியதுமே என்னுடைய குரல் சாருக்கு பிடித்துவிட்டது. உடனே ஒரு பாடலை பாடுவதற்கு வாய்ப்பும் கொடுத்தார். 2008ல் வெளிவந்த `ஜகன்மோகினி’ என்னும் படத்தில் ராகுல் நம்பியாருடன் நான் பாடிய டூயட்தான், பின்னணிப் பாடகராக என்னை அறிமுகப்படுத்திய முதல் பாட்டு. `கட்டிக்கிட்டா ராசாவத்தான்’ என்பதுதான் அந்தப் பாட்டு. அதன் பிறகு இளையராஜா சாரின் இசையமைப்பில் வெளிவந்த ஐந்து படங்களில் பின்னணி பாடல் பாடியிருக்கிறேன். இளையராஜா சாரின் இசையில் பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆனதைத்தான் என் வாழ்க்கையில் சிறந்த தருணமாக நினைக்கிறேன்.
ஹிட்டடித்த ரெடி!
நிறைய இசையமைப்பாளர்களுக்கு அதன்பிறகு நான் பாடத் தொடங்கினேன். ஹாரிஸ் ஜெயராஜ் சாருக்கு `வாரணம் ஆயிரம்’ படத்திலிருந்து `பேக்கிங்-வோகல்ஸ்’ கொடுத்திட்டு இருக்கிறேன். `வாரணம் ஆயிரம்’ படத்திலேயே நிறைய `சோலோ பிட்ஸ்’ பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். முக்கியமாக `கால் முளைத்த பூவே…’ பாட்டில் வரும் `சோலோ’ நான் பாடுவதுதான்.
தேவி க்ஷிரிபிரசாத், எஸ். தமன், ஷிகாந்த் தேவா, தாஜ்நூர் எனப் பல இசையமைப்பாளர்களின் இசையிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 150 படங்களில் பாடியிருக்கிறேன். சாம் சி.எஸ். இசையமைப்பில் தெலுங்கில் வெளிவந்த `லஷ்மி’ படத்தில் `ட்ரீமி சின்னாரி’ என்னும் பாடலைப் பாடினேன். அண்மையில் `ரெடி ரெடி ஐயாம் ரெடி’, `தேவி-2’ படத்தில் சாம் சி.எஸ். இசையில் பாடியிருக்கிறேன். அது பெரிய ஹிட்.
புகழ் பரப்பிய `ஜாஸ்மின்’
டிஸ்னி படங்களுக்கு பின்னணி பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து `அலாதீன்’ படத்தை தமிழில் வெளியிடுவதற்கு திட்டமிட்டனர். டிஸ்னியில் இருந்து நேரடியாக குரல் தேர்வுக்கு வந்திருந்தனர். `ஜாஸ்மின்’ கதாபாத்திரத்துக்கு ஆடிஷனுக்கு வந்திருந்த யாருடைய குரலும் பொருந்தவில்லை. ஏற்கெனவே நான் டிஸ்னியில் பாடிக் கொண்டிருந்த விவரம் தெரிந்து என்னையும் ஆடிஷனுக்கு கூப்பிட்டார்கள். அதன்பிறகு நிறைய திருத்தங்களை சொல்லியும் மெருகேற்ற வைத்தும் என்னை பின்னணி பாட வைத்தார்கள். `ஜாஸ்மின்’ பாத்திரத்துக்காக முழுமையாக நான் மட்டுமே பாடினேன். அது என்னுடைய புகழை உலகம் முழுவதும் பேசவைத்தது. இந்தப் பயிற்சியால் `லயன் கிங்’ தெலுங்கில் பாடுவதற்கு எனக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. தெலுங்கில் `லயன் கிங்’ படத்தில் `நாலா’ எனும் கதாபாத்திரத்துக்கும் பாடினேன்.
இசையே கனவு!
திரைப்படங்கள், சீரியல்கள், பக்திப் பாடல்கள் என எல்லாம் சேர்த்து 250 பாடல்கள் வரை பாடியிருப்பேன். ஊரடங்கு தொடங்கும் போது எதுவும் பெரிதாக திட்டம் இல்லை. ஊரடங்கால் எனக்கு பாடுவதற்கு வரும் வாய்ப்புகளை எங்களின் ஸ்டுடியோவிலேயே பாடி அனுப்பிவிடுகிறேன். அதனால் நேரம் நிறைய கிடைத்தது. அதை பயனுள்ள வகையைில்
பயன்படுத்திக் கொள்ளலாமே என `ட்ரீம் மியூசிக்’ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறோம். இப்போதைக்கு பிரபல பாடல்களின் கவர் வெர்ஷனை அதில் பதிவேற்றிவருகிறோம். ஒவ்வொரு கான்செப்டிலும் ஒரு ஆல்பம் சாங் செய்யும் எண்ணமும் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT