Last Updated : 08 May, 2014 11:19 AM

 

Published : 08 May 2014 11:19 AM
Last Updated : 08 May 2014 11:19 AM

மனதுக்கு இல்லை வயது!: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை

ஏழைகள் ரதம் (கரீப் ரத்) ரயில் தவிர, அனைத்து ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு. இது ஆணுக்கு 40 சதவீதமும், பெண்ணுக்கு 50 சதவீதமும் வழங்கப்படுகிறது. ரயில் கட்டண சலுகைக்கான தகுதிகள், கட்டணத்தில் எவ்வளவு சலுகை, நிபந்தனைகள் போன்ற விபரங்கள் ரயில்வே கால அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை ஆணாக இருந்தால் 60 வயது மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்கள், பெண்ணாக இருந்தால் 58 வயது மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்கள், சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த சலுகை அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராஜ்தானி, சதாப்தி, ஜனசதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களில் உண்டு. ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும் ’கரீப் ரத்’ ரயிலில் மட்டும் கட்டண சலுகை கிடையாது. அதேபோல் முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

மூத்த குடிமக்கள் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸில் 2-வது மாடியிலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் தரைத்தளத்திலும் சிறப்பு கவுன்ட்டர்கள் உள்ளன. தவிர அனைத்து நகரம், மாநகரங்களின் ரயில் நிலையங்களிலும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் இருக்கின்றன.

மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகையுடன் ரயிலில் பயணம் செய்யும்போது, அரசு நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் வழங்கியுள்ள அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், பான் கார்டு, பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வழங்கியுள்ள சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால், முழு கட்டணத்தில் சலுகைக் கட்டணம் போக மீதித் தொகையை ரயில் டிக்கெட் பரிசோதகர் வசூலித்துவிடுவார்.

இ-டிக்கெட்டில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், மேற்கண்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றின் அசலை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும். தனியாகச் செல்லும் மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்காக ஒவ்வொரு இரண்டாம் வகுப்பு பெட்டி, மூன்றடுக்கு மற்றும் இரண்டடுக்கு குளிர்சாதன வசதியுள்ள பெட்டி ஆகியவற்றில் இரண்டு ’லோயர் பெர்த்’ இட ஒதுக்கீடு உண்டு.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தனக்கு “சீட்” வேண்டும் என்று கோரி டிக்கெட் எடுக்கும்போது, குறிப்பிட வேண்டும். மூத்த குடிமக்கள் இதற்கு தங்களது வயது சான்றையும், கர்ப்பிணிகள் அதற்கான மருத்துவச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x