Published : 24 Jun 2020 04:01 PM
Last Updated : 24 Jun 2020 04:01 PM
அமெரிக்காவில் 150 ஆண்டுகளுக்கு முன்பே அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இன்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் நிலையில்தான் இருக்கிறார்கள். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைக்குப் பிறகு அமெரிக்காவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இனவாதத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு போராட்டத்தில்தான் கேஷியா தாமஸின் செயல் உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்க வைத்தது!
1996, ஜூன் 22. அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் கு கிளஸ் கிளான் எனும் வெள்ளை மேலாதிக்க இனக்குழு ஒரு கூட்டத்தை நடத்தியது. பல்வேறு இன மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் முற்போக்கு எண்ணம் அதிகமாக இருந்தது. கு கிளஸ் கிளானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒன்று கூடினார்கள். அவர்களில் 18 வயது மாணவி கேஷியா தாமஸும் ஒருவர்.
போராட்ட முழக்கங்கள் அதிர்ந்தன. பதற்றமான சூழ்நிலை. இரு தரப்பையும் கட்டுப்படுத்துவதில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர் நாஜி டாட்டூவுடன் இனக்காழ்ப்பு சர்ச்சைகளில் பயன்படுத்தப்படும் அமெரிக்கக் கூட்டமைப்பின் கொடி அணிந்த சட்டையுடன் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் ஒரு பெண் போராட்டக்காரர், “கிளான் அமைப்பைச் சேர்ந்தவர் கூட்டத்திலிருக்கிறார்” என்று குரல் கொடுத்தார். உடனே அவரை நோக்கி கோபத்துடன் போராட்டக்காரர்கள் முன்னேறினர். அவர்களில் கேஷியா தாமஸும் இருந்தார். அந்த மனிதர் கீழே விழுந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் மீது விழுந்து பாதுகாத்தார், கேஷியா தாமஸ்.
“தனிப்பட்ட ஒருவரைக் கும்பலாகத் தாக்குவது தவறானது” என்று அந்தக் கூட்டத்தினரிடையே தெளிவாகக் குறிப்பிட்டார் கேஷியா தாமஸ். இந்த அரிய காட்சியை மாணவப் புகைப்படக்காரர் படம்பிடித்தார். இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. பல்வேறு நபர்களும் பத்திரிகைகளும் கேஷியா தாமஸின் செயலைப் பாராட்டின. புகழ்பெற்ற லைஃப் பத்திரிகையில் அந்த ஆண்டின் சிறந்த படமாகவும் வெளிவந்தது.
“நாங்கள் அந்த மனிதர் கிளான் அமைப்பைச் சேர்ந்தவர் என்று நம்புவதற்கு ஏற்ப அவரிடம் டாட்டூவும் கொடியும் இருந்தன. ஆனால், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். கும்பலாகச் சேரும்போது எல்லோருக்கும் வன்முறையில் ஆர்வம் வந்துவிடும். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இனப் பாகுபாட்டால் அதிகம் பாதிக்கப்படும் எங்களுக்குத்தான் அந்த வலி தெரியும். ஒருவரை இன்னொருவர் காயப்படுத்திக்கொண்டே இருந்தால் அதற்கு முடிவே இல்லை. அந்த வெறுப்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரும். அதனால்தான் முன்பின் தெரியாத அந்த மனிதரைக் காப்பாற்றினேன். சில மாதங்களுக்குப் பிறகு என்னை ஓர் இளைஞர் சந்தித்தார்.
தன் அப்பாவைக் காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தார். ஒரு மகனுக்கு அவனது அப்பாவைக் காப்பாற்றிக் கொடுத்ததில் கூடுதல் அர்த்தம் இருந்ததாகப் பட்டது. ஒருவேளை அந்தக் குடும்பத்துக்கு இனவாத எண்ணம் இருந்திருந்தால், இப்போது அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க செயலைச் செய்ய வேண்டும் என்பதில்லை. சக மனிதரிடம் கருணை காட்டினாலே போதும்” என்று தன் செயலுக்கான காரணத்தைத் தெரிவித்தார் கேஷியா தாமஸ்.
சம்பவம் நிகழ்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார். சமத்துவத்துகாகப் போராடுகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார், கேஷியா தாமஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT