Published : 23 Jun 2020 12:39 PM
Last Updated : 23 Jun 2020 12:39 PM
அவர்... எம்ஜிஆர் காலத்து நடிகர். எத்தனையோ எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் ஜெமினி, முத்துராமன் படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் வரும் காட்சிகளில், பெரிதாக அவரை எவரும் கவனிக்கக்கூட இல்லை. இத்தனைக்கும் நடிப்பார். அவரே பாடுவார். இப்படி எல்லாத் திறமைகளும் இருந்தாலும் படத்தில் சிறிய காட்சியில்தான் வந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் குரலில் வந்த ஒரு பாடல்... அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அப்படி உச்சிக்குச் சென்றவர்... டி.கே.எஸ்.நடராஜன்.
அதன் பிறகு பல பாடல்கள் டி.கே.எஸ்.நடராஜன் குரலில் தமிழகமெங்கும் ஒலித்தன. எண்பதுகளில் இவரின் பாடல்கள் ஒலிக்காத டீக்கடைகளே இல்லை. இதன் பின்னர், டி.கே.எஸ்.நடராஜன் பல கச்சேரிகள் செய்தார். பல மேடைகள் ஏறினார். தன் குரலால் தமிழக மக்களைச் சொக்கவைத்தார். இத்தனை வருட திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைக்காத பேரும்புகழும், செல்வாக்கும் பொருளாதாரமும் அந்த ஒருபாடலுக்குப் பிறகுதான் கிடைத்தன. அந்தப் பாடல்... ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’.
84ம் ஆண்டு, திரைப்படத்தில் நான்கு நிமிடப் பாடலாக இந்தப் பாட்டு வந்தது. இந்த நான்கு நிமிடப் பாட்டுதான், அப்போது தமிழகமெங்கும் ஒலித்தது. அப்போதெல்லாம் கோயில் திருவிழாக்களில், ஒருநாள் பாட்டுக்கச்சேரி நடக்கும். பொங்கல் விழாவில் பாட்டுக்கச்சேரியும் இடம்பெறும். இரவு 9 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவு ஒருமணி வரைக்கும் பாட்டுக் கச்சேரி நடைபெறும். வெட்டவெளியில் பனியையும் பொருட்படுத்தாமல் வாசிக்கும் பாடல்களை நேசிப்புடன் கேட்டு ரசிப்பார்கள் மக்கள்.
அதிலும், ஒவ்வொரு பாடலையும் அறிவிக்கும்போது அது ‘என்னடி முனியம்மா’ பாடலாக இருக்காதா? இப்போது அந்தப் பாட்டைப் பாடமாட்டார்களா என்று ரசிகர்கள் நகம்கடித்து தவிப்பார்கள். எப்போது பாடுவார்கள் என்று ஏங்கித் தவித்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்தப் பாடலுக்கான அறிவிப்பு வந்ததும், அந்த நள்ளிரவிலும் உற்சாகக் குரல் எழுப்புவார்கள். விசில் பறக்கும். கரவொலி அந்த இடத்தையே அதிரவைக்கும்.
‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ என்று பாட ஆரம்பிக்கும் போதே, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடத்தொடங்குவார்கள் ரசிகர்கள். பாடல் முடியும்போது பார்த்தால், ஏகப்பட்ட பேர் ஆடிக்கொண்டிருப்பார்கள். பல ஊர்களில், ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, இன்னொரு முறை பாடியதெல்லாம் வரலாறு.
இன்றைக்கும் ‘என்னடி முனியம்மா’ பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. எம்ஜிஆர், சிவாஜிக்குப் பின்னர், கமல், ரஜினி உட்பட பலரின் படங்களில் நடித்தார் டி.கே.எஸ்.நடராஜன். ஆனாலும், இந்த ஒரு பாட்டு, மிகப்பெரிய புகழைத் தந்தது அவருக்கு.
இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெயர் கூட ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ என்ற பாடல் இடம்பெற்ற படம்... ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’. சிவசங்கர் என்பவர் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். தேவிஸ்ரீதான் நாயகி. இந்தப் பாடலுக்கு ஆடியவர்களும் இவர்கள்தான். ஆனால், படம் ஓடவில்லை. தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ திரைப்படம் அமைந்தாலும், ‘என்னடி முனியம்மா’ பாட்டு மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ். மிக மிக எளிமையான வாத்தியங்களைக் கொண்டு, அசத்தியிருப்பார்கள். பயன்படுத்தப்பட்ட வாத்தியங்கள் அனைத்துமே, கிராமங்களில் வாசிக்கப்படும் எளிய வாத்தியங்கள் என்பது, இந்தப் பாடலை மக்களிடம் கொண்டுசெல்ல பெரிதும் உதவின. முக்கியமாக, டி.கே.எஸ்.நடராஜனின் குரல். நம்மூர்க் குரலாக, நம் குரலாக ஒலித்தது.
‘என்னடி முனியம்மா’ பாடல், பின்னர் பல வருடங்கள் கழித்து, அர்ஜுன் நடித்த படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
84ம் ஆண்டு வெளியானது ‘என்னடி முனியம்மா’ எனும் நாட்டுப்புறப் பாடல். இந்தப் பாடல் நமக்குக் கிடைத்து 36 வருடங்களாகிவிட்டன. இன்று வரை அந்தப் பாடலை மறக்கவில்லை. என்றைக்கும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT