Published : 22 Jun 2020 08:08 PM
Last Updated : 22 Jun 2020 08:08 PM
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தேநீர்க் கடை உரிமையாளர் சுரேஷ் கங்வாலின் மகள் ஆஞ்சல் கங்வால் இந்திய விமானப்படை அதிகாரியாகவும் விமானப் படைப் பயிற்சியில் ஒட்டுமொத்தமாகச் சிறந்து விளங்கியதற்காகக் குடியரசுத் தலைவர் பட்டயமும் பெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள துன்டிகல் விமானப் படை அகாடமியில் விமானப்படை படிப்பில் களப்பணிப் பிரிவில் பயிற்சி பெற்று வந்தவர் ஆஞ்சல் கங்வால். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆஞ்சல் கங்வாலின் தந்தை சுரேஷ் அப்பகுதியில் சிறிய தேநீர்க் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய இரண்டாவது மகள்தான் 24 வயதான ஆஞ்சல் கங்வால்.
பள்ளிக்காலத்தில் உருவான ஆசை
உத்தரகாண்ட் மாநிலம் கடந்த 2013-ம் ஆண்டு மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஆஞ்சல் கங்வால், தொலைக்காட்சி மூலமாகப் பாதுகாப்புப் படை வீரர்கள், விமானப்படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களைப் பாதுகாப்பாகக் காப்பாற்றுவதைக் கவனித்துள்ளார். இந்த நிகழ்வு ஆஞ்சலைப் பாதுகாப்புப் படையில் சேர்வதற்கான விதையை மனதில் ஊன்றியுள்ளது. படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய ஆஞ்சல் பள்ளியில் மாணவர் தலைவராக இருந்தவர்.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஆஞ்சல் கங்வாலுக்கு, நீமுச்சில் உள்ள சீதாராம் அரசுக் கல்லூரியில் படிக்க ஊக்கத்தொகை கிடைத்தது. இதனையடுத்து அங்கு கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு அரசு போட்டித் தேர்வுகளை எழுதத் தொடங்கினார். மத்தியப் பிரதேச காவல் உதவி ஆய்வாளர், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பதவிகளுக்கு அவர் தனித்தனியாகத் தேர்வெழுதினார்.
முதலில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்ச்சியான ஆஞ்சல், அடுத்த எட்டு மாதகால இடைவெளியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பதவிக்கும் தேர்வானார். “இரண்டு போட்டித் தேர்வில் நான் வெற்றி பெற்றாலும் என்னுள்ளே பாதுகாப்புப் படைப் பிரிவில் சேரவேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. ஆனால், இதற்குத் தயாராகக் காவல் ஆய்வாளர் பணிச்சூழல் கடினமாக இருக்கும் என்பதால் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பணியைத் தேர்ந்தெடுத்தேன். இத்துறையில் பணியாற்றிக்கொண்டே விமானப்படைப் பிரிவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தேன்” என்கிறார் ஆஞ்சல்.
மாநிலத்திலிருந்து தேர்வான ஒரே நபர்
ஆஞ்சல் கங்வால் நினைத்ததைவிட விமானப்படை நுழைவுத் தேர்வு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடர்ந்து ஐந்து முறை நுழைவுத் தேர்வை எழுதிய ஆஞ்சல் கங்வால் ஆறாவது முறை எழுதிய தேர்வில்தான் தேர்ச்சி பெற்றார். ஆறு லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் மொத்தம் 22 நபர்கள் மட்டுமே தேர்வாகினர். அவர்களில் ஐந்து பேர் மட்டும் பெண்கள் ஆவர். இதில் மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்வான ஒரே நபர் ஆஞ்சல் மட்டுமே.
“நான் பாதுகாப்புப் படையில் சேர விரும்புவதாகப் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் சற்று யோசித்தார்கள். ஆனால், என் விருப்பத்தை அவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் நிராகரிக்கவில்லை. அண்ணன், நான், தங்கை என எங்கள் மூவரையும் கடன் வாங்கித்தான் தந்தை சுரேஷ் கங்வால் படிக்கவைத்தார். எங்களுக்காகப் பல கஷ்டங்களைப் பெற்றோர் சந்தித்துள்ளனர். என் மீதான பெற்றோரின் நம்பிக்கையையும் என் லட்சியத்தையும் நிறைவேற்றுவதுதான் என் கனவாக இருந்தது. விமானப்படைப் பிரிவில் சேர்ந்து அதிகாரியாக வரவேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. தற்போது அந்தக் கனவு நனவாகியுள்ளது” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஆஞ்சல்.
இதுகுறித்துப் பேசிய ஆஞ்சல் கங்வாலின் தந்தை சுரேஷ் கங்வால், “இந்த ஊரில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்துவருகிறோம். ஆனால், பலருக்கும் என்னைத் தெரியாது. தற்போது என்னுடைய மகள் கம்பீரமான நீல நிற உடையில் விமானப்படை அதிகாரியாகத் தேர்வான பிறகு முகம் தெரியாத பலர் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
பொதுவாகப் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்கள் பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு விடுப்பில் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் விமானப் பயிற்சி முடித்த வீரர்கள் நேரடியாகக் களத்திற்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர். “தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக எந்த நேரத்திலும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் பயிற்சியில் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். இதனால் பெற்றோர்களுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற வருத்தமில்லை” என்று கூறி நாட்டைப் பாதுகாக்கப் பறக்கத் தொடங்கிவிட்டார் ஆஞ்சல் கங்வால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT