Published : 21 Jun 2020 03:41 PM
Last Updated : 21 Jun 2020 03:41 PM
‘தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன்’என மாறா இளமையுடன் திகழ்வதாகப் புகழப்படுபவர் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். இந்த 78 வயதில் அவரது ‘இளமையின் ரகசியம்’எதுவெனக் கேட்டதும் இத்தனை காலமாக செய்து வந்த ‘யோகா’என்கிறார். யோகக்கலையில் தனது 16-வது வயதில் தினசரி 38 ஆசனங்களைச் செய்யத் தொடங்கியவர் தற்போது ஒருசில ஆசனங்களை மட்டும் ‘செலக்டிவாக’ செய்வதாகவும் மூச்சுப் பயிற்சிக்கு முதலிடம் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரிடம் உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறமுடியுமா என்றதும் ரத்தினச் சுருக்கமாக பதில் வந்தது.
மூச்சுக்கு முதன்மை
“உடற்பயிற்சிக்கும் யோகப் பயிற்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சியைப் பொறுத்தவரை வியர்வை வெளிப்பட்டால்தான் பலன். ஆனால் யோகப் பயிற்சியைப் பொறுத்தவரை வியர்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. யோகப் பயிற்சி என்பதே மூச்சுப்பயிற்சியுடன் இணைந்த ஒன்று. உடலின் உள்ளேயிருக்கும் கழிவுகள் வியர்வை, சிறுநீர், மனிதக் கழிவு வழியே வெளியேறுகின்றன. அதேபோல் நமது மூச்சின் வழியான கரியமில வாயு வழியாகவும் கழிவு வெளியேறுகிறது. ஆனால் இதில் மிக உன்னதமானது, உடலுக்கு அதிக பலனை அளிக்கக்கூடியது நமது மூச்சு வழியே வெளியேறும் கழிவுதான். எனவே மூச்சுப்பயிற்சிலிருந்து யோகாவைச் செய்வது நல்ல பலன் அளிக்கும். அதன்பிறகு யோகாவுக்கு உடலைத் தயார்படுத்தும்விதமாக சில ‘ப்ளோர் எக்சர்சைஸ்’களைச் செய்துவிட்டு, அவரவர் உடல், தேவை ஆகியவற்றைப் பொறுத்து யோகாக்களை செலக்டிவாகத் தேர்வு செய்துகொள்வது நலம்.
65 வயதைக் கடந்தவர்கள் கடினமாக யோகாக்களைச் செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால் 65 வயது தொடங்கி கால், கை உள்ளிட்ட எலும்புகள் கடினப்பட்டுப் போயிருக்கும். அந்தச் சமயத்தில் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கும் சில யோகாக்களைச் செய்வது சரியல்ல என்று பல அனுபவமிக்க யோகா குருக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்” என்கிறார்.
வாழ்க்கையில் நுழைந்த யோகா
“கோவை மாவட்டத்தில் மிகச்சிறிய குக்கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த பத்தாவது மாதத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அப்பா விட்டுச் சென்றிருந்த 8 ஏக்கர் மானாவாரி நிலத்தில் பாடுபடுவதற்காக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனது அக்காவைப் பள்ளியிலிருந்து நிறுத்துவிட்டார் அம்மா. ஒரு பவுன் 12 ரூபாய் விற்ற அந்தக் காலத்தில், கழனியில் அரும்பாடுபட்டு உழைத்துக் கிடைத்த பணத்தில் எனது அம்மா என்னைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்து ஆளாக்கிச் சென்னைக்கு அனுப்பினார். சென்னை வந்து நான் ஓவியனாகவும் பின்னர் திரையுலகில் ஒழுக்கமும் கடமையும் தவறாத நடிகனாக உயர முடிந்தது என்றால் அதில் எனது தாய், சகோதரியின் தியாகத்துக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ அதே அளவுக்கு என் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் யோகக் கலைக்கும் பெரிய பங்கிருக்கிறது.
சென்னையில் ஓவியனாக இருந்தபோது எனக்கு யோகா குரு கிடையாது. பிரபல வார இதழில் யோகக் கலை பற்றி வாராவாரம் படத்துடன் கட்டுரை வெளியிடுவார்கள். அவற்றைத் தேதிவாரியாக எடுத்துக் கோத்து ஒரே புத்தகமாக பைண்ட் செய்து கன்னிமாரா நூலகத்தில் வைத்திருந்தார்கள். அங்கே உறுப்பினராகச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதைப் பார்த்துத்தான் ஒவ்வொரு ஆசனமாகப் பழக ஆரம்பித்தேன். நான் குரு இல்லாமல் செய்யத் தொடங்கிய சில மாதங்களில் அதிக பலன் கிடைப்பதை உணர்ந்தேன். பிறகு குருவின் வழிகாட்டுதலுடன் கற்றுக்கொண்டபோது எனது உடலும் மனமும் வலிமை பெற்றன.
பல புகழ்பெற்ற கோயில்களுக்கு நடந்தே சென்று சென்று 5 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை ஒரே இடத்தில் தண்ணீர் கூடக் குடிக்காமல் அமர்ந்து ஒரே மூச்சில் கோயில் ஓவியங்களை வரைந்து முடித்திருக்கிறேன். அதற்கான வலிமையை எனக்குக் கொடுத்தது யோகாதான். யோகா செய்தால் தன்னிச்சையாக 8 என்ன 10 தம்ளர் தண்ணீர் குடிக்கலாம். குறைந்த நேரம் தூங்கினால் கூட ஆழ்ந்த தூக்கத்தை யோகா தரும். இதை நான் உணர்ந்து வந்திருக்கிறேன்” என்கிறார் இந்த பன்முகக் கலைஞர்.
* இங்கே வெளியாகியிருக்கும் ஒளிப்படங்கள் சிவகுமார் 10 ஆண்டுகளுக்கு முன் யோகா செய்தபோது எடுத்தவை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT