Published : 18 Jun 2020 02:59 PM
Last Updated : 18 Jun 2020 02:59 PM
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் கூட்டம் அலைமோதியது. இடையில் மது விற்பனை சற்று சரிந்தாலும் இன்று வரை பெரிதாகக் குறைந்தபாடில்லை.
ஆனால், பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின் கேரளத்தில் திறக்கப்பட்ட கள்ளுக்கடைகள், ஒரு மாதமாகியும் கூட்டம் இல்லாமல் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கள்ளுக்கடைகளில் விற்பனை மிகக் குறைவு. “தமிழகத்தில் கள்ளத்தனமாகக் கள் இறக்கப்பட்டு விற்பனையாவதும் இதற்கு ஒரு காரணம்’’ என்கிறார்கள் கேரள கள்ளுக்கடை வியாபாரிகள்.
கேரளத்தில் மாவட்டத்திற்கு சுமார் 400 கடைகள் வீதம் ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கள்ளுக்கடைகள் செயல்பட்டு வந்தன. ஒவ்வொரு கடையிலும் நாளொன்றிற்கு 200 லிட்டர் முதல் 300 லிட்டர் கள் விற்பனையாகி வந்தது. ஒரு லிட்டர் கள்ளின் விலை ரூ.90. இதன் மூலம் கடைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை தினமும் வியாபாரம் ஆனது. 2016-ல், மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் அறிவித்த நிலையில் கள் விற்பனை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது.
அதன் பிறகு ஒரு வருடம் கழித்து வியாபாரம் கொஞ்சம் சூடுபிடித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் விளைவாக சுமார் 1,500 கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. அதனால் எந்தந்தப் பகுதிகளில் கள்ளுக்கடை மூடப்பட்டதோ, அதையடுத்துள்ள கடைகளில் ஏற்கெனவே நடந்த வியாபாரம் கூடியது. அதே நேரத்தில், பூட்டப்பட்ட கள்ளுக்கடைகளுக்கு மாற்று இடம் கிடைக்காமல் கள்ளுக்கடை ஏலம் எடுத்தவர்கள் தவித்தனர். அதுவும் தளர்த்தப்பட்ட பிறகு, கள் வியாபாரம் கடந்த ஆண்டு ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியது.
இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாகக் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன. கடந்த மாதம் மதுக்கடைகளுக்குப் பொதுமுடக்கத்திலிருந்து தளர்வு அறிவித்த கேரள அரசு, கள்ளுக்கடைகளைத் திறக்கவும் அனுமதித்தது. இருந்தாலும் கள் விற்பனை அதிகரிக்கவில்லை. ஒரு நாளைக்கு 200 - 300 லிட்டர் விற்பனை செய்த கள்ளுக்கடைகள் எல்லாம் இப்போது தினசரி 15- 20 லிட்டர் அளவில் விற்பதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் கள் வியாபாரிகள்.
உதாரணமாக, கோவையின் தென்புறத்தில் கேரள எல்லையாக விளங்கும் வேலந்தாவளம் கிராமத்தின் அருகில் இருக்கும் கள்ளுக்கடையைச் சொல்லலாம். தமிழகத்தின் பகுதியாக விளங்கும் பாலம் அருகில் இந்தக் கள்ளுக்கடை உள்ளது. இது கேரளப் பகுதிக்குள் இருந்தாலும்கூட கேரளப் போலீஸ் இங்கே வந்து செல்லும் தமிழகத்தவர்களை அனுமதிக்கிறது.
அதற்கேற்ப இந்தக் கள்ளுக்கடையைத் தாண்டி 200 அடி தூரத்திலேயே சோதனைச் சாவடியை நிறுவியிருக்கின்றன கேரளக் காவல் துறையும் சுகாதாரத் துறையும். அப்படி இருந்தும் இந்தக் கள்ளுக்கடையில் ஒரு மாதமாகவே விற்பனை மிகக் குறைவு என்கிறார்கள்.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத, கள்ளுக்கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, “முன்பெல்லாம் 300 லிட்டருக்கும் அதிகமாக இக்கடையில் கள் விற்பனையாகும். தமிழகத்திலிருந்து மட்டும் நூற்றுக்கணக்கானோர் கள் குடிக்கவே வருவார்கள். இப்போது அந்தக் கூட்டம் குறைந்துவிட்டது. பத்து நாட்களாகத் தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்குகின்றன. பேருந்து மூலம் கோவையைச் சேர்ந்தவர்கள் மிகுதியாகக் கள் குடிக்க வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், யாரும் வரவில்லை.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலேயே தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, மதுக்கரை, வாளையாறு, வழுக்குப்பாறை போன்ற ஊர்களில் உள்ள தோப்புகளில் கள்ளத்தனமாகக் கள் இறக்குகிறார்கள். அதனால் தமிழ்நாட்டு மக்கள் அங்கே போய் விடுகிறார்கள். இங்கே கள் வியாபாரம் குறைவதற்கு அதுவும் ஒரு காரணம். இங்குள்ள சுற்றுவட்டாரக்கடைகள் எல்லாவற்றிலுமே இதுதான் நிலை.
முன்பு ஒரு கடைக்கு ஒரு தென்னந்தோப்பில் 200 மரங்களிலாவது கள்ளுப்பானைகள் தொங்கும். இப்போது அதையெல்லாம் இறக்கிவிட்டோம். பத்துப் பதினைந்து மரங்களில் மட்டும் கள் இறக்குகிறோம். இப்படியே இருந்தால் கள்ளுக்கடைகளையே மூட வேண்டியதுதான்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT