Published : 18 Jun 2020 01:30 PM
Last Updated : 18 Jun 2020 01:30 PM
நாட்டுப்புறக் கதைகள், நீதிக் கதைகள், தேவதைக் கதைகள் எனக் குழந்தைகளுக்கான கதைகள் பெரும்பாலும் ஒருவழிப் பாதையாகவே இருக்கின்றன. “கற்பனை, நீதி, மாயாஜாலம் போன்றவை மட்டுமே கதை சொல்லலின் அங்கமல்ல. கதை சொல்கிறவர்களுடன் குழந்தைகள் உரையாட வேண்டும்” என்கிறார் ரூபிணி நாராயணன். மதுரை திருமங்கலைத்தைச் சேர்ந்த இவர் புவியமைப்புப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் இவர், நிலச்சரிவு குறித்த ஆராய்ச்சிப் பணியில் இருக்கிறார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வம் குறைந்துவரும் நிலையில், தொழில்நுட்பத்தையே கதை சொல்வதற்கான கருவியாகப் பயன்படுத்திவருகிறார் ரூபிணி. குறிப்பாக, கரோனா காலத்தில் குழந்தைகளை ஆக்கபூர்வமான விவாதத்தில் ஈடுபடுத்தவும் அவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும் ekalaivantamil.com என்னும் இணையதளத்தைத் தன் நண்பர் ராஜ்சந்தர் பத்மநாபனுடன் இணைந்து நடத்திவருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்சந்தர், தற்போது போர்ச்சுக்கல்லில் வசித்துவருகிறார். இவர் புவியமைப்பு அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வாளர் என்பதுதான் இவருடன் அறிமுகம் ஏற்படக் காரணம் என்கிறார் ரூபிணி. “நான் அமெரிக்காவில் பி.எச்டி., படித்துக்கொண்டிருந்தபோது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் நான் தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் போர்ச்சுக்கல்லில் பி.எச்டி., செய்வதாகச் சொன்னார். அப்படித்தான் ராஜ்சந்தரின் அறிமுகம் கிடைத்தது” என்கிறார் ரூபிணி.
கதையுடன் அறிவியல்
குழந்தைகளுக்குப் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என இவர்கள் யோசித்ததில் இந்தக் கதைசொல்லும் தளம் உருவாகியிருக்கிறது. இதில் கதை சொல்வதற்கென ஒரு குழு இருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த தாரணிக்குத் தமிழார்வம் அதிகம் என்பதால் சங்க இலக்கியங்களில் இருந்து கதைகளைத் தேர்ந்தெடுப்பது அவரது வேலை. கட்டணமில்லாமல் கிடைக்கும் எதன் மீதும் மக்களுக்குப் பிடிப்பு இருக்காது என்பதால் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். முதல் நிகழ்வுக்குக் கட்டணம் இல்லை. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கட்டணமில்லாக் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒன்பது முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு இவர்கள் கதைகளைச் சொல்கிறார்கள். முதல் அமர்விலேயே குழந்தைகளின் ஆர்வம் பிடிபட்டுவிடும் என்பதால் அடுத்த அமர்வில் அவர்களின் ஆர்வத்துக்குத் தோதான கதைகளைச் சொல்கிறார்கள்.
“எல்லாக் கதையும் எல்லாருக்கும் பிடிக்காதுதானே. ஆர்வமும் அப்படித்தான். அறிவியலில் அவர்களுக்கு எந்தப் பிரிவு பிடித்திருக்கிறதோ அது சார்ந்த கதைகளைச் சொல்வோம். பாடப் புத்தகங்களில் வருகிற அறிவியல் பாடங்களை மையமாக வைத்துத்தான் எங்கள் கதைகளும் இருக்கும். ஆனால், அதைப் பாடமாக இல்லாமல் கதையாக விளக்கும்போது குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்கின்றனர்” என்கிறார் ரூபிணி. மாலையில் தங்களுக்கு விருப்பமான நேரத்தைக் குழந்தைகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தனியாகவும் குழுவாகவும் இரு பிரிவுகளில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன
ஒரு மணி நேரம் நீளும் கதை சொல்லும் நிகழ்வைக் குழந்தைகளுக்கு அலுப்பு ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்கின்றனர். ஒருவர் கதை சொல்ல, ரூபிணியும் ராஜ்சந்தரும் கதையின் ஓர் இழையை எடுத்து அதற்கு அறிவியல் விளக்கம் தருகிறார்கள். உதாரணத்துக்கு, காட்டுக்குள் சிங்கம் சினத்துடன் கர்ஜித்தபடியே நடந்து வருவதைப் பார்த்த மற்ற விலங்குகளுக்கு அண்ட சராசரமும் நடுங்குவதுபோல் தோன்றியது என்று ஒரு கதையில் வந்தால், அண்ட சராசர நடுக்கத்தை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்கள். நிலநடுக்கம் என்றால் என்ன, ஏன் ஏற்படுகிறது என்பதை எளிய சம்பவங்கள் மூலம் சொல்கிறார்கள். வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை வைத்துச் செய்யக்கூடிய எளிய அறிவியல் ஆய்வுகள் குறித்தும் சொல்லித்தருகிறார்கள். இதுவே குழந்தைகளை அடுத்தடுத்துக் கதை கேட்கத் தூண்டுகிறது.
முல்லா கதைகள், அக்பர் பீர்பால் கதைகள் தொடங்கி திருக்குறள், குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமனி எனப் பல பிரிவுகளில் கதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். “குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான கதைப் பிரிவைப் பதிவுசெய்ததும் அது சார்ந்த கதைகளை தாரணி தேடுவார். அந்தக் கதையில் அறிவியல் தகவலைச் சொல்லக்கூடிய பகுதியை எங்களுக்குச் சொல்வார். நானும் ராஜ்சந்தரும் அதற்கேற்பத் தயாராவோம். இது தவிர, கதையின் இடையே குழந்தைகள் கேட்கிற சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிப்போம். ஒருவர் மட்டுமே கதை சொல்லக் கேட்டவர்களுக்கு ஒரு குழுவாகக் கதை சொல்வது, வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்கிறார் ரூபிணி.
வெளிநாட்டுக் குழந்தைகளுக்குக் கதை சொன்னாலும் தமிழகக் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்வை விரிவாக்குவதுதான் தங்களது இலக்கு என்று சொல்லும் ராஜ்சந்தர், அதற்காகத் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியைக் கோரிவருவதாகக் குறிப்பிடுகிறார். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளுக்கும் இணைய இணைப்புப் பெறுவதற்குப் பேசிவருவதாக ராஜ்சந்தர் சொல்கிறார். கதை சொல்வது மட்டுமல்ல இவர்களது நோக்கம். ‘பட்டிமன்றம்’ மூலம் ஆக்கபூர்வமான தலைப்புகளில் உரையாடும் வாய்ப்பை 15 முதல் 23 வயதுள்ள மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் தலைமைப் பண்பை மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டுகின்றனர். 1960 முதல் 1980 வரையுள்ள அறிவியல் அறிஞர்களைப் பற்றிப் பேசும் ‘ரோல் பிளே’ நிகழ்ச்சியும் மாணவர்களின் அறிவியல் தேடலுக்குக் களம் அமைத்துத் தருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT