Published : 17 Jun 2020 02:12 PM
Last Updated : 17 Jun 2020 02:12 PM

‘இவங்களுக்கு கரோனா டெஸ்ட் எடுங்க ஆபீஸர்!’- வந்தேறிகளை வளைத்துக் கொடுக்கும் கோவைவாசிகள்

கோவை

வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தின் எந்த மூலைக்கும் செல்பவர்கள், சோதனைச் சாவடிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வந்தாலும் உள்ளூர் மக்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறது. ‘இவங்க வெளியூர்ல இருந்து வந்திருக்காங்க… உடனே கரோனா பரிசோதனை செய்யுங்க ஆபீஸர்’ என்று அதிகாரிகளுக்கு அடையாளம்காட்டும் போக்கு மக்களிடம் காணப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் இந்த விழிப்புணர்வு சற்று அதிகம் என்றே சொல்லலாம்!

இரண்டு நாட்கள் முன்பு, போத்தனூர் மாரியப்பன் வீதியைச் சேர்ந்த மூத்த தம்பதியர் சென்னையிலிருந்து கோவைக்கு இ-பாஸ் பெறாமலே வந்தனர். தகவல் அறிந்த அண்டை வீட்டார் மறுநாள் உள்ளூர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே, அங்கு போலீஸாருடன் வந்த சுகாதாரத் துறையினர் இருவரின் சளி மாதிரிகளை எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த இருவரையும் அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். தற்போது அவர்களைச் சுகாதாரத் துறையினர், போலீஸார் கண்காணிக்கிறார்களோ இல்லையோ, அக்கம்பக்கத்தினர் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வருகிறார்கள்.

இதேபோல் கோவை சுந்தராபுரம், கோண்டீஸ் காலனியைச் சேர்ந்த 27 பேர் வேன் மூலம் ஊர் திரும்பினர். விஷயம் தெரிந்து பீதியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே சுகாதாரத் துறை மற்றும் போலீஸாருக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து 27 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதுடன், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

கோவை கரோனா மண்டலத்தில் வரும் நீலகிரியில் கடந்த சில நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மண்டலங்கள், மாவட்டங்களுக்கிடையே கடந்த 1-ம் தேதி முதல் 50 சதவீதம் பொதுப்போக்குவரத்து தளர்வு ஏற்படுத்தியிருந்தாலும் மலை மாவட்டமான நீலகிரிக்கும், கோவை மாவட்டத்திலேயே உள்ள மலைநகரமான வால்பாறைக்கும் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நீலகிரியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும், கோவையிலிருந்து வால்பாறைக்கும் வேலை நிமித்தம் செல்பவர்கள் தவிர யாரும் போகக் கூடாது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளுக்குக் கண்டிப்பாக அனுமதியில்லை’ என்ற நிபந்தனை ஆரம்பம் முதலே போடப்பட்டிருந்தது. அதையும் மீறித்தான் இந்த 2 ஆயிரம் பேர் ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு வந்துள்ளனர். அதற்குக் காரணம், பொதுப் போக்குவரத்துதான்.

தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான கார்கள் சுற்றுலாவுக்காகப் புறப்பட்டு வந்த நிலையில், பர்லியாறில் அவை எல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால், பேருந்தில் வந்தவர்களைத் தடுக்க முடியவில்லை. எனவேதான் இத்தனை பேர் அரசுப் பேருந்து மூலம் இப்படி வந்துள்ளார்கள்” என்று உள்ளூர் மக்கள் குமுறினார்கள். இதையடுத்து, பேருந்துப் போக்குவரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

அப்படியும் வெளியூர்வாசிகள் நீலகிரிக்குள் ஊடுருவியதையடுத்து இப்போது, மலையேறும் அனைத்துப் பேருந்துகளிலும் ஒவ்வொருவரிடமும் வேலைக்கான அடையாள அட்டையைப் பார்த்தே போலீஸார் அனுமதிக்கின்றனர். நீலகிரியைச் சேர்ந்தவர் என்பதற்கான முகவரியுடன் கூடிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை இப்படி ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக அடையாள அட்டையை வாங்கிப் பரிசோதித்த பின்னரே பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் பேருந்து நடத்துநர்கள்.

மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் வரை கரோனா இல்லாத மாவட்டமாக கோவை இருந்தது. ஆனால், விமான சேவை தொடங்கப்பட்ட பிறகு டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களிலிருந்து கடந்த 22 நாட்களில் விமானம் மூலம் கோவைக்கு வந்த 10 ஆயிரத்து 40 பேரில், 43 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர, கடந்த 2-ம் தேதி துபாயிலிருந்து கோவைக்கு வந்த 180 பேரில் 5 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விமானம் மூலம் வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து கரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வருகின்றனர் சுகாதாரத் துறையினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x