Published : 15 Jun 2020 09:22 PM
Last Updated : 15 Jun 2020 09:22 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர், பாரம்பரியம், மருத்துவ குணம் நிறைந்த கருங்குருவை நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
காரைக்குடி அருகே மாத்தூர் ஏம்பவயலைச் சேர்ந்த கே.ஆர்.கருப்பு (38). எம்.ஏ. பட்டதாரியான அவர், போலீஸ் எஸ்.ஐ பணிக்கு முயற்சி செய்தார். வாய்ப்பு கிடைக்காததை அடுத்து அவருக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
இதையடுத்து பராம்பரிய நெல் ரகங்கள் குறித்து ‘ஆன்லைனில்’ தேட தொடங்கினார். இறுதியில் மருத்துவ குணம் கொண்ட கருங்குருவை நெல் ரகத்தை சாகுபடி செய்ய முடிவு செய்தார்.
தொடர்ந்து புதுக்கோட்டையில் கிலோ ரூ.50 என்ற விலையில் விதை நெல் வாங்கி ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார்.
நெல் கதிர்கள் நன்கு வளர்ந்தநிலையில் ஓரிரு நாட்களில் அறுவடை செய்ய உள்ளார்.
இதுகுறித்து விவசாயி கே.ஆர்.கருப்பு கூறியதாவது: கருங்குருவை 110 நாட்கள் வரை வளரக் கூடியது. சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிப்பில் இந்த கருங்குருவை பயன்படுகிறது. இதனால் அதன் தேவையும் அதிகமாக உள்ளது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது உரம், பூச்சிக்கொல்லி மருந்து செலவு இல்லாமல் போகிறது.
இயற்கை முறையில் விளையும் நெல் ரகத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT