Published : 15 Jun 2020 06:22 PM
Last Updated : 15 Jun 2020 06:22 PM
கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஊரடங்கில் அனைவரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறோம். இந்தக் காலத்தில் இதுபோல் வேறு பல காரணங்களுக்காக வீட்டுக்குள்ளோ, பதுங்குமிடத்திலோ அடைந்து கிடந்தவர்களைப் பற்றிய சம்பவங்கள், நிகழ்வுகள் கவனம் பெற்றுள்ளன, நினைவுகூரப்பட்டுள்ளன. அந்த வகையி்ல ஹிட்லரின் நாஜிப் படை தந்த அச்சுறுத்தலால் யூத குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆன் ஃபிராங்க், பதுங்கிடத்தில் அடைந்து கிடந்ததும் அடங்கும். மூன்று மாதம் ஊரடங்கில் முடங்கி இருந்ததற்கே நாம் சலித்துக்கொள்கிறோம். ஆனால், ஆன் ஃபிராங்க் எத்தனை மாதங்கள் இப்படிப் பதுங்கியிருந்தார் தெரியுமா? கிட்டத்தட்ட 24 மாதங்கள்.
சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கியது தொடர்பாக இதுவரை வெளியான புத்தகங்களில் குறிப்பிடத்தக்கது ஆன் ஃபிராங்க் எழுதிய டைரிக் குறிப்பு. அந்த டைரியை எழுதிய காலத்தில் ஆன் ஃபிராங்கின் வயது 13. நேரடி வாழ்க்கைப் பதிவான அந்த டைரிக்குறிப்பு இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் சந்தித்த துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கும் நெருக்கடியில் வாழ்பவர்களின் உலகுக்கு வெளிச்சம் பாய்ச்சுவதாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
புதுப் பரிசு
1942 ஜூன் 12 ஆம் தேதி, சிறுமி ஆன் ஃபிராங்குக்கு 13-வது பிறந்த நாள். பதின்பருவத்தில் காலடி எடுத்துவைத்த அந்தச் சிறுமிக்கு அவளுடைய பெற்றோர்கள் தந்த பரிசு ஒரு புத்தம் புது டைரி. அந்த டைரி, ஆனுக்கு புதிய வாசலைத் திறந்துவிட்டது. அப்போது அவர்கள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆன் ஃபிராங்கின் தந்தை ஓட்டோ, நறுமணப் பொருட்கள் விற்பனை வர்த்தகராக இருந்தார்.
ஜெர்மனியைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த சர்வாதிகார நாஜிக்கள் நெதர்லாந்தையும் கைப்பற்றி இருந்தார்கள். அவர்களுடைய துன்புறுத்தலுக்குப் பயந்து, ஃபிராங்க் குடும்பத்தினர் நான்கு பேரும் மேலும் நான்கு யூதர்களும் ரகசியப் பதுங்கிடத்தில் பதுங்கி வாழ்ந்தார்கள். ஆட்டோ ஃபிராங்கினுடைய நிறுவனம் செயல்பட்டுவந்த கட்டிடத்தின் பின்புறத்தில் இந்தப் பதுங்கிடம் அமைந்திருந்தது. நாஜிப் படையினரால் கண்டறியப்பட்டால், சித்திரவதை முகாம்களில் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்துடனே அவர்கள் வாழ்ந்துவந்தார்கள்.
பதுங்கியிருந்த காலத்தில் அவர்கள் எந்தக் காரணத்துக்காகவும் வெளியே வரவில்லை. மூன்று பேருக்கான உணவுப் பொருட்களை எட்டுப் பேர் பகிர்ந்துகொண்டு வாழ்ந்துவந்தார்கள்.
அனைத்தும் எழுத்தில்...
அவர்கள் வாழ்ந்த பதுங்கிடத்தின் ஜன்னல்களில்கூட கறுப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. சூரியனையோ வெளியுலகத்தையோ காண்பதற்கு வாய்ப்பில்லை. தோழிகளுடன் ஆன் ஃபிராங்க் விளையாட முடியவில்லை. பள்ளிக்குத் திரும்புவது குறித்து அவள் கனவு கண்டுகொண்டே இருந்தாள். இந்தப் பின்னணியில்தான், டைரி எழுதுவதில் அவள் தீவிரமடைந்தாள். தன் சிந்தனைகள் அனைத்தையும் எழுத்தில் வடித்தாள். கிட்டி என்ற கற்பனை நண்பரை உருவாக்கிக்கொண்டு, அவருக்குக் கடிதங்களை எழுதத் தொடங்கினாள். தன்னுடைய அச்ச உணர்வு, சலிப்பு, பதுங்கிடத்தில் வளர்வதில் உள்ள பிரச்சினைகள் போன்றவற்றை அவள் பதிவுசெய்திருக்கிறாள்.
இதற்கிடையில் டச்சு அரசு ஒரு வானொலி அறிவிப்பில், மக்களிடம் உள்ள போர் ஆவணங்கள், டைரிக் குறிப்புகளைப் பாதுகாத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த அறிவிப்பைக் கேட்ட ஆன் ஃபிராங்க் தன் டைரியைத் திருத்தி எழுதத் தொடங்கினாள். இதற்கிடையில் அவர்கள் பதுங்கியிருந்த இடம் நாஜிப் படையால் கண்டறியப்பட்டுவிட்டது. தன்னுடைய டைரியில் ஆன் ஃபிராங்க் கடைசியாக எழுதிய நாள் 1944 ஆகஸ்ட் 1.
ஆன் ஃபிராங்குடன் அவளுடைய அப்பா, அம்மா, அக்கா என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய பதுங்கிடம் குறித்து காவல்துறைக்கு யார் தகவல் தந்தது என்பது தெரியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு இடையிலேயே ஆன் ஃபிராங்கும் அவளுடைய அக்கா மர்காட்டும் இறந்தார்கள். அவர்களுடன் பதுங்கியிருந்தவர்களில் ஆனின் தந்தை ஓட்டோ மட்டுமே உயிர் தப்பினார்.
வரலாற்றுத் திருப்பம்
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஆனின் டைரியை ஓட்டோ கண்டறிந்தார். அவர்களுடைய குடும்பத்துக்கு உதவி வந்த மிப் ஷீஸ் என்ற பெண் தன்னுடைய மேசை அலமாரியில் ஆன் ஃபிராங்கின் டைரியைப் பாதுகாத்து வைத்திருந்தார். அந்த டைரியைப் படித்தபோது பிற்காலத்தில் எழுத்தாளராக, பத்திரிகையாளராக வர வேண்டுமென ஆன் விரும்பியதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ரகசியப் பதுங்கிடத்தில் வாழ்ந்தது குறித்த நிகழ்வுகளை பதிப்பிக்க வேண்டுமெனவும் ஆன் விரும்பியிருந்தாள். 1947 ஜூன் மாதம் 'ரகசியப் பதுங்கிடம்' (The Secret Annex) என்ற நூலை ஆட்டோ பதிப்பித்தார்.
அதற்குப் பிறகு வரலாற்றில் அதிகம் வாசிக்கப்பட்ட புனைவற்ற நூல்களில் ஆன் ஃபிராங்கின் டைரிக் குறிப்பும் ஒன்றாக இடம்பிடித்தது. இன்றைக்கு 3 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ஆன் ஃபிராங்கின் டைரிக் குறிப்புப் புத்தகம் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் வெளியாகியுள்ளது (எதிர் வெளியீடு). இந்த டைரியைத் தவிர கட்டுரைகள், கடிதங்கள், சிறுகதைகள், நாவல் போன்றவற்றையும் ஆன் ஃபிராங்க் எழுதியுள்ளார்.
மண்டேலாவின் பரிந்துரை
தென்னாப்பிரிக்க விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா, ராபன் தீவுச் சிறையில் 18 ஆண்டுகள் கழித்தார். அப்போது ஆன் ஃபிராங்கின் டைரியை வாசித்து நம்பிக்கை பெற்றார். அத்துடன் சக சிறைவாசிகளிடம் அந்தப் புத்தகத்தை வாசிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆன் ஃபிராங்கின் டைரிக் குறிப்பு உலகெங்கும் ஒடுக்கப்படுபவர்கள் படும் துயரங்களைப் பிரதிபலிப்பபதாக உள்ளது. அதேநேரம் இன்றைக்கும் நம்பிக்கையின், மீட்சியின் அடையாளமாகவும் அந்த நூல் கருதப்படுகிறது.
ஆன் ஃபிராங்க் பதுங்கிடத்தில் வாழ்ந்தது - கோவிட் 19 நோய்த்தொற்றுப் பரவலுக்கான ஊரடங்கின் பின்னணியில் இன்னொரு ஒப்புமையும் உண்டு. இன்றைக்கு ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிட்டு சர்வாதிகார அல்லது ஒற்றை அதிகார மையத்தை வலியுறுத்தும் நாடுகளே, கரோனா நோய்த்தொற்றில் மிக அதிக நோயாளிகள், இறப்பைச் சந்தித்துள்ளன.
(ஜூன் 12: ஆன் ஃபிராங்க் 91-வது பிறந்த நாள்
2020: ஆஷ்விட்ஸ் வதை முகாம் 75-வது ஆண்டு)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT