Published : 12 Jun 2020 05:58 PM
Last Updated : 12 Jun 2020 05:58 PM

‘கான் வித் தி விண்ட்’ படம் நீக்கப்பட்ட சர்ச்சை: பின்வாங்கிய எச்பிஓ மேக்ஸ் நிறுவனம்

ஹாலிவுட் வரலாற்றில் முக்கியமான படமாகக் கருதப்படும் ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படம் ‘எச்.பி.ஓ மேக்ஸ்’ தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. கறுப்பினத்தவர்களை அடிமையாக நடத்துவது போல் சித்தரிக்கும் இப்படம் அந்தத் தளத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது, கறுப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், இது தேவையற்ற நடவடிக்கை என்று கறுப்பினத்தவர்களிடமிருந்தே கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் காவல்துறையின் வன்முறையால் ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கறுப்பினத்தவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல இடங்களிலும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (Black Lives Matter) போராட்டங்கள் நடந்துவருகின்றன. கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளுக்கும் எதிராகக் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. அதன் நீட்சியாகவே கறுப்பினத்தவர்களை அடிமையாக நடத்துவது போல் சித்தரிக்கும் ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படத்தைத் தங்கள் தளத்திலிருந்து நீக்குவதாக எச்.பி.ஓ மேக்ஸ் நிறுவனம் அறிவித்தது.

அடிமை வரலாறு
மார்க்ரேட் மிட்ச்சல் எழுதிய ‘கான் வித் தி விண்ட்’ என்ற நாவலைத் தழுவி 1939-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், 1860-களில் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பின்னணியாகக் கொண்டது. ஸ்கார்லெட் ஓ காரா என்ற வெள்ளையினப் பெண்ணின் காதலையும், வேதனைகளையும் பேசும் படம் இது.

படம் விவரிக்கும் காலகட்டத்தில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களால் அடிமையாக நடத்தப்பட்டு வந்தனர் என்பது வரலாற்று ரீதியில் உண்மைதான். இருந்தாலும், படத்தில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களிடம் அடிமையாக இருப்பதை மனபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது இன்றளவும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

அதேசமயம், உள்நாட்டுப் போர் நடக்கும் தறுவாயில் இருந்த நிலையைப் பிரதிபலிக்கும் விதமாகவே இப்படத்தின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பது இப்படத்தை ஆதரிப்பவர்களின் கருத்து. படத்தை நீக்குவதாக எச்.பி.ஓ மேக்ஸ் நிறுவனம் அறிவித்ததும் பல கறுப்பினத்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்தப் படத்தை நீக்க வேண்டியதில்லை எனும் வாதத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. அது இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற ஹாட்டி மெக்டேனியல் பற்றியது!

கறுப்பினத்தவர்களுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர்
கறுப்பின அடிமைகளாக இருந்த ஹென்றி மெக்டேனியல் மற்றும் சூசன் ஹோல்பெர்ட் தம்பதிக்கு 13-வது குழந்தையாகப் பிறந்தவர் ஹாட்டி மெக்டேனியல். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பின்பு விடுதலைக் காற்றுடன் சேர்ந்து ஹாட்டி மெக்டேனியல் வாழ்க்கையில் கல்வி, கலை மீதான ஆர்வமும் வளர ஆரம்பித்தது. பாடல்களை எழுதிப் பாடுவது, தன் சகோதரி மற்றும் சகோதரனுடன் இணைந்து நாடகக் குழு அமைத்து நாடகங்கள் நடத்துவது என்று மெல்ல மெல்ல வளர ஆரம்பித்த ஹாட்டி, திரைத் துறையில் நுழைந்தார்.

‘கான் வித் தி விண்ட்’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘மாமி’ என்ற வீட்டுப் பணிப்பெண் கதாபாத்திரத்தில் நடிப்பின் சகல பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருப்பார். தன்னுடைய எஜமானியாகவே இருந்தாலும் சிறுவயது முதல் தூக்கி வளர்த்த ஸ்கார்லெட்டிடம் அவர் காட்டும் வாஞ்சை, கண்டிப்பு, தாய்மை உணர்வு எல்லாம் மனிதத்தின் உச்சபட்ச தரிசனம். அதனால்தான் அவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. வரலாற்றில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஹாட்டி அடைந்தார். ஆஸ்கர் விருதைத் தன் கையில் பற்றிக்கொண்டு ஹாட்டி அன்று பேசிய நெகிழ்ச்சியான தருணத்தைப் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இந்தப் படத்தை நீக்குவதால் வரலாற்றில் ஹாட்டியின் உழைப்பும் பெருமையும் மறக்கடிக்கப்படும் என்று எழுதி வருகின்றனர்.

தீர்வல்ல, கண்துடைப்பு
‘சமகாலப் பிரச்சினைக்கான தீர்வைத் தேட வேண்டுமே தவிர, பழங்காலத் திரைப்படங்களை நீக்குவதாலும், தணிக்கை செய்வதாலும் ஒரு பயனும் இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக மட்டுமே பார்க்கப்படும்’ என்பது அவர்களது வாதம். மேலும், ஹாட்டி மெக்டேனியல் போன்ற ஒப்பற்ற கறுப்பினக் கலைஞரின் சாதனைகள் மறக்கடிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இதை எதிர்பார்க்காத எச்.பி.ஓ மேக்ஸ் நிறுவனம், ‘சரியான வரலாற்றுத் தகவல்கள் கொண்ட முன்னுரையுடன் வெகுவிரைவில் ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படம் பதிவேற்றப்படும்’ என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- க.விக்னேஷ்வரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x