Last Updated : 12 Jun, 2020 11:39 AM

 

Published : 12 Jun 2020 11:39 AM
Last Updated : 12 Jun 2020 11:39 AM

நடிப்புப் பேரொளி பத்மினி; நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்தநாள் இன்று! 


கேரளாவின் சின்ன கிராமத்தில் பிறந்தவர்தான் அவர். ஆனால் தென்னிந்திய மொழிகளில், தனித்துவத்துடன் கோலோச்சினார். இன்றைக்கும் அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். நடிப்பில் இவரைப் போல் உண்டா என்கிறார்கள். குரலில் இவரைப் போல் எவருக்கும் இல்லை என்று புகழ்கிறார்கள். நடனத்துக்கென்றே பிறந்தவர் என்று சிலாகிக்கிறார்கள். அவர்... பத்மினி. நாட்டியப் பேரொளி பத்மினி.


பத்மினி என்று தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள். ஆனால் அவரின் பால்யத்தில், திருவிதாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள். லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் நடனத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கினார்கள். இந்த மூவரிலும் உயர்ந்து நின்று முதலிடம் பிடித்தார் பத்மினி. நடிப்பிலும் பேரெடுத்தவர் பத்மினி மட்டும்தான்.


இந்திப் படத்தில் நடித்துவிட்டுத்தான், தமிழின் பக்கம் வந்தார் பத்மினி. ஆனால், தமிழ் ரசிகர்கள் இவருக்கு தனியிடம் கொடுத்தார்கள், திரையுலக வாழ்விலும் மனதிலும்! ஐம்பதுகளில், சிவாஜியுடன் ‘தூக்குதூக்கி’யில் நடித்தார். ஒரு தூக்குதூக்கித்தான் விட்டது உயரத்தில்! ‘ராஜா ராணி’யில் நடித்தார். பிறகு ஒரு ராணியாக, திரையுலகின் முடிசூடா ராணியாகத்தான் வலம் வந்தார் பத்மினி. சிவாஜியுடன் இவர் நடித்த ‘தங்கப்பதுமை’ இவரின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. அழகிலும் நடிப்பிலும் திறமையிலும் பதுமை என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள்.


ஒருபக்கம், சிவாஜி பத்மினி செம ஜோடி என்று வியந்து போற்றினார்கள். அதேசமயத்தில், எம்ஜிஆருடன் ‘மன்னதி மன்னன்’, ‘மதுரை வீரன்’ என பல படங்களில் நடித்தார். எம்ஜிஆருக்கு ஏற்ற ஜோடியாகவும் புகழப்பட்டார்.


எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, வாரப் பத்திரிகையில், தொடராக கதையொன்றை எழுதினார். எழுதும்போதே, பேசப்பட்ட,. புகழப்பட்ட நாவல், படமாக எடுக்க எல்லோருமே ஆசைப்பட்டார்கள். கதையைப் படித்த பலரும் அப்படித்தான் விரும்பினார்கள். அந்தக் கதை படமாக எடுக்கப்பட்டது. மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. ஐம்பது வருடங்களைக் கடந்தும் இன்றைக்கும் அந்தப் படத்தை மறக்கவில்லை. அப்படி மறக்கமுடியாத அளவுக்கு, கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை கேரக்டருக்கு உயிர் கொடுத்தார்கள் இரண்டுபேரும். அந்த இரண்டு பேர்... சிக்கல் சண்முகசுந்தரம்... சிவாஜி கணேசன். மோகனாம்பாள்... பத்மினி. ’நாட்டியப் பேரொளி’ என்று அவரின் ஆட்டத்தில் சிலிர்த்து வியந்தவர்கள் இன்றைக்கும் போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.


பத்மினியின் கண்கள் மகத்துவமும் தனித்துவமும் வாய்ந்தவை. கண்கள் ஒருபக்கம் நடிக்க, கால்கள் வேறொரு விதமாக நர்த்தனமாடும். பத்மினியின் வசன உச்சரிப்புகள் தனிரகம். முகபாவனைகள், மொத்த உணர்ச்சிகளின் பிறப்பிடம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என பலருடனும் நடித்து வலம் வந்தார். சிவாஜியுடன் மட்டுமே 50க்கும் மேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பொருத்தமான ஜோடிப் பட்டியலில் சிவாஜி - பத்மினிக்கும் இடம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.
’பத்மினிக்கு டான்ஸ்தாம்பா வரும்’ என்றெல்லாம் முத்திரை குத்திவிடமுடியாது. அவர் ஒரு பாட்டுக்குக் கூட டான்ஸ் ஆடாமல் நடித்த படங்களும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தன. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜோடி போட்டு நடித்த ‘சித்தி’ படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்துவிடமுடியாது. ஒவ்வொரு காட்சியிலும் பத்மினி, விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருப்பார். எம்.ஆர்.ராதா எனும் நடிப்பு அசுரனுக்கு நிகராக, தன் நடிப்பால் வென்றுகொண்டே இருப்பார்.


இன்னொரு சோறுபத உதாரணம்... ‘வியட்நாம் வீடு’. ‘பாலக்காடு பக்கத்திலே’ பாட்டுக்கு ரெண்டு ஸ்டெப் போட்டு ஆடியது மட்டும்தான். மற்றபடி, பிரஸ்டீஜ் பத்மநாபனின் மனைவி சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார். ஒருபக்கம் பிள்ளைகளுக்கும் முட்டுக்கொடுத்து, இன்னொரு பக்கம், பிரஸ்டீஜ் பத்மநாபனின் கோபங்களுக்கும் பிரஸ்டீஜுக்கும் காபந்து செய்து என நடிப்பில் பின்னியிருப்பார் பத்மினி. ஒவ்வொரு முறையும் ‘சாவித்ரீ...’ என சிவாஜி அழைப்பதும் அதற்கு மடிசார் முந்தானையைப் போர்த்திக்கொண்டு வலம் வந்து உடல்மொழியால், அன்பும் பணிவுமாக நிற்பதும்... பாந்தமான ஜோடியாகவே, அற்புதத் தம்பதியாகவே வாழ்ந்திருப்பார்கள். உதட்டில் சிரிப்பும் உடல்மொழியில் வெட்கமும் கொண்ட பத்மினி, காணக் கிடைக்காத எக்ஸ்பிரஷன். திரையுலகிற்கு எப்போதாவது கிடைக்கும் பிரமாண்ட நாயகி. தைரியமாக, க்ளோஸப் காட்சி வைக்கலாம். வைத்தார்கள். ‘பேசும் தெய்வம்’ படம் முழுக்கவே அப்படி ஏகப்பட்ட க்ளோஸப் காட்சிகளும் உணர்ச்சிப் பெருக்கூட்டும் சம்பவங்களுமாக ஜொலித்திருப்பார் பத்மினி.


ஐம்பதுகளில் தொடங்கிய திரை வாழ்க்கையில் இன்னொரு வைரம்... இன்னொரு முத்து... இன்னொரு மயிலிறகு... பூங்காவனத்தம்மா. அதுவரை பாட்டிக்கும் பேத்திக்குமான உறவை, இத்தனை டீடெய்லும் உணர்வுமாகச் சொன்னதே இல்லை. பாசிலின் ‘பூவே பூச்சூடவா’ படத்தில், பூங்காவனத்தம்மாவாக, நம் அத்தை பாட்டிகளை அப்படியே கண்முன் கொண்டு திரையில் உலவவிட்டிருப்பார். பாசத்துக்கு ஏங்கும் பூங்காவனத்தம்மாக்கள் இன்றைக்குமிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பத்மினியும் பூங்காவனத்தம்மாவும் ‘பூவே பூச்சூடவா’வும்தான் நினைவுக்கு வருவார்கள்; வரும்.


நாட்டியப் பேரொளி மட்டுமா அவர். நடிப்புப் பேரொளியும் கூட!


நடிகை பத்மினியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 12).


அந்த மகா நடிகையைப் போற்றுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x