Published : 11 Jun 2020 09:12 PM
Last Updated : 11 Jun 2020 09:12 PM
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே விவசாயியின் 101-வது பிறந்தநாளை உறவினர்கள் விழாவாக கொண்டாடினர்.
சிங்கம்புணரி அருகே இடையப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வீரப்பன் (101). அவரது மனைவி அங்கம்மாள் (96). வீரப்பன் சிறுவயதிலேயே பர்மா சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது பர்மாவில் இருந்து சிதம்பரம் வந்தார். அங்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் காவலாளியாகப் பணிபுரிந்தார்.
பணி ஓய்வு பெற்ற அவர் சொந்த ஊரான இடையப்பட்டியில் விவசாயம் செய்து வருகிறார். அவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் வீரப்பனின் 101-வது பிறந்தநாளை அவரது பிள்ளைகள், உறவினர்கள் சேர்ந்து விழாவாக கொண்டாடினர். பேரன், பேத்திகள் சேர்ந்து வாங்கிய 10 கிலோ கேக்கை வீரப்பன் வெட்டி, ஆனந்தத்துடன் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
கரோனா ஊரடங்கால் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மோசமான உணவுப் பழக்கங்கள் உள்ளிட்டவற்றால் இளம் வயதிலேயே வாழ்வியல் சார்ந்த நோய்கள் தாக்குவது அதிகரித்துள்ள நிலையில், சத்தான உணவு, கடின உழைப்பு போன்றவற்றால் வீரப்பன், அங்கம்மாள் தம்பதியினர் உடல் நலத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு மட்டும் அல்லாமல் இளைஞர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதாக உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT