Published : 10 Jun 2020 06:41 PM
Last Updated : 10 Jun 2020 06:41 PM
தமிழகத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் வெளியேற கரோனா பீதி மட்டும் காரணமல்ல, உணவுக்கும், வீட்டு வாடகைக்கும் கூட பணம் கொடுக்காமல் கைவிட்ட அவர்களது முதலாளிகளும் ஒரு காரணம். இப்படியானவர்களுக்கு மத்தியில் மனிதநேயமிக்கவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்.
மதுரை விளாங்குடி மற்றும் சிக்கந்தர்சாவடி பகுதியில் வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் 5 முதல் 15 வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர்கள் கோயில் பாப்பாகுடியிலேயே வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான பிஹாரைச் சேர்ந்த சிம்புகுமாரின் மனைவி பூஜாகுமாரிக்கு வளைகாப்பு நடத்தி வைத்திருக்கிறார்கள் வீட்டு உரிமையாளர்களான தமிழ்க்குமரன் - காமாட்சி தம்பதி.
இதுபற்றி நம்மிடம் பேசிய சிம்புகுமார், "நான் 17 வயதிலேயே சென்னைக்கு வந்துட்டேன். 4 வருஷத்துக்கு முன்னாடிதான் மதுரைக்கு வந்தேன். முதலில் நண்பர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த நான், திருமணமானதும் கடந்த நவம்பர் மாதம் மனைவியை அழைத்துக்கொண்டு தமிழ்க்குமரன் சாரின் வீட்டு மாடியில் குடியேறினேன். கரோனா பாதிப்பால் கம்பெனியை மூடியதும், நான் பயந்தே போனேன். எங்களுடன் வேலை பார்த்த ஒரு பையன் சொந்த ஊருக்குக் கிளம்பி, ரயிலில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டதையும், பிஹாரில் 14 நாட்கள் பாழடைந்த கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டதையும் சொன்னதால் பயம் அதிகமாகிவிட்டது.
கர்ப்பிணியான என் மனைவியை எப்படி அழைத்துக்கொண்டு ஊருக்குப் போவது என்று பயந்தபோது, 'தம்பி நீ வீட்டு வாடகை எல்லாம் தர வேண்டாம். நிலைமை சரியாகும் வரை இங்கேயே இரு' என்று தமிழ்க்குமரன் சொல்லிவிட்டார். அவரது மனைவியும், 'பிரசவம் வரையில் பார்த்துக்கொள்வது என்னுடைய பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்.
எங்கள் கம்பெனி உரிமையாளரும், வாரந்தோறும் சாப்பாட்டுக்குக் காசு கொடுத்துவிடுகிறார். இப்போது நானும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவியும் தாய் வீட்டில் இருப்பது போல பாதுகாப்பாக உணர்கிறார்" என்றார்.
ஆசிரியை காமாட்சி கூறியபோது, "பூஜாகுமாரிக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது. ஆனால், எப்போதும் சிரித்த முகமாக இருப்பாள். சுறுசுறுப்பாக வேலை பார்த்துக்கொண்டே இருப்பாள். எனக்கோ, என் மாமியாருக்கோ உடம்பு சரியில்லை என்றால் விழுந்து விழுந்து கவனிப்பாள். அவளை என்னுடைய சொந்தத் தங்கையாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டேன். எனவே, அவள் கருவுற்றது முதல் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பொறுப்புகளை நானே பார்த்துக்கொண்டேன். வளைகாப்பு நடத்துவோம் என்று சொன்னபோது, அப்படி என்றால் என்னவென்றே அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை.
'அது கர்ப்பிணிகளுக்கு ரொம்பப் பிடிக்கும். கையில் நிறைய வளையல் போடும்போது அந்தச் சத்தம் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்' என்றேன். ஒப்புக்கொண்டார்கள். நானும் பக்கத்து வீட்டு அக்காக்களும் சேர்ந்து அவளுக்கு வளைகாப்பு செய்து வைத்ததும், நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவள் ரொம்ப சந்தோஷப்பட்டாள். 'யாதும் ஊரே... யாவரும் கேளிர்...' என்று பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிற நாம் அதை அனுபவத்தில் செய்து பார்க்கும்போது உண்மையிலேயே சந்தோஷமாகத்தான் இருக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT