Published : 10 Jun 2020 02:12 PM
Last Updated : 10 Jun 2020 02:12 PM
இன்னும் கூட நம்ப முடியவில்லை, கிரேசி மோகன் மறைந்து ஓராண்டு நிறைகிறது. அவரது எழுத்துத் திறமை, நகைச்சுவை உணர்ச்சி, நடிப்பாற்றல், வெண்பா எழுதும் கவித்திறன், ஓவியம்...இதெல்லாம் கூட அல்ல, தனக்கு சமூகத்தில் கிடைத்த பேர், புகழ் எல்லாம் மறந்து மிக சாதாரண மனிதராக, காட்சிக்கு எளியவராக, குழந்தைமைப் பண்பு நழுவ விட்டு விடாதவராக அவர் வாழ்ந்தார் என்பதே அவரை அரிய பிறவியாகக் கொண்டாடத் தூண்டுகிறது.
மருந்து மாத்திரைகள் போல, தூங்கப் போகும்போது ஒன்று, காலை கண் விழித்தவுடன் ஒன்று, புகையிலை போடுவதற்குமுன் ஒன்று, போட்டு நன்கு குதப்பியபின் ஒன்று என்ற கணக்கில் அவர் வெண்பாக்கள் எழுதித் தள்ளிக்கொண்டிருந்தவர். ராமாயணம் என்பதுபோல் ஒலிக்கும் ரமணாயணம், மோகன் அவர்களது தனித்துவப் பங்களிப்பு.
அன்றாடம் உறங்கப்போகுமுன் மெயில் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்த்தால், அவரிடமிருந்து தான் வந்திருக்கும். காலை எழுந்தவுடன் அவர் வெண்பாவில் தான் கண் திறக்க வேண்டி இருக்கும். இடையே, அவரது கேள்வி பதில்கள் வந்த பத்திரிகை பக்கங்கள் அல்லது அவரது நகைச்சுவை கட்டுரைகள் வெளியான இதழின் புகைப்படங்கள் மெயிலில் பகிர்ந்து கொண்டிருப்பார்.
ஓவியர் கேஷவ் அன்றாடம் வரையும் கிருஷ்ணா ஓவியங்களுக்குச் சுடச்சுட வெண்பா எழுதாமல் மோகன் காபி கூட அருந்த மாட்டார் என்று தோன்றும். தானே சிறந்த ஓவியரான கிரேசி மோகன், கேஷவ் செய்து கொண்டிருக்கும் விதவிதமான பரிசோதனைகளை அப்படியே உள்வாங்கி, பொருத்தமான இதிகாச, புராணக் கதைகளை மிகச் சரியாகக் கண்டடைந்து அதை நான்கு வரி வெண்பாவில் கொண்டு வந்துவிடுவார். அது மட்டுமல்ல, அடிக்கொருதரம் அப்படியான வெண்பாவின் இறுதிப்பகுதியில் கேஷவைக் குறிப்பிட்டுப் பாராட்டித்தான் நிறைவும் செய்வார்.
மார்கழி மாதம் என்றாலோ கேட்கவே வேண்டாம், கேஷவ் கைவண்ணத்தில் மின்னும் ஓவியங்களிலிருந்து ஆண்டாள் பாசுரங்களைத் தொட்டு மோகன் எழுதும் வெண்பாக்களின் எழில் இன்னும் மின்னும். அப்படியான ஒரு மார்கழி மாதத்தில், மிகவும் கொண்டாடப்படும் 27வது பாசுரமான'கூடாரை வெல்லும்' பாசுரம் குறித்த வெண்பா ஒன்று மோகனிடமிருந்து வந்தது, வியப்பு என்னவெனில், இந்த முறை ஓவியம் கேஷவ் வரைந்தது அல்ல, மோகனே வரைந்தது.
சூடிக் கொடுத்தபின் ஆண்டாள் கண்ணாடி பார்த்து ரசித்திருக்கும் கற்பனையை விவரிக்கும் வெண்பாவிற்கு, தமது ஓவியத்தை இணைத்திருந்தார் மோகன். கண்ணாடி ஏந்தி இருக்கும் அழகியை தர்ப்பண சுந்தரி (தர்ப்பண் என்றால், கண்ணாடி என்று பொருள்) என்று வருணிக்கும் சிற்பம் ஒன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பேளூர் கோயிலில் உண்டு. அதில் அந்த அழகு நங்கை நின்றபடி கையில் கண்ணாடி ஏந்தி ஒயிலாக நிற்பாள். மோகன் வரைந்த தர்ப்பண சுந்தரி ஒய்யாரமாக அமர்ந்திருப்பாள்.
அவர் அனுப்பி இருந்த வெண்பா இது:
கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
முன்னாடி சூடி மகிழ்ந்ததற்குப் -பின்னாடி
வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
கிள்ளைகொள் கோதாய் காப்பு''
அவருக்கு அனுப்பி இருந்த பதில் வெண்பா:
நகைச்சுவை அன்பர் நயம்படப் பேசித்
திகைக்கவைக்கும் பண்பர் சிறந்த - புகைப்படம்
சொல்கிறதே ஓவியராய்ச் சொக்கவைக்கும் தேர்ச்சியினை
வெல்கிறதே மோகன் விரு(ந்)து.
மோகன் சார் மறைவு, வயது வித்தியாசம் இன்றி, நகர்ப்புற -, கிராமப்புற வேறுபாடின்றி எண்ணற்ற மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியதை இப்போது நினைத்தாலும், அவரது மிக எளிய பண்பாக்கமே அதற்கெல்லாம் காரணம் என்றே படுகிறது. அவர் மறைந்த அடுத்த பல வாரங்களுக்கு, அவரது நேர்காணல்கள், நாடகத் துணுக்குகள், ஹாஸ்ய உரைகள், அவர் துபாயில் நடத்திய நகைச்சுவை பட்டிமன்றம் (துபாய் னு பேர் வச்சிட்டு எல்லாம் பெண்களாகப் பேச அழைச்சிருக்காங்க, ஒரு பாய் கூட இல்லையா என்று ஆரம்பித்தார் அவர்) என நிறைய காணொலிப் பதிவுகளை நண்பர்கள் பகிர்ந்து கொண்டே இருந்தனர். இவற்றையெல்லாம் விட ஈர்த்தது, தான் சிறப்பு விருந்தினராக இல்லாத எத்தனையோ நிகழ்வுகளில் ஒரு பார்வையாளராக, ரசிகராக, மற்றவர்கள் பேசுவதை ரசித்தபடி அவர் உற்சாகமாகக் கலந்து கொண்ட பதிவுகள். இந்த எளிமையே அழகு.
அண்மைக் காலங்களில் வசனத்திற்காக மீண்டும் மீண்டும் நினைக்கப்படும், பாராட்டப்படும் திரைக்கலைஞராக கிரேசி மோகன் இருந்தார். அவ்வை சண்முகி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களை அவரது வசனத்தை ரசிக்கவென்றே திரும்பத் திரும்பப் பார்ப்பவர்கள் உண்டு. சொற்களை வைத்து விளையாடுவது அல்ல, கதையின் ஓட்டத்திற்கேற்ற நகைச்சுவைப் பொறியை, வசனங்களை வைத்தே பன்மடங்கு பெருக்கிக் கொண்டு போகும் அசாத்திய ஞானம் அவருக்கு இருந்தது. நான் எம்பிபிஎஸ் படிக்கிறேன், நீ வேணா எம்பி எம்பி பி.எஸ் படி என்று கமல், காகா ராதாகிருஷ்ணனிடம் பேசுவது, பஞ்சதந்திரத்தில், கிரானைட் கல்லை வைத்து, அடுத்தடுத்து சிரிப்பை உருவாக்கும் வசனங்கள் எழுதியது, மைக்கேல் மதன காமராஜனில் மீனை ஒரு வழி செய்தது....என்று சொல்லிக் கொண்டே போக முடியும்.
அவருக்கு நண்பர்கள் நூறுகளில் அல்ல, ஆயிரக்கணக்கில்தான் இருந்திருப்பார்கள். இன்னும் பிடிபடாத விஷயம், ஒரு தடவை கூட நேரில் பார்க்காமல், முன்பின் அறிமுகம் அற்ற ஒருவரிடம் வருடக்கணக்கில் அவர் நட்பு பாராட்டிக் கொண்டிருந்தது எப்படி சாத்தியம்? இத்தகைய அனுபவம் வேறு எத்தனையோ பேருக்கும் இருக்கக் கூடும். ஒரு வாரம் பேசாது இருந்தால் முதலில் அழைப்பவராக அவர் இருந்தார். இரண்டு மூன்று நாட்கள் வெண்பாக்களுக்கு பதில் எழுதாமல் இருந்தால், உடம்பு சரியில்லையா என்று விசாரிப்பவராக இருந்தார். தனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று தட்டுப்பட்டால் அதைக் குற்றம் சொல்வதை விட லேசான வருத்தத்தோடு கடந்து செல்பவராக வாழ்ந்தார். தமது சொந்த நம்பிக்கைகளைத் தற்காத்துக் கொண்டே, அதற்கு அப்பாற்பட்ட மனிதர்களையும் நேசிக்கப் பழகி இருந்தார்.
சிரித்து வாழ வேண்டும் என்பதை வாழ்க்கை இலக்கணமாக லட்சக்கணக்கான மக்களுக்குக் கற்பிக்க வந்தவர்போல் திகழ்ந்தார். எல்லோரையும் கொண்டாடத் தெரிந்தவராக விளங்கினார். சிரிப்பே இயல்பாகவும், குழந்தைத் தன்மையே வாழ்க்கை முறையாகவும், அன்பே நெறியாகவும் அமைந்திருந்தது அவரது பாடத்திட்டம். அதில் 93.5 எஃப் எம் அல்ல, 100 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தார்.
இப்போதும், இரவுகளில் மெயில் இன்பாக்ஸ் பார்க்கும்போது, சட்டென்று வந்து விழுந்துவிடாதா அவரது மெயில் ஏங்குகிறது நெஞ்சம். அதிகாலையில் மெயில் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் அவரது வெண்பா வந்திருக்குமா என்று தேடுகின்றன கண்கள். அவரோடு மின்னஞ்சலில் அன்றாடம் நடந்த வெண்பா பரிமாற்றம், அவரது கனிவான பேச்சு, மரணத்தை முன் வைத்து என்ற என் கட்டுரையை வாசித்துவிட்டு, அவர் எழுதிய அற்புத வெண்பாவும், அதோடு நிறைவுறாத உள்ளத்தோடு முதன்முறை அழைத்துப் பேசிய அந்தப் பேச்சும் மறவாது ஒரு நாளும்:
மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்
வரணும் ரமணனென்ற வார்த்தை, -பெறணும்
அவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்
சிவனருளுன் சீமந்தச் சேய்.
அவர் மிகவும் அன்புறப் பழகியதால், ஒரு கட்டத்தில், "உண்மை சொல்கிறேன் அய்யா, நீங்களோ பரம ஆத்திகன், நான் நாத்திகன்" என்று சொன்னபோது, அசாத்திய சிரிப்பைச் சிந்திய மோகன், நீங்கள் நாத்திகன் அல்ல, நாட்டி கன் (Naughty Gun) என்று ஆங்கில மொழிக்கு மாறிக் குறும்பாக ஏற்றுக் கொண்டதையும் எந்நாளும் மறக்க முடியாது.
இந்தியன் வங்கியில் முக்கியப் பதவியில் பணியாற்றி ஒய்வு பெற்ற அவரது தந்தை ரங்காச்சாரி, ஒரு நிறுவனத்திற்குள் தனது ஹாஸ்ய உணர்ச்சியைப் பரிமாறி மகிழ்ந்தவர். மோகன் அதைப் பரந்த பொதுவெளியில் பன்மடங்கு அதிகமான மக்களுக்குக் கொண்டு சேர்த்துத் தந்தையின் பெயரையும் நிலை நாட்டியவர். என்றென்றும் நிலைத்துவிட்டவர்.
தொடர்புக்கு: sv.venu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT