Published : 10 Jun 2020 01:08 PM
Last Updated : 10 Jun 2020 01:08 PM
நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட பண்டிகைகள், இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளோடு சுருங்கிப்போனது துரதிர்ஷ்டமே. இருந்தாலும் சில திருவிழாக்கள் இன்னும் பாரம்பரிய முறையில் சில கிராமங்களில் கொண்டாடப்பட்டுதான் வருகின்றன. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றான பழையசீவரத்துக்கு ஒரு திருவிழா நாளில் செல்ல நேர்ந்தது.
பழையசீவரம் செங்கல்பட்டிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள குக்கிராமம். பாலாறு, செய்யாறு, வேகவதி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். ஊரின் நடுவே உள்ள ஒரு மலைக்குன்றில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு நாள் பழையசீவரம் நோக்கிய பேருந்துப் பயணம் தொடங்கியது.
குழந்தைகளின் மகிழ்ச்சி
பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. நடந்து செல்ல வேண்டியிருந்தது. பசுமைக் கம்பளத்தின் நடுவே வளைந்து ஊர்ந்து செல்லும் தார்ச் சாலையில், சீர்கெடாத காற்றைச் சுவாசித்தபடி, நடந்து சென்றோம். கொஞ்சம் கொஞ்சமாக ஊர் மக்களின் முகங்கள் கண்ணில் தென்பட ஆரம்பித்தன.
வாழ்க்கையைக் கொண்டாடவே பிறந்ததுபோல் இருந்தன அந்த முகங்கள். சிறுவர்கள் தங்கள் மிதிவண்டி சக்கரங்களில் வண்ணத்தாள்களை ஒட்டியபடி ‘ஹோ..’வென உற்சாகக் குரலுடன் திரிந்ததைப் பார்த்தபோது, நகரங்களில் வாழும் குழந்தைகள் இழக்கும் பால்ய பருவத்தை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.
வேரை நோக்கிய பயணம்
ஊரில் நுழைந்ததுமே கண்ணில் பட்ட பெருங்கூட்டத்தைக் கண்டவுடன் ஆச்சரியம்தான். சாலையின் இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் சொகுசுக் கார்களும் வேன்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மக்கள் எவ்வளவு உயர்ந்தாலும், இளைப்பாற இன்னும் தங்கள் வேர்களைத் தேடி வருவதை அது உணர்த்துவதாக இருந்தது. அதனிடையே நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டர்களும் மாட்டுவண்டிகளும் கிராமங்களில் மிச்சமிருக்கும் சமத்துவத்தைக் காண முடிந்தது.
வறண்டு போன பாலாறு
அங்கே பலவகையான பொருள்களை விற்கும் பெரும் சந்தை ஒன்று இருந்தது. வாயில் எச்சில் ஊறும்படி அடுக்கிவைக்கப்பட்டிருந்த பலவகை இனிப்புப் பண்டங்கள் கண்களைக் கவர்ந்தன. மக்களும் பெரும் எண்ணிக்கையில் அதைச் சுற்றி ஆங்காங்கே இருந்த மணல் திட்டுகளில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடத்திலிருந்து கொஞ்சம் கீழே இறங்கிச் சென்றபோது, அந்த இடம்தான் பாலாறு ஓடும் இடம் என்று தெரியவந்தது. தண்ணீரே இல்லாமல், வறண்டு கிடந்தது பாலாறு.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மூதாட்டி, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மாட்டுப்பொங்கல் அன்று நடக்கும் பரிவேட்டையில் கடை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்போது இவருடன் இவருடைய மகளும் மருமகளும் சேர்ந்து கடை போட்டுள்ளனர். கரைபுரண்டோடும் பாலாறு, மனிதர்களின் பேராசையால் இப்படி மாறிப்போனது பற்றி வருத்தப்பட்டுப் பேசினார்.
பேரம் பேசும் மக்கள்
பரிவேட்டைக்குச் சாமி சிலையைத் தூக்கிக்கொண்டு குன்றின் உச்சியில் உள்ள கோயிலிலிருந்து இறங்கும் மக்களைப் பார்த்தபடியே, “இந்த வருடம் கொஞ்சம் கூட்டம் அதிகம்” என்றார். அழகு நிறைந்த தன் நிறைமாதக் கர்ப்பிணி மகளை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் விற்கும் அலங்காரப் பொருட்களைக் காண்பித்தார். “எல்லாம் நாங்களே செய்தது” என்று பெருமையுடன் கூறினார். பெரிய வணிகக் கடைகளில் பேரம் பேசாமல் வாங்கும் மக்கள், இவர்களிடம் பேரம் பேசுவது கொஞ்சம் வியப்புதான்.
நீங்காத நினைவு
ஆகாயத்தைக் கூரையாகப் பெற்றால், வாழ்க்கையில் நாம் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை முறை ஒரு சாட்சி. “வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போ சாமி” என்று சொன்னவர், காசு வாங்க மறுத்ததால், அவர் நினைவையும் அந்த மக்களின் மகிழ்ச்சியையும் ஒளிப்படமாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்.
படங்கள்: முகமது ஹுசைன்
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT