Last Updated : 07 Jun, 2020 12:22 PM

1  

Published : 07 Jun 2020 12:22 PM
Last Updated : 07 Jun 2020 12:22 PM

அன்று பலாப் பழம்; இன்று அன்னாசிப் பழம்- தொடரும் யானைகளின் துயரம்

கேரளத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடியால் கர்ப்பிணி யானை காயமடைந்து உயிரிழந்த சம்பவம், மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. வெடி அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்டதா அல்லது தேங்காயில் வைக்கப்பட்டதா; யானைக்காக வைக்கப்பட்டதா அல்லது காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டதா எனும் விவாதம் தொடங்கி, ‘மதவாத’ அரசியல் வரை பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

வன விலங்குகள் இப்படிப் பரிதாபமாக உயிரிழக்கும், காயமடையும் சம்பவங்கள் புதிதல்ல.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வனவிலங்கு ஆர்வலர் மசினக்குடி நைஜில் ஓட்டர், “17 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் வனப்பகுதியில் ஒரு யானை இறந்துகிடந்தது. அதன் போஸ்ட்மார்ட்டத்திற்கு வனத் துறை கால்நடை மருத்துவர்களுக்கு உதவ நானும் சென்றிருந்தேன். அந்த யானையின் தாடையைக் கிழித்து வாயை உள்நோக்கும்போது ஒரு விஷயம் புலப்பட்டது. நாக்கிலிருந்து தொண்டைக்குழி வரை கடுமையாக வெடித்துச் சிதறிக்கிடந்தன. ஏதோ ஒரு வெடிதான் அந்த யானையின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள் அதை அப்போதைக்கு வெளிப்படுத்தவில்லை. அப்போதே யானைக்கென்றே குறிப்பிட்ட வெடி வைக்கும் வழக்கம் இருந்தது” என்றார்.

ண்டவாளத்தில் 19 மாத யானை சிசு

இன்றைக்கு, கர்ப்பத்தில் இருந்த ஒரு மாத யானை சிசு இறந்துகிடந்ததைப் பார்த்துப் பதறிய உள்ளங்கள் கோவை குரும்பபாளையத்தில் ரயிலில் சிக்கி இறந்த மூன்று யானைகளின் கதையையும், அவற்றின் புகைப்படங்களையும் பார்த்திருக்க முடியாது. அவற்றில் ஒரு யானை நிறை மாத கர்ப்பமாக இருந்தது. அந்தச் சமயத்தில் அப்பகுதியில் இருக்கும் கிராமத்துத் தோட்டங்காடுகளை ஒரு யானைக் கூட்டம் சூறையாடிக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும், டமாரம் கொட்டியும் யானைகளை விரட்டிக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் கேரள எக்ஸ்பிரஸ் வரும் நேரத்தில், குகை போன்ற ரயில் தண்டவாளத்திற்குள் இந்த யானைக் கூட்டத்தை உள்ளூர் மக்கள் விரட்டிவிட்டனர். படு வேகமாக வந்த ரயிலில் சிக்கிய நான்கு யானைகளில் ஒன்று மட்டுமே தப்பியது. மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணமடைந்தன. அதில் கர்ப்பிணி யானையின் வயிற்றில் இருந்த 19 மாத சிசு அப்படியே கனகாம்பரப்பூ நிறத்தில் பரிதாபமாகத் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து தண்டவாளத்தில் கிடந்தது. அது பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது. ‘இப்படியும் ஓர் அக்கிரமம் உண்டோ?’ என்று பலரும் வேதனைப்பட்டனர்.

துதிக்கை இழந்த ரிவோல்டா

கூடலூர் மாவனல்லா சீகூர் வனத்தில் தோட்டம் வைத்திருக்கும் ஒருவர், தன் தோட்டத்திற்குள் வரும் காட்டு யானைகளுக்கு தர்பூசணி, மற்றும் பலாப்பழத்தைப் போட்டு வைப்பார். யானைகளும் இரவு பகல் பாராது வந்து இப்பழங்களை விரும்பி உண்டு, தொட்டியில் உள்ள தண்ணீரைக் குடித்துவிட்டு செல்லுவது வழக்கமானது.

அதில் ஒவ்வொரு யானைக்கும் ஒரு பெயரிட்டிருந்தார் அந்தத் தோட்டக்காரர். ஒரு நாள் ‘ரிவோல்டா’ எனும் பெயர் கொண்ட யானை, கீழே கிடந்த தர்பூசணியைத் துதிக்கையால் உருட்டி மேலேற்றி சாப்பிட முடியாமல் தவித்தது. புல்லுக்கட்டை உதறி எடுக்க இயலவில்லை. உற்றுப்பார்த்த பிறகுதான் தெரிந்தது. அதன் துதிக்கை நிலத்தில் முட்டவில்லை. சுமார் 9 அங்குல நீளத்திற்கு அதன் முனை வெட்டுப்பட்டு காணாமல் போய் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தக் காயம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

அது சாப்பிட அவதிப்படுவது கண்டு தர்பூசணியைப் பெரிய கம்பில் கட்டி அதன் வாய் அருகில் கொடுத்தார் தோட்டக்காரர். யானை வாங்கிச் சாப்பிட்டது. அப்படியே அடுத்தடுத்த நாட்களும் சாப்பிட்டது. ஒரு நாள் துதிக்கைக்குக் கீழே நன்றாகவே சீழ்பிடித்துவிட்டது. தோட்டக்காரர் தனக்கு தெரிந்த வனத் துறை கால்நடை மருத்துவரை அழைத்தார் சிகிச்சைகள் செய்தார். ஒரு கட்டத்தில் ரிவால்டோவிற்கு புண் சரியாகிவிட்டது. ஆனால் எந்த உணவுப்பொருளையும் தன் துதிக்கையால் எடுத்து சாப்பிட இயலவில்லை. யாராவது மனிதர்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடும்.

இரக்கமுள்ள அந்தத் தோட்டக்காரர் பின்னாளில் காலமானார். அதற்குப் பிறகு கூடலூர் மாவனல்லா சாலையில் குறுக்கே நின்று மனிதர்களிடம் பிச்சையெடுக்க ஆரம்பித்தது ரிவோல்டா. இப்போதும், அப்பகுதியில் துதிக்கை முனை முறிந்த காட்டுயானை சாலையில் உங்களைத் தடுத்து பழங்கள் வாங்கிச் சாப்பிடுகிறதென்றால் அது நிச்சயம் ரிவோல்டாவாகத்தான் இருக்கும்.

கடவாய் கிழிந்த கடமான்

17-18 ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் இது. அது ஒரு பெரிய கடமான். கூடலூர் பாடந்துறை அருகே மக்கள் அதைப் பார்த்தார்கள். அதன் கீழ் தாடை சுத்தமாகக் கசகசத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் நாக்கு இரண்டடிக்கு வெளியே தெரிந்தது. கண்கள் வெளியே பிதுங்கிக்கொண்டிருந்தன.

“காய்வெடிதான் இதற்குக் காரணம். இதைச் செய்த யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். கடமானால் எதுவும் சாப்பிடவும் முடியாது; தூங்கவும் முடியாது. எனவே அதைப் பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று மக்கள் கோரிக்கையும் வைத்தனர். ஆனால், வன அதிகாரிகளோ அதைக் காப்பாற்ற முன்வரவில்லை. “அந்தக் காயம் நிச்சயம் வெடியினால் ஏற்பட்டதல்ல. சிறுத்தைகள் தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம்” என்று பதில் சொல்லியே காலம் கடத்தினார்கள்.

மக்களும் சளைக்கவில்லை. “அந்தக் காயம் காய்வெடியால் ஏற்பட்டதுதான். இந்த வெடிகள் கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டில் ரூ.40, ரூ.50 விலையில் கிடைக்கின்றன. இதே வெடிகள் ஊட்டி, கல்லெட்டி கிராமத்தில் குறைந்த விலைக்குத் தயாரித்து விற்கப்படுகின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்களை வெடிமருந்து தடைச் சட்டத்தில் போலீஸாரோ, வனத் துறையினரோ கைது செய்யலாம்தான். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அதில் வரும் மாமூல் தடைப்பட்டுவிடுமே” என்றெல்லாம் குற்றச்சாட்டினார்கள்.

ஒரு சில நாட்களில் அந்தக் கடமான் வனப் பகுதியில் செத்துக்கிடந்தது. அதை அடக்கம் செய்ததுடன், காய்வெடி சமாச்சாரத்தையும் ஆழக்குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டனர் வனத் துறையினர்.

கொதிக்கும் தாரை ஊற்றிய கொடூரர்கள்

இது 6 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை. காலை 11 மணி. 4-வது கொண்டை ஊசி வளைவின் முனையில் 3 யானைகள் நின்றிருந்தன. அங்கு பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. யானைகள் ஒவ்வொன்றும் துதிக்கையை உயர்த்தி அந்த வாசனையை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தன. அதில் சின்ன குட்டிக்குப் படு உற்சாகம். தாய் யானையின் துதிக்கையைப் பிடித்துக்கொண்டு இழுத்தது. தாய்க்கும் வாயிலிருந்து எச்சில் வழிந்தது. அடுத்ததாக நின்ற சகோதரி யானையையும் அழைத்துக்கொண்டு அந்த வளைவில் இறங்கியது பெரிய யானை.

அடுத்த திருப்பத்தில் ஏராளமாய் கடைகள். அதில் கூறு போட்டு, குவிக்கப்பட்டிருக்கும் பலாப் பழங்கள். வெட்டி வைக்கப்பட்ட பழங்கள். அந்த பலாப்பழக் கடைகளை நோக்கித்தான் குன்றுகள் போன்று நகர்ந்தன யானைகள். அதைப் பார்த்ததும் டீக்கடை, பலசரக்கு கடை, உணவு விடுதிகளின் முன்பு நின்றவர்கள், வாகன ஓட்டிகள் எல்லாம் சிதறினர். ஆனால் அந்த பலாப்பழக் கடைக்காரர்களுக்கு மட்டும் உள்ளூரக் கெக்கலிப்பு. குவிக்கப்பட்டிருந்த பலாப் பழங்களுக்குப் பின்னே உயரமான மேஜை அமைத்து, அதற்கு பின்னே உயரமான தடுப்புச் சுவற்றின் மேடை மீது சிலர் அமர்ந்திருந்தார்கள். பக்கத்தில் எரியும் அடுப்பு. அதன் மீது ஒரு டப்பாவில் தார் கொதித்துக்கொண்டிருந்தது.

சுற்றுச்சுவர் மேடை மீது அமர்ந்திருந்தவரின் கையில் ஒரு பத்தடிக்கும் குறையாத சவுக்குக்குச்சி. அதன் முனையில் துணி சுற்றப்பட்டிருந்தது. யானைகள் கடையிலிருந்து பலாவை எடுத்ததுதான் தாமதம்… ஒருவர் தன் பக்கத்தில் கொதித்துக்கொண்டிருந்த தார் சட்டிக்குள் ஒரு கரண்டியைவிட்டு கொதிக்கும் தாரை எடுத்து யானைகளின் மீது வீசினார். சூடுபட்ட யானைகள் வேதனையில் பிளிறத் தொடங்கின. மறுபுறம் ஒருவர் சவுக்குக் குச்சி பந்தத்தைத் தாரில் விட்டு, தீயில் கொளுத்தி, பலாவை எடுத்துக்கொண்டிருந்த யானையின் துதிக்கை மீது அதை அப்படியே செருகினார். ஒரு யானையின் முதுகில் வீசப்பட்ட தார் துளிகள் தீப்பற்றிக்கொண்டது.

யானைகள் வேதனையில் ஓலமிட்டபடி ஓடின. சாலையில் நின்று துடித்தன. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் அந்த சாலையில் நின்று துடித்துக்கொண்டிருந்தன யானைகள்.

நீலகிரியின் நுழைவு வாயிலாக விளங்கும் பர்லியாறு பாலத்தின் அருகே இதுபோன்ற கொடூரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அரங்கேறிவந்தன. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சியை மதிமாறன் என்ற புகைப்படக்காரர் எடுத்து செய்தியாக

வெளியிட, உடனே அங்கே பலாப்பழக் கடைகளைத் தடை செய்தார் நீலகிரி ஆட்சியர்.

அன்றைக்கு பலாப் பழம் சாப்பிட வந்த யானைகள் மீது கொதிக்கும் தாரை வீசிய மனிதன் இன்றைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துத் தருகிறான் - அவ்வளவுதான் வித்தியாசம். இன்றைக்கு அன்னாசிப்பழ வெடியில் துவண்ட யானை தண்ணீரில் நின்று தன் சூட்டைத் தணித்து மூச்சை நிறுத்தியது. அன்றைக்குக் கொதிக்கும் தாரால் கருகிய யானைகள் எந்த ஆற்றில் நின்று சூட்டைத் தணித்தனவோ, எங்கே நின்று இறந்தனவோ, யார் கண்டார்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x