Published : 06 Jun 2020 03:09 PM
Last Updated : 06 Jun 2020 03:09 PM
இந்தியாவில் கரோனா பாதிப்பின் உச்சத்தில் இருக்கிறது மகாராஷ்டிர மாநிலம். குறிப்பாக, தமிழர்கள் மிகுதியாக வசிக்கும் தாராவியில் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தாராவியில் கரோனாவின் தீவிரம் குறைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மகாராஷ்டிராவில் இதுவரை 80,229 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2,849 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். நோய் உறுதி செய்யப்படாதவர்கள், மருத்துவமனைக்கே வராமல் இறந்தவர்களின் எண்ணிக்கை இதில் சேராது. ‘இந்தியாவின் வூஹான்’ என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு மும்பை நகரில் இதுவரை 1,519 பேர் கரோனாவால் இறந்திருக்கிறார்கள்.
இவ்வளவு மோசமான சூழலிலும் தாராவியில் நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து வருகிறது எனும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுபற்றி தாராவியைச் சேர்ந்த முருகன் கூறுகையில், “மே மாதத்தில் தாராவியில் தினமும் 50 முதல் 100 பேர் வரையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் தொற்றின் தீவிரம் குறைந்திருக்கிறது. ஜூன் 1-ம் தேதி 34 பேர், 2-ம் தேதி 25 பேர், 3-ம் தேதி 19 பேர், 4-ம் தேதி 23 பேர், 5-ம் தேதி 17 பேர் என்று படிப்படியாக நோய்த் தொற்று குறைந்துவருகிறது. இதுவரையில் மொத்தம் 1,889 பேருக்கு நோய் கண்டறியப்பட்டதாகவும், அதில் 902 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதெற்கெல்லாம் முக்கியக் காரணம், தாராவியில் வாழ்கிற வடமாநிலத் தொழிலாளர்களில் 80 சதவிகிதம் பேரும், தமிழர்களில் 20 சதவிகிதம் பேரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதுதான். இதனால், இங்கே ஜனநெருக்கடி குறைந்திருக்கிறது. இருந்தாலும் வீடுதோறும் அத்தனை பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அதுவும் நடந்துவிட்டால் தாராவியில் பிரச்சினை தீர்ந்துவிடும். ‘கரோனா ஹாட் ஸ்பாட்’ என்று தாராவியை அடையாளப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் அதைத் தளர்த்திவிட்டால், இங்கிருந்து வேலைக்குச் செல்லவும் தடையிருக்காது” என்றார்.
‘தாராவியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு சிறப்பு ரயில் இயக்க அனுமதிப்பதில்லை’ என்று தொடர்ந்து தாராவி தமிழர்கள் புகார் கூறுகிறார்கள். இதன் எதிரொலியாகத் தமிழர்களுக்குக் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மும்பை இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT