Published : 06 Jun 2020 10:34 AM
Last Updated : 06 Jun 2020 10:34 AM
துரைப்பாக்கம் தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரியில் விஸ்காம் படித்துவரும் வடசென்னை மாணவர் பிரனிஷ். கரோனா ஊரடங்கால் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பதே தெரியாத நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் கைபேசியில் டிக்டாக் செய்வது, இன்ஸ்டாகிராமில் தங்களுடன் படிக்கும் மாணவர்களுடன் தொடர்பில் இருப்பது, வலை விளையாட்டுகள், அரட்டை போன்ற விஷயங்களிலேயே பெரிதும் தங்களின் பொழுதைக் கழிக்கின்றனர்.
ஆனால் பிரனிஷ் இது போன்ற பொழுதுபோக்குகளிலிருந்து விலகி, தான் படிக்கும் படிப்புக்கேற்ப சில தன்னார்வ அமைப்புகளுக்காகவும் தன்னை நாடிவரும் நண்பர்களுக்காகவும் தனிப்பாடல்களுக்கான காட்சித் தொகுப்பை குறிப்பிட்ட பாடலுடன் இணைக்கும் பணியை ஆர்வமுடன் செய்துவருகிறார். இதுகுறித்து பிரனிஷ் நம்மிடம் பேசியதிலிருந்து….
“சுயம் தன்னார்வ அமைப்புக்காகவும் நண்பர்களுக்காகவும் கரோனா விழிப்புணர்வு பாடல், தேச பக்திப் பாடல்கள், ஆன்மிகம் சார்ந்த பாடல்களுக்கும் பொருந்தும் வகையில் ஒளிப்படங்களைக் கொண்ட உருவாக்கப்படும் காட்சித் தொகுப்பை உருவாக்கித் தருகிறேன். ஆண்ட்ராய்ட் போன்ற கைபேசி வைத்திருப்பவர்கள் எல்லோராலுமே இதைச் செய்ய முடியும். கின்மாஸ்டர் எனும் (KineMaster) செயலியைக் கொண்டே பாடலுக்கேற்ற காட்சிகளை இணைக்கும் பணியைச் செய்கிறேன். இந்தச் செயலியின் மூலம் பாடலின் நீளத்துக்கு எத்தனை படங்கள், எந்த அளவுகளில் தேவைப்படும் (படங்களின் அளவை தேவைக்கேற்ப வெட்டிக் கொள்ளும் வசதி) என்பதை இந்தச் செயலியின் மூலம் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த படங்களை இந்தச் செயலியின் மூலம் பாட்டுடன் ஒன்றிணைக்கலாம். பல்லவியில் இரண்டு வரிகள் திரும்பவும் சரணத்துக்கு பிறகு மீண்டும் ஒலிக்கும் இடங்களில் அந்த வரிகளுக்கு ஏற்கெனவே தேர்வு செய்த படங்களையே திரும்பவும் டூப்ளிகேட்டாக பயன்படுத்தும் வசதியும் இந்தச் செயலியில் இருக்கிறது. படங்களை தேர்ந்தெடுத்தவுடன் செயலியில் இருக்கும் எக்ஸ்போர்ட் பட்டனை சொடுக்கினால், பாடலோடு நாம் ஒன்றிணைத்த படங்களும் பாடலோடு இணைந்து ஒளியும், ஒலியுமாக திரையில் ஒளிரும்.
இந்தச் செயலியை உங்களின் கைபேசியில் தரவிறக்கம் செய்து குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள், திருமண நாள்களில் அவர்களுக்கு நீங்களே உருவாக்கும் பாடல்களாக பரிசளிக்கலாம். நீங்களும் முயன்றுதான் பாருங்களேன்” என்கிறார் பிரனிஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT