Published : 03 Jun 2020 06:05 PM
Last Updated : 03 Jun 2020 06:05 PM

கரோனா ஊரடங்கு காலத்தில் 20 ஆயிரம் பேருக்கு உணவளித்த ஓட்டல் உரிமையாளர்: தொடரும் சேவை

திண்டுக்கல்லில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் உரிமையாளர் ஷேக்முஜிபுர் ரகுமான்.

திண்டுக்கல்

ஊரடங்கு தொடங்கிய முதல் இன்றுவரை சாலையோரம் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் வருவாய் இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவளித்து வருகிறார் திண்டுக்கல்லை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கே.ஷேக்முஜிபுர் ரகுமான்.

திண்டுக்கல்லில் பிரியாணி கடை நடத்திவருபவர் கே.ஷேக்முஜிபுர் ரகுமான். இவர், ஊரடங்கு தொடங்கிய முதல்நாளே சாலையோரம் உணவின்றி தவித்தவர்களுக்கு தனது சொந்த செலவில் உணவுகளை வழங்கதொடங்கினார்.

திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லூரி அருகே பாலத்தின் அடியில் தங்கியிருப்பவர்கள் பசியுடன் இருக்கிறார்கள் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவ, அன்று உணவு பொட்டலங்கள் தீர்ந்துவிட்டநிலையில் உடனடியாக சமைத்து எடுத்துச்சென்று மாலை 3 மணிக்கு மேல் அவர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.

தாமதமாக உணவு கொண்டுவந்து வழங்கியதற்கு பசியால் வாடிய மக்களிடம் மன்னிப்பும் கோரினார். யாரேனும் பசியில் உள்ளனரா, அவர்கள் குறித்து தகவல் அளியுங்கள் என தனது அலைபேசி எண்ணை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார். தகவல் கிடைத்தவுடன் தேடிச்சென்று உதவினார்.

உணவுபொட்டலங்களை தனது காரில் எடுத்துக்கொண்டு திண்டுக்கல் நகர வீதிகளில் உலாவந்தார். சாலையோரம் பசியால் வாடியவர்களை கண்டவுடன் காரை நிறுத்தி உணவுப் பொட்டலம், தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து ஒரு வாய் அவர்கள் எடுத்து உண்டபிறகே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

இவரின் செயலைப் பார்த்த இவரது நண்பர்கள் மற்றும் உதவும் மனம்கொண்டவர்கள் தங்கள் பங்களிப்பாக சிறு தொகையை சேவைக்காக வழங்கினார்.

இது இவருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. தனது ஓட்டல் பணியாளர்களை கொண்டு சமைத்து, ஓட்டலில் வேலைபார்ப்பவர்கள் நண்பர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து கரோனா ஊரடங்கு காலத்தி்ல் பசியால் வாடுபவர்களை கண்டறிந்து உணவு வழங்குவதை தொடர்ந்தார்.

இதுவரை 20 ஆயிரத்திற்கு மேல் உணவு பொட்டலங்களை விநியோகித்துள்ளார். கரோனா ஊரடங்கு தொடக்கத்தில் பலர் உணவு வழங்கியபோதும், அவர்களால் தொடர்ந்து அந்த சேவையை செய்யமுடியவில்லை. தனது நண்பர்கள் உதவியுடன் இன்று வரை ஷேக்முஜிபுர்ரகுமான் தொடர்கிறார்.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதிய வருமானம் இல்லாதநிலையில் இவரது கடையில் மதிய உணவை தற்போது இலவசமாக வழங்கிவருகிறார்.

இதுகுறித்து கே.ஷேக்முஜிபுர்ரகுமான் கூறியதாவது:

ஊரடங்கு தொடங்கியவுடன் யாரும் பசியால் வாடக்கூடாது என முடிவு செய்து உணவு வழங்கும் பணியை தொடர்ந்தேன். ஒரு வாரம் நான் எனது தனிப்பட்ட தொகையை செலவழித்த வழங்கினேன்.

இதையடுத்து என்னுடன் நண்பர்கள் கைகோர்க்க தொடங்கினர். இது எனக்கு மேலும் ஊக்கமளித்தது. வழிபாட்டுத்தலங்களில் யாசகம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள் என கண்டறிந்து உதவினோம். எனது ஓட்டலில் பணிபுரிவோர் சம்பளத்தை எதிர்பார்க்காமல் பணிபுரிந்தனர். நண்பர்களும் உதவியாக இருந்தனர். இயல்புநிலை தொடரும் வரை இந்த சேவை தொடரும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x