Published : 03 Jun 2020 10:35 AM
Last Updated : 03 Jun 2020 10:35 AM
பாடல்களிலும் பின்னணி இசையிலும் வாத்தியங்களைப் பயன்படுத்திய விதத்திலும் தனி முத்திரை பதித்தவர் இளையராஜா என்று அவரின் சாதனைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இன்னுமான சாதனைகளுக்கு உரியவர்தான் இளையராஜா.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். காலத்தில், முத்துராமன், ஜெய்சங்கர் காலத்தில் பத்துப்பனிரெண்டு பாடல்களும் ஏழெட்டுப் பாடல்களும் இருந்தன. இவர்களின் படங்களில், பாடகர் கதாபாத்திரங்கள் என்பது மிக அரிதான ஒன்றுதான். ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ போல மைக்கில் பாடுகிற பாடல் அத்திப்பூத்தது போலதான் இருக்கும். ‘ஆண்கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக’ என்று எப்போதாவது மேடைப் பாட்டு வந்தது.
‘பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்’ என்ற பாடலும் அப்படித்தான். ‘தூக்கணாங்குருவிக் கூடு’ என்று ‘வானம்பாடி’யில் தேவிகா பாடுவார். படத்தில் தேவிகா கேரக்டர் நன்றாகப் பாடும் திறன் கொண்டவர் என்பதாக இருக்கும்.
விழாவில் பாடுவது, எல்லோரும் சொன்னதற்காகப் பாடுவது, கப்பலில் பாடுவது என்றெல்லாம் இருந்தது அப்போது. விழாவில், மேடையில் மைக் பிடித்து, ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?’ என்று ‘சூரியகாந்தி’ படத்துக்காக, கண்ணதாசனே திரையில் தோன்றி பாடினார்.
‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில், ‘ஒருநாள் யாரோ’ என்று ஜெயலலிதா பாடுவார். அதேபோல், ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில், ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடலை கே.ஆர்.விஜயா ரேடியோ ஸ்டேஷனில் பாடுவார். ஆனால், படமோ கதைக்களமோ அதுவாக இல்லை.
‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்’ என்று ஜெயசித்ரா ‘அரங்கேற்றம்’ படத்தில் பாடுவார். இதில் கதையோ கதைக்களமோ பாடுவதாகவும் பாட்டைச் சுற்றியும் என்றெல்லாம் அமைக்கப்படவில்லை.
எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ இந்திப் படத்தின் ரீமேக். இதில், ‘அன்பு மலர்களே’ என்ற பாடல், குடும்பப் பாடலாகவே இருந்தது. இந்தப் பாடல்தான் பிரிந்த சகோதரர்களை ஒன்று சேர்க்கும் என்பதாக கதையாக, கதையின் ஆதாரமாக இருந்தது. இதன் பின்னர், இப்படியான குடும்ப, நட்பு, காதல் பாடல்கள் கொண்ட படங்கள் வந்தன. ஒருகட்டத்தில், இப்படியான பாடல்கள் கேலிக்காகவும் கிண்டலுக்காகவும் பயன்படுத்தப்பட்டன என்பது வேறு விஷயம்.
நாயகன் பாடகர். மேடைக் கச்சேரிப் பாடகன் என்று முழுக் கதையாக இருந்தது ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில். படத்தலைப்பின் கீழே, ’இது ஒரு தேனிசை மழை’ என்று போடப்பட்டது. அநேகமாக, படத்தின் கீழே இப்படியான சப் டைட்டில் போடப்பட்ட ஆரம்பம், இதில்தான் தொடங்கியிருக்கும். கே.பாலசந்தர், எம்.எஸ்.வி., கமல், ரஜினி என கூட்டணியின் மறக்கமுடியாத படமாக அமைந்தது.
‘நேற்று இன்று நாளை’ படத்தில், ‘பாடும் போது நான் தென்றல் காற்று’ வெகு பிரசித்தம். இப்படியாகத்தான் தமிழ் சினிமாவில் பாடல்களும் மைக் பாடல்களும் இருந்தன. இந்த சமயத்தில், 76-ம் ஆண்டு இளையராஜா ‘அன்னக்கிளி’ மூலம் திரையுலகிற்கு வந்தார். ‘அன்னக்கிளி’ நன்றாகப் பாடுவாள் என்று கதை அமைக்கப்பட்டிருந்தது.’இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ என கமலிடம் மைக் கொடுக்கப்பட்டது. ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது’ என இளையராஜாவே வந்து பாடினார்.
‘நிழல்கள்’ படத்தில் சந்திரசேகர் இசைக்கலைஞராக நடித்தார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் மோகன் திரை இசைப் பாடகராக நடித்தார். இதன் பிறகு, தமிழ் சினிமாவில், நாயகனோ நாயகியோ பாடகர், இசையமைப்பாளர், வாத்தியங்கள் இசைப்பவர் என்றெல்லாம் அதிகமாக வரத்தொடங்கின. ‘உதயகீதம்’ படத்தில் மோகன் பாடகரானார். அந்தக் காலத்தில், மோகனுக்கும் முரளிக்கும் மைக் கொடுத்துவிடுவார்கள். ‘நான் பாடும் பாடல்’ படத்தில், அம்பிகா நன்றாகப் பாடுவார் என்றும் மேடைகளில் பாடுபவர் என்றும் சினிமாவுக்கு ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் ப்ளாஷ்பேக் கதையாகச் சொல்லப்பட்டது. ’ராஜபார்வை’ படத்தில் கமல் வயலின் கலைஞராக, பார்வையற்றவராக நடித்திருப்பார். பிஜிஎம் இசைக்கோப்புக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
‘புன்னகை மன்னன்’ படத்தில், நடனக்கலைஞர் கமல். டான்ஸ் கற்றுக் கொடுப்பவர். ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில், ரகுமான் பாடகர். ‘சிந்து பைரவி’யையும் ஜேகேபியையும் மறக்கவே முடியாது நம்மால்!
‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் பாட்டுக்காரராகவும் பாட்டு சொல்லிக் கொடுப்பவராகவும் வருவார் விஜயகாந்த். அவரிடம் பாட்டுக் கற்றுக் கொள்வார் ராதா. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் இசைக்கல்லூரி, பாடல் என முக்கிய அங்கம் வகிக்கும். மோகன், அமலா சம்பந்தப்பட்ட ‘வா வெண்ணிலா’வையும் ‘தேடும் கண்பார்வை’யையும் மனதைக் கனமாக்கிவிடும்.
முரளியின் ‘பொட்டுவைத்த நிலா’ மைக் பாடல்களில், மேடைப் பாடல்களில் முக்கியமான பாடல். ரமேஷ் அரவிந்த் கூட, ’பாட்டுவாத்தியார்’ ஆகியிருப்பார். ’வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னதம்பி’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்கிற கிராமத்துக் கதைகளிலும் கூட, நாயகனின் பாட்டை எல்லோரும் ரசிப்பதாகவும் குழந்தைகள் தூங்கிவிடுவதாகவும் தினமும் நாயகன் பாடுவதாகவும் கதை அமைத்தார்கள். மாட்டில் பால் கறந்துகொண்டே பாடும் ராமராஜனை கதையில் மட்டுமின்றி ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கினார்கள்.
‘கிழக்கு வாசல்’ படத்தில் கூட பாட்டுக் கட்டுபவராக நடித்திருப்பார் கார்த்திக். ‘ரிக்ஷா மாமா’ படத்தில் ரிக்ஷா ஓட்டும் சத்யராஜ், ஆகச்சிறந்த பாடகராகக் கதை பண்ணியிருப்பார் பி.வாசு. இவரிடம் பாடலைக் கேட்டு, கல்லூரி விழாவில் பாடி பரிசு வாங்குவார் குஷ்பு. 'வீரா’ படத்தில் ரஜினி பாடகராக நடித்திருப்பார்.
‘கரகாட்டக்காரன்’ பற்றிச் சொல்லவே வேண்டாம். கதைக்களமே அதுதான். ‘ஊரெல்லாம் உன் பாட்டு’, ‘தெம்மாங்கு பாட்டுக்காரன்’, ‘பாட்டு வாத்தியார்’, ‘புதுப்பாட்டு’, ‘உதயகீதம்’, ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘வில்லுப்பாட்டுக்காரன்’, ‘செந்தமிழ்ப்பாட்டு’ என இன்னும் பல டைட்டில்கள், இசை சம்பந்தப்பட்டதாகவே இருந்ததெல்லாம் இளையராஜா காலத்தில்தான்!
‘நீங்கள் கேட்டவை’ படத்தின் நாயகன், பாடகர். மேடைக்கச்சேரி செய்பவன். ‘ரெட்டைவால் குருவி’ படத்தில் ராதிகா பாடகி. அவரின் பாடலில் மயங்கிக் காதலிப்பார் மோகன். ‘ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி பாடகி. அவரின் பாடலைக் கேட்டதும் உலகையே மறப்பார் ரஜினி. க்ளைமாக்ஸில் பாடலே பிரதானமாக இருக்கும். ‘இதயக்கோயில்’ படத்தில் மோகன் பாடகர். ஆனால் மோகனை மட்டும் ‘மைக்’ மோகன் என்று எல்லோரும் எழுதுகிறார்கள். அவர் பல விதமாக கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். என்ன... அவர் மைக் பிடிக்கும் ஸ்டைல் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. (இதில் பழைய படங்களோ இளையராஜா காலத்துப் படங்களோ விடுபட்டிருக்கலாம். உதாரணங்களுக்காக, சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.). கஸ்தூரி ராஜா, ‘நாட்டுப்புறப் பாட்டு’ உள்ளிட்ட பல படங்களை, இசை சம்பந்தப்பட்ட படங்களாகவே அமைத்தார்.
‘கலைஞன்’ படத்தில் கமல் பாடகர். ‘சின்னத்தாயி’ கூட பாடல்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும். ‘பூவே செம்பூவே ‘ என்று ராதாரவி கூட மைக் பிடித்திருக்கிறார். ‘பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்’ என்று இளையராஜாவே பாடினார். ‘பாவலரு பாட்டு’ என்று கொண்டாடப்பட்டது. இளையராஜாவின் முகம் கொண்ட போஸ்டர்கள், விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டன. தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இளையராஜாவின் முகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எத்தனையோ பட்டங்கள் சூட்டி போஸ்டர்களில் பெரிதாகப் போட்டு விளம்பரம் செய்தார்கள்.
பார்த்திபனின் ‘இவன்’ என்ற படத்தை, செளந்தர்யாவைப் பாடகியாக்கி, சுதா ரகுநாதனைப் பாட வைத்து இசைமழையை தந்திருப்பார் இளையராஜா.
இன்னும் எத்தனையெத்தனையோ படங்கள்... பாடகராக, பாடகியாக, இசைக்கலைஞராகக் கொண்ட கதைகளாக்கப்பட்டு எண்பதுகளில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. மியூஸிக் டிரீட்மெண்டைக் கொடுத்தன.
தமிழ் சினிமாவின் போக்கை, கதைக்களத்தை இளையராஜாவின் இசை உண்டுபண்ணியது என்பதே உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT