Published : 02 Jun 2020 07:11 PM
Last Updated : 02 Jun 2020 07:11 PM

சாத்தியமில்லாத சமூக இடைவெளி: நூலகங்களை திறக்க தயங்கும் நூலகத்துறை- பயன்பாடு இல்லாமல் புத்தகங்கள் தூசி படிந்து பாழாகும் அபாயம்

கோப்புப் படம்

மதுரை

சமூக இடைவெளி, முக்ககவசம், கிருமி நாசினி, கைகழுவ தண்ணீர் போன்ற வசதிகள் நூகலங்களில் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லாததால் நூலகங்களைத் திறக்க பொதுநூலகத்துறை தயங்குவதாக நூலகத்துறை ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரளவு வசதிப்படைத்தவர்கள் வீட்டிற்கே நாளிதழ்களை வரவழைத்து நாட்டுநடப்புகளை தெரிந்து கொள்வார்கள். விரும்பும் புத்தகங்களையும் புத்தகக் கடைகளில் சொத்தமாக விலைக்கு வாங்கி நேரம் கிடைக்கும்போது வாசித்து தங்கள் அறிவை பெருக்கிக் கொள்வார்கள். கிடைக்கும் ஒய்வு நேரங்களை புத்தகங்களுடன் பொழுதுப்போக்கிக் கொள்வார்கள்.

ஆனால், சொற்ப ஊதியம் பெறும் நடுநிலை வர்க்க பொதுமக்கள், படித்துவிட்டு வேலைக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள், இன்றளவும் அன்றாட நாளிதழ்கள் வாசிப்பிற்கும், புத்தக வாசிப்பிற்கும் அரசு நூலகங்களையே நம்பியுள்ளனர்.

காலையில் எழுந்து டீ, காபி குடிப்பதுபோல அன்றாடம் வேலைக்குச் செல்லும் சராசரி மக்கள் காலை அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்களை வாசிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் காலையிலே சென்று விரும்பும் புத்தகங்களை எடுத்து ஒரே மூச்சில் வாசித்து விட்டுதான் வீட்டிற்குத் திரும்புவார்கள். ஆனால், ‘கரோனா’ ஊரடங்கு புத்தக வாசிப்பாளர்களை, அவர்கள் வாசிப்பிற்கு ஒய்வு கொடுத்து முடக்கிப்போட்டுள்ளது.

‘கரோனா’ ஊரடங்கு தளர்ப்பில் ஒவ்வொரு விதிமுறைகளாய் தளர்வு செய்து ஒவ்வொரு நிறுவனங்களையும், கடைகளையும், அரசு அலுவலகங்களையும் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், நூலக வாசகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்க்கக்கூடிய அரசு நூலகங்கள் தற்போது வரை திறக்கப்படவில்லை. தற்போது இந்த நூலகங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நூலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டால் இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை, எந்த நேரத்திலும் அனுமதி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தூய்மைப்படுத்தி வைக்கிறோம் என்றனர்.

ஆனால், அநேரத்தில் வாசகர்களை அனுமதிக்காமல் நூலகங்களை மட்டும் இவர்கள் தினமும் திறந்து வைத்து அலுவலகப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

பொதுநூலகத்துறை இயக்குனர் சமீபத்தில் அனுப்பிய சுற்றிக்கையில் புத்தகங்களை தூசி தட்டி கிருமி நாசினி அடித்து தயார்நிலையில் வைத்திருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நூகலத்திற்கு வரும் வாசகர்கள் கைகழுவுவதற்கு வசதியாக சோப்பு, குடிநீர், கிருமி நாசினி போன்றவற்றை ஏற்பாடு செய்து வையுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஏராளமான நூலகங்களில் குடிநீர் வசதியே இல்லை. அந்த நூலகங்களில் வாசகர்கள் எப்படி கை கழுவ முடியும். தமிழகத்தில் மாவட்ட மைய நூலகங்களைத் தவிர மற்ற நூலகங்கள் இடநெருக்கடியிலே உள்ளன.

புத்தகங்களையே வைக்க இடமில்லாமல் தவிக்கிறோம். இதில், வாசகர்களை எப்படி சமூக இடைவெளிவிட்டு அமர வைக்க முடியும். தினமும் 500 பேர், 600 பேர் வரக்கூடிய மாவட்ட மைய நூலகங்களிலே இந்த நடைமுறை சாத்தியப்படுத்த வாய்ப்பு இல்லை.

ஆனால், நூலகங்களைத் திறந்து வைத்து வாசகர்களை அனுமதித்தால் மட்டுமே புத்தகங்களைக் காப்பாற்ற முடியும். புத்தகங்கள் அனைத்தும் தூசிப்படிந்துள்ளன.

இதேநிலை இன்னும் நீடித்தால் அணில், எலிகள், பூச்சிகள் புத்தகங்களை கடித்து சேதப்படுத்திவிடும். பூச்சிகள் கரையான் போல் புத்தகங்களை அரித்து அதை நாசப்படுத்தம் வாய்ப்புள்ளது.

குறிப்பாக வெள்ளைநிறத்தில் காணப்படும் சில்வர் பூச்சிகள் நீண்ட நாள் பயன்படுத்தாத புத்தகங்களில் பைண்டிங்கை கரையான் போல் அரிக்க ஆரம்பித்துவிடும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x