Last Updated : 02 Jun, 2020 03:07 PM

 

Published : 02 Jun 2020 03:07 PM
Last Updated : 02 Jun 2020 03:07 PM

ராஜாவின் இசையில் மயங்குவதேன்?!

காதலைப் போல நம்மை சிரிக்க, அழ, நெகிழ, திக்குமுக்காட வைப்பது இசை. இது எப்படிச் சாத்தியமாகிறது? காதல் வயப்பட்டாலும் காதலில் தோல்வியுற்றாலும் மனம் உடனடியாக தன்னை ஏந்திக்கொள்ளவும் ஆற்றுப்படுத்தவும் இசையை நாடுவதேன்? புண்பட்ட நெஞ்சத்தைப் புகைவிட்டு ஆற்றுப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை ஆனால் இசையை ஊற்றி ஆற்ற முடிகிறதே எப்படி?!

மனித இனம் தழைக்கக் காதலும் காமமும் அத்தியாவசியம். ஆனால், பரிணாம வளர்ச்சியில் மனித இனம், இசையைக் கண்டுபிடித்திருந்தாலும் மனித குலம் பிழைத்திருக்க இசை ஒன்றும் பிராணவாயு இல்லையே. இருந்தாலும் காதல் செய்யும் அத்தனை ஜாலத்தையும் இசையும் செய்யத்தானே செய்கிறது?!

பிரான்ஸின் பாரி நகரத்தில் உள்ள பிரெஞ்சு அறிவியல் நிறுவனத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் ழான் ஜூலைன் அக்கவுட்டர், வாழ்வா, சாவா என்கிற உணர்வெழுச்சியைத் தூண்டும் நரம்பு மண்டலம்தான் இசைக்கான ஊற்றுக்கண் என்றார். அதேபோல காதலை மனம் உணரும் போதெல்லாம் மூளையில் சுரக்கும் ஒருவிதமான ஸ்தூலப் பொருளைத்தான் இசை கேட்கும்போதும் மூளை சுரக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

சில இசைக் கோவைகளைக் கேட்கும்போது மெய்சிலிர்த்து மயிர்க்கூச்சல் ஏற்படுகிறதல்லவா! அது அந்தத் தருணத்தில் மூளை வெளியேற்றும் டோப்பமைன் (dopamine) செய்யும் மாயம். உயிர் வாழவும், மனித இனம் செழித்தோங்கவும் அடிப்படையான உணவு உண்ணுதல், கலவி கொள்ளுதல் சமயத்திலும் இதே டோப்பமைனைத்தான் மனித மூளை வெளியேற்றுவதாகச் சொல்லப்படுகிறது.

இதைவிடவும் ஆச்சரியமான ஒரு தகவலை அறிவியல் சொல்கிறது. அதுதான் 'PATTERN' (பேட்டர்ன்). தூக்கத்தில் கனவு காணும்போது எங்கோ உயரத்தில் இருந்து தவறி விழுவதுபோன்ற பிரமை ஏற்பட்டு கட்டிலில் இருந்து உருண்டு விழுந்திருப்போம் இல்லையா. இது ஆதிகால மனிதர்கள் தங்களை விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மரங்களில் ஏறி கிளையைப் பற்றிக்கொண்டு உறங்கியதன் தொடர்ச்சியே. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் தன்னை மறந்து கிளையில் இருந்து தவறி விழுந்துவிடுவார்கள். இதன் படிமம்தான் மனித மூளையில் படிந்து தற்கால மனிதர்களின் கனவிலும் இத்தகைய வடிவம் கொள்கிறது என்றது உளவியல்.

இதை ஒட்டிய கோணத்தை இசை குறித்த ஆராய்ச்சியாளர் ஜட்டோரி (Zatorre) முன்வைத்துள்ளார். மனித குலம் பிழைத்திருக்க ஒரு சில பேட்டர்ன்களைக் கண்டடைந்தது என்கிறார் ஜட்டோரி. இதை வைத்து இளையராஜாவின் இசை நம்மை ஏன் பிடித்தாட்டுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

எப்படி? மரங்கள் சலசலக்கும் ஓசையை வைத்துக் கொடிய விலங்குள் தன்னைத் தாக்க வருவதை ஆதிமனுஷி கண்டுபிடித்தாள். தூரத்தில் புகை மூட்டமாகத் தெரிந்தால் தீ பரவிப் பலியாவோம் என்பதை அறிந்து, தன்னை தற்காத்துக் கொள்ள ஆதிமனுஷி ஓடினாள். இந்த பேட்டர்ன்களைப் போலவே இசையும் ஒரு விதமான பேட்டர்ன்தான் என்கிறார் ஜட்டோரி.

ஒரு புதிய பாடலைக் கேட்கும்போது அதில் அடுத்து வர இருக்கும் மெலடி, தாளக்கட்டு, இசைத் துணுக்குகளை மனம் ஊகித்துக் கொண்டே இருக்குமாம். இந்த ஊகம் அவரவர் வாழ்ந்து வந்த கலாச்சாரப் பின்புலத்தைப் பொறுத்தே அமைகிறது. ஆகவேதான் இதுவரை கேட்டிறாத முற்றிலும் புதிய இசை ரகத்தை ரசிக்க முடியாமல் போகிறது அல்லது ரசிக்கக் காலதாமதம் ஆகிறது. நாம் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் (இனக்குழுக்கள்) இதுவரை கேட்டிறாத இசை நமக்குள் ஊறக் காலம் எடுக்கிறது. நாணயத்தின் மறுபக்கத்தில் சில இசைக்கோவை கேட்ட மாத்திரத்திலேயே ஆன்மாவை மீட்டத் தொடங்கிவிடுகிறது. இதற்கும் அந்த பேட்டர்ன்தான் காரணம் என்கிறார் ஜட்டோரி. ஆக நம்முடைய கலாச்சாரத்தில் ஊறிய ஒலிகள் இசையாகக் கொண்டாடப்படுகின்றன. மற்றவை சத்தங்களாக நிராகரிக்கப்படுகின்றன.

இப்போது புரிகிறது 'அன்னக்கிளி'யின் 'மச்சானப் பாத்தீங்களா' முதல் 'சைக்கோ'வின் 'உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா' வரை ராஜாவின் இசை எப்படி ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது என்று.

ஒரு முறை இதைப் பற்றி ராஜாவே இப்படிச் சொன்னார்: "'அன்னக்கிளி' பாடல்கள் வெளியாகி முதன்முறையாக வானொலியில் ஒலிபரப்பான நாள் அது. என்னுடைய வீட்டை விட்டு வீதியில் கால் வைத்து என்னுடைய தெருவுக்குள் நடக்கத் தொடங்கினேன். முதலில் ஒரு வீட்டில்தான் 'மச்சானப் பாத்தீங்களா' பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த அடி எடுத்து வைக்க வைக்க வரிசையாக அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீடுகளிலும் உள்ள வானொலி அலைவரிசையை டியூன் செய்து அதே பாடலை ஒலிக்க விட்டார்கள். தெருமுனை வரையிலும் இருந்த அத்தனை வீடுகளிலும் ஒரே நேரத்தில் அன்று 'மச்சானப் பாத்தீங்களா' பாடல் ஒலித்ததைக் கேட்டு பிரமித்தேன். ஏதோ நான் இயற்றிய இசையை அந்த மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள் என்பதாக அதை நான் பார்க்கவில்லை. அவர்களுக்குள் ஏற்கெனவே ஊறி இருந்த இசையை நான் மீண்டும் அவர்களிடமே கொண்டு சேர்த்திருக்கிறேன் என்பதுதான் உண்மை".

ஒவ்வொரு முறை இசை மீட்டும்போதும் தமிழ்ச் சமூகத்தின் இசை பேட்டர்னை மீட்டெடுக்கும் இசை ராஜாவுக்கு இப்படிப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசைப்படுகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x