Published : 02 Jun 2020 12:10 PM
Last Updated : 02 Jun 2020 12:10 PM
தமிழ் சினிமா சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறித்து வைத்திருக்கும் தேதி 1976ம் ஆண்டு, மே மாதம் 14-ம் தேதி. ‘அன்னக்கிளி’ வெளியான நாள். நமக்கெல்லாம் இளையராஜா எனும் எளிய இசையின் நாயகன் கிடைத்த நாள்.
76ம் ஆண்டின் ஐந்தாவது மாதத்தில், அதாவது மே மாதத்தில் ’அன்னக்கிளி’ வந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநருக்கு ‘அன்னக்கிளி’ தேவராஜ் மோகன் என்றே பெயர் அமைந்தது. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் எப்பேர்ப்பட்ட ஹிட்டடித்தன என்பதெல்லாம் நம் ஞாபக அடுக்குகளில் அப்படியே பதிவாகியிருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில், ‘பாலூட்டி வளர்த்த கிளி’ திரைப்படத்துக்கு இசையமைத்தார் இளையராஜா.
’குலைகுலையா முந்திரிக்கா நரியும் நரியும் சுத்துச்சாம்’ என்ற பாடலைக் கொண்டு தொடங்கும் பாடல், மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஒய்.ஜி.மகேந்திரா, மனோரமா முதலானோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்கு கதை கோமல் சுவாமிநாதன். திரைக்கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம். இயக்குநர் பி.மாதவன் தயாரிக்க, தேவராஜ் - மோகன் இயக்கினார்கள்.
இந்தப் படத்தின் டைட்டிலில் இசை - இளையராஜா என்று வரும். கூடவே, உதவி அமர்சிங் என்று டைட்டிலில் இடம்பெறும். அமர்சிங் என்பவர்தான் கங்கை அமரன் என்று தெரியுமே நமக்கு. இதன் பின்னர், டிசம்பர் 10ம் தேதி வெளியான ‘பத்ரகாளி’ படம், பாடல்களுக்காகவே ஓடியது. பட்டிதொட்டியெங்கும் பரவிய பாடல்கள் என்பார்களே... அது இந்தப் படத்தின் பாடல்களுக்குப் பொருந்தும்.
சிவகுமார், ராணி சந்திரா, மேஜர் சுந்தர்ராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ஏ.சி.திருலோகசந்தர் தயாரித்து, இயக்கினார். அறிமுகமான வருடத்தில், மூன்று படங்கள். இதில் இரண்டு படங்களின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
‘பத்ரகாளி’ படத்தில் ‘கேட்டேளா அங்கே அதைப் பாத்தேளா இங்கே’ என்ற பாடலின் வெற்றியைச் சொல்லிமாளாது. பாட்டுக்கச்சேரிகளில் இந்தப் பாட்டு தொடங்கும்போதே விசில் பறக்கும். கைதட்டல் காது கிழிக்கும். ’வாங்கோண்ணா...’ என்று கேட்பவர்கள் அனைவரும் கோரஸ் பாடினார்கள். இந்தப் படத்தில்தான் கவிஞர் வாலியும் இளையராஜாவும் முதன் முதலாக இணைந்தார்கள். செம ரிக்கார்ட் டான்ஸ் இந்தப் பாடல். அப்படியே மெலடியும் போட்டார் இளையராஜா. ’கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை’ பாடல்,இன்று வரை பலரின் செல்போன்களில் காலர் டியூன்.
77-ம் ஆண்டில், ஜனவரி 26-ம் தேதி வெளியான படமும் இளையராஜாவின் திரை வாழ்விலும் ரசிகர்களின் வாழ்விலும் மறக்கமுடியாத படமாக அமைந்தது. அது... கே.பாலாஜி தயாரிப்பில் சிவாஜி, சுஜாதா, விஜயகுமார், சத்யப்ரியா நடித்த ‘தீபம்’. ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ பாடல் இன்றைக்கும் செம மெலடிகளில் ஒன்று. அதேபோல், ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே’ என்ற பாடலை மறக்கவே முடியாது. சிவாஜி கணேசன் படத்துக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம் இதுதான். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
77ம் ஆண்டு, இளையராஜா வாழ்வில் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிற்கே உன்னதமான ஆண்டு. தமிழ் சினிமாவின் பாதையையும் பயணத்தையும் புரட்டிப் போட்ட ‘16 வயதினிலே’ படம் இந்த வருடத்தில், செப்டம்பர் 15-ம் தேதி வெளியானது. ’இந்தப் படத்துக்கு முன்னதாக பின்னணி இசை வேலைகளில் குறுக்கீடெல்லாம் இருந்தது. ‘16 வயதினிலே’ வந்த பிறகுதான், பின்னணி இசையில் சுதந்திரமாக செயல்பட்டேன். இதையடுத்து நான் ஒப்புக்கொண்ட படங்களுக்கெல்லாம், பின்னணி இசையில் நான் நினைத்தபடி இயங்கினேன்’ என்கிறார் இளையராஜா.
முன்னதாக இந்த மாதத்தில், செப்டம்பர் முதல் வாரத்தில், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ வெளியானது. ‘விழியிலே மலர்ந்தது’ பாடலையும் ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ பாடலையும் ’பூந்தென்றலே’ பாடலையும் யாரால்தான் மறக்கமுடியும்? அக்டோபர் 7ம் தேதி ஜெய்சங்கர், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ‘காயத்ரி’ திரைப்படம் வந்தது. சுஜாதாவின் கதையை ஆர்.பட்டாபிராமன் இயக்கினார். இந்தப் படத்தின் ‘வாழ்வே மாயமா’ பாடல் மனதை என்னவோ செய்யும். மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்தப் பாடல்.
இதையடுத்து... அடுத்தடுத்த வருடங்களில், தன் ராஜபாட்டைக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்டார் இளையராஜா.
இன்று இளையராஜா பிறந்தநாள் (ஜூன் 2ம் தேதி).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT