Published : 01 Jun 2020 12:46 PM
Last Updated : 01 Jun 2020 12:46 PM
பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் செய்யப்பட்டு கடைகள் திறந்தபோதே, எளியோருக்கு உணவு வழங்கிய பலரும் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டனர். ஆனால், இப்போதும்கூட குமரியில் சாலையோரவாசிகளுக்கும், எளியோருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உணவு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் குமரி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், “கரோனா பொதுமுடக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாகப் பாதித்துவிட்டது. தொடக்கத்தில் இருந்தே தனிப்பட்ட முறையில் என் சொந்தப் பணத்தில் இருந்து களப்பணி செய்கிறேன். நினைவு தெரிந்த நாள் முதல், நான் ரஜினியின் ரசிகன்.
ஊரடங்கு அறிவித்த நாள் முதலே எளியோருக்கு மதியம், இரவில் சாப்பாடு வழங்கி வருகிறேன். ஊரடங்கு தீவிரமாக இருந்தபோது எங்களைப் போல் பலரும் உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் வந்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதும் இந்த நிலை மாறியது.
அப்போதுதான் எங்கள் தேவை இன்னும் அதிகரித்தது. கூடுதல் நபர்களுக்கு உணவு வழங்கினோம். கிராமங்கள் தோறும் சென்று அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி இருக்கிறோம். இதேபோல் முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றோடு மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொடியையும் வழங்கி வருகிறோம்.
பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும், இதையெல்லாம் தொடர்வோம். ஏனென்றால் பொதுமுடக்கம் முடிந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடுதல் நாட்கள் ஆகலாம். அதற்கு மத்தியில் எங்கள் பணி, அவர்களுக்குச் சிறிது ஆசுவாசமாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT