Last Updated : 30 May, 2020 02:07 PM

 

Published : 30 May 2020 02:07 PM
Last Updated : 30 May 2020 02:07 PM

பீம், சிவா, மோட்டு பட்லு பார்த்துவிட்டு தொப்பையிலேயே குத்துகிறார்களா உங்கள் குழந்தைகள்?- இதோ புது கார்ட்டூன்

இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் மனிதர்களை விட அதிகம் அடி வாங்கியவை டிவி, செல்போன், மின்விசிறிதான். குழந்தைகள் இருக்கிற வீட்டில் டிவியும், செல்போனும், ‘எப்படா பள்ளிக்கூடம் திறப்பீங்க?’ என்று கதறிக்கொண்டிருக்கின்றன.

டிவியிலும், செல்போனிலும் குழந்தைகள் விரும்பிப் பார்க்கிற கார்ட்டூன்களில் பெரும்பாலானவை ஹீரோயிஸத் தொடர்கள்தான். சோட்டா பீம், மோட்டு பட்லு, சிவா, லிட்டில் சிங்கம், ஜாக்கிசான், கிருஷ்ணா போன்ற கார்ட்டூன்களைப் பார்த்துவிட்டு, சும்மா இருக்கிறதா இந்த வாண்டுகள்? பீம் போல முஷ்டியை மடக்கிக் கொண்டு பிள்ளைகள் பெரும்பாலும் குத்துவிடுவது அப்பாக்களின் தொப்பையில்தான். அடுத்து அம்மாவின் முதுகுப்பக்கம். வன்முறைக் காட்சிகளைப் பார்க்காதீங்க என்றால், சேனல் மாற்றி டோரிமான் பார்த்துவிட்டு அப்பா - அம்மாவை, வார்த்தைக்கு வார்த்தை கலாய்க்கின்றனர் குழந்தைகள்.

இந்தத் தொல்லையில் இருந்து தப்பிக்க அகிம்சையைப் போதிக்கிற ஒரு சேனல் பிறந்து வராதா என்று பெற்றோர்கள் எல்லாம் யோசித்திருப்பார்கள். உலகில் அதர்மம் தலை தூக்குகிறபோது, அதை அழிக்க பரமாத்மாவே வருவார் என்பார்களே அப்படி வந்துவிட்டார் மகாத்மா... ஆம் நம்ம காந்தி தாத்தாதான்.

'டிஸ்னி' சேனலில் பாபு என்ற பெயரில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் தொடரின் நாயகனே நம்ம காந்தி தாத்தாதான். குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு அகிம்சை வழியில் தீர்வு சொல்கிறார் தாத்தா. நல்லது கெட்டதை குழந்தைகளுக்கு உணர்த்துவதுடன், இயற்கையைப் பாதுகாக்கணும், அறிவியலை ஆக்கபூர்வமாப் பயன்படுத்தணும் என்பன போன்ற கருத்துகளைப் போரடிக்காமல் சுவாரசியமாகச் சொல்கிறார் பாபு.

சுவாரசியத்துக்காக காந்தியுடன் அவரது மேஜையில் இருக்கும் மூன்று குரங்கு பொம்மைகளும் நடித்திருக்கின்றன. தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே, தீயதைக் கேட்காதே என்பதை உணர்த்தும் விதமாக மாஸ்க், ஹெட்போன், கூலிங்கிளாஸ் போட்டு ஒவ்வொரு குரங்கும் வாய், காது, கண்ணை மறைத்துக் கொண்டு வருகின்றன.

அடிதடி கார்ட்டூன்களுடன் கொஞ்சம் இதையும் பார்க்க வைப்போம் நம் குழந்தைகளை... அதைப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியாப்பா என்று குழந்தைகள் மறுபடியும் தொந்தியை நோக்கித் திரும்பினால், கம்பெனி பொறுப்பேற்காது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x