Published : 30 May 2020 01:04 PM
Last Updated : 30 May 2020 01:04 PM
நார்வேயைச் சேர்ந்த, கடந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற எக்ஸ்பிரனிச (அக உணர்வு சார்ந்த) ஓவியர் எட்வர்டு மங்க் (1863-1944). அவருடைய புகழ்பெற்ற ஓவியம் ஓலம் (The Scream). தன் ஓவிய வாழ்க்கையின் தொடக்கக் கட்டத்திலேயே இந்த ஓவியத்தை அவர் வரைந்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்பட்டவர் மங்க். அதேநேரம், பல்வேறு தன்னோவியங்களை வரைந்து தள்ளியவர்.
முதலாம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில் 1919இல் ஸ்பானியக் காய்ச்சல் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியது. அந்தக் காலத்தில் எட்வர்டு மங்க் தனிமையிலேயே கழித்துக்கொண்டிருந்தார். இருந்தும்கூட அவரையும் அந்த நோய் தொற்றியது. நல்வாய்ப்பாக அந்தக் காய்ச்சலில் இருந்து அவர் உயிர் தப்பினார். உடல்நலம் சற்று தேறிய நிலையில், ஓவியம் வரையத் தேவையான பொருட்களைத் தேடியெடுத்து வரையவும் தொடங்கினார்.
ஒரே ஓவியம்
'ஸ்பானியக் காய்ச்சலுடனான தன்னோவியம்' (Self-Portrait with the Spanish Flu) என்ற அவருடைய அந்தத் தன்னோவியம் உலகப் புகழ்பெற்றது. அந்த ஓவியத்தில் அவருடைய தலைமுடி குறைந்து போயிருக்கிறது, ஒடுங்கிய முகத்துடன் தன் நோய்ப் படுக்கைக்கு அருகிலேயே ஒரு இருக்கையில் அவர் அமர்ந்திருப்பதைப்போல், அந்த ஓவியம் அமைந்திருக்கிறது. நோய்ப் படுக்கையிலிருந்து மீண்ட சிறிது காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியம் பரவலான வரவேற்பைப் பெற்றது. கடந்த நூற்றாண்டில் உலகை ஆட்டிப்படைத்த ஸ்பானியக் காய்ச்சல் தொடர்பான சிறந்த ஓவியப் படைப்பு, அது மட்டும்தான்.
அதேநேரம் அந்தக் காய்ச்சலில் இருந்து முழுமையாக மீண்ட பிறகு, 'ஸ்பானியக் காய்ச்சலுக்குப் பிந்தைய தன்னோவியம்' (Self-Portrait after the Spanish Flu) என்ற பெயரில் அவர் வரைந்த ஓவியம், அவ்வளவு புகழைப் பெறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT