Published : 29 May 2020 07:43 PM
Last Updated : 29 May 2020 07:43 PM
ஒட்டுமொத்த உலகமே கரோனா அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது. இப்படியான சூழலில் தங்கள் நாட்டுக்குச் சுற்றுலா வருபவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளானால் அவர்களது மருத்துவம், தங்குமிடம் உள்பட அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சைப்ரஸ் தீவு. அதேபோல் இந்தியாவும் கரோனா தொற்றுப்பரவல் இல்லாத மாவட்டங்களிலேனும் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சைப்ரஸ் தீவில் 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடல், கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளுடன் இந்தத் தீவில் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் விஷயங்கள் அதிகம். இந்நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் 15 சதவீதம் சுற்றுலாவைச் சார்ந்தே இருக்கிறது. அதனால் சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சைப்ரஸ் நாட்டில் இதுவரை 939 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதில் 17 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களே!
சைப்ரஸ் நாட்டில் ஒரு வாரமாகப் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இதனால் கரோனா பாதிப்புக்கு அதிகம் இலக்காகாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டு, அங்கிருந்து எல்லாம் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் வரலாம் என அழைப்பு விடுத்திருக்கும் சைப்ரஸ் நாடு, ஒரு அழகான ஆஃபரும் கொடுத்திருக்கிறது.
சைப்ரஸ் நாட்டுக்குச் சுற்றுலா வந்து புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு ஆளானால் அவர்களது மருத்துவம், சாப்பாட்டுச் செலவு, உடன் வரும் குடும்பத்தினரின் செலவு என தங்கள் நாட்டில் நடக்கும் அனைத்து செலவினங்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது சைப்ரஸ் அரசு.
இங்கும் அதைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா ஆர்வலர்கள், “கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே மக்கள் முடங்கி இருக்கிறார்கள். பொதுப் போக்குவரத்தும் இல்லாத சூழலில் உளவியல் ரீதியாகவே பலரும் சிக்கலுக்குள் ஆளாகி இருக்கிறார்கள். தமிழகத்தில் சென்னைதான் கரோனா தொற்று மையமாக இருக்கிறது. பிறமாவட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெளி இடங்களில் இருந்து வருபவர்களுக்குத்தான் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது.
எனவே, சைப்ரஸ் போன்ற நாடுகளின் பாதையில் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தந்த மாவட்டங்களுக்குள்ளும், தொடர்ந்து பாதிப்பு இல்லாத பகுதிகளுக்குள்ளும் சுற்றுலாவுக்கு அனுமதிக்க வேண்டும். இது வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களுக்கு சிறிய இளைப்பாறுதலாக இருக்கும். அதேநேரத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த பல நூறு ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் இதனால் காக்கப்படும். எனவே, அடுத்த கட்ட ஊரடங்கை அறிவிப்பதாக இருந்தால் அதிலிருந்து சுற்றுலாத் துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT