Published : 29 May 2020 03:08 PM
Last Updated : 29 May 2020 03:08 PM
உணவுப் பொருட்களில் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி கிருமிகளை அழிக்கும் கருவியை கோவை காருண்யா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல் அல்லது கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற பொதுமக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கைக்குலுக்குவதால் வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருக்கு பரவும் என்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவரின் கையில் இருந்து பெறப்படும் பொருட்கள் மூலமாக வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் மேற்புறத்தில் உள்ள கிருமிகளை அழிக்கவல்ல, புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சும் கருவியை கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
இது குறித்து அப்பல்கலைக்கழக பதிவாளர் எலைஜா பிளசிங் கூறியதாவது:
“கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க காருண்யா பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் மெக்கானிக்கல் துறைகள் இணைந்து தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவியை உருவாக்கின.
தொடர்ந்து உயிர்த் தொழில்நுட்பவியல் துறை சார்பில், புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சி கிருமிகளை அழிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரண காலக்கட்டத்தில் உணவு பொருட்கள் மூலமாக வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பாக்கெட்டுகள், கைப்பை, முகக் கவசம், கைக்கடிகாரம், சாவி என நாம் அன்றாடம் தொட்டுப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை இக்கருவிக்குள் சிறிது நேரம் வைத்து எடுப்பதால், அவற்றின் மேற்புறத்தில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மூலமாக மற்றவருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும். மைக்ரோ ஓவன் போல் பயன்படுத்த ஏற்ற இக்கருவி வீட்டுப் பயன்பாட்டுக்கும், வணிகப் பயன்பாட்டுக்கும் இரு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மூலமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவக்குழுவினருக்கும் நோய்ப் பரவும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில் நோயாளிகளைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்காமலும் இருக்க முடியாது. இந்த இடர்ப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சும் 'கேபின்' வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் இந்த கேபினுக்குள் இருந்தவாறு நோயாளிகளைப் பரிசோதனை செய்யலாம். இதனால் நோயாளிகளிடம் தொற்று பரவாது.
இந்த கேபின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கோவையை அடுத்த பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தானியங்கிக் கிருமிநாசினி தெளிக்கும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கனகராணி பெற்றுக்கொண்டார்” என்றார்.
வைரஸ்களை அழிக்கும் கருவிகளை உருவாக்கிய துறை பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT