Last Updated : 29 May, 2020 02:08 PM

 

Published : 29 May 2020 02:08 PM
Last Updated : 29 May 2020 02:08 PM

திக்குத் தெரியாமல் நின்ற மூதாட்டி; திசைகாட்டிய போலீஸ்!- மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தின் மனிதநேயம்

காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி

ஆதரவின்றிச் சாலையில் திரிந்த ஒரு மூதாட்டியை மீட்டு உரியவர்களிடம் சேர்த்துள்ளனர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர்.

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த செவ்வாய்க் கிழமை இரவு பத்து மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் வாகனத்தில் அழைத்து வந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியை ஒப்படைத்தார்கள். சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அவர், நீடூர் பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், பசியால் தவிக்கும் அவரைப் பார்க்க பாவமாக இருந்ததால் உணவு வாங்கிக் கொடுத்து, இங்கு அழைத்து வந்ததாகவும் இளைஞர்கள் கூறினர்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீஸார் அந்த மூதாட்டியை விசாரித்தனர். ஆனால், அவரால் தெளிவாக எதையும் கூற முடியவில்லை. அதனால் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்து மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள இல்லங்களில் உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனால், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எந்த இடத்திலும் மூதாட்டிக்கு இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனக்குத் தெரிந்த ஒரு காப்பகத்தில் பேசி, மூதாட்டியை இரவு மட்டும் தங்கவைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார் ஆய்வாளர் கோப்பெருந்தேவி. மறுநாள் காலையில் முதல் வேலையாக அந்த காப்பகத்துக்குச் சென்ற கோப்பெருந்தேவி, மூதாட்டியைச் சந்தித்து அன்பாகப் பேசி கூடுதல் தகவல்களைப் பெற்றிருக்கிறார்.

முந்தைய நாளைவிட இப்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக உணர்ந்த மூதாட்டி, தனது பெயர் தனலட்சுமி, கணவர் பெயர் ஆறுமுகம், தனது ஊர் பனையூர், தங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் , கணவர் வெகு நாட்களுக்கு முன்பே தங்களை விட்டுப் பிரிந்து விட்டார் என்பனஉள்ளிட்ட விவரங்களைச் சொல்லி இருக்கிறார். கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் விவசாயக் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு மூன்று பெண்களையும் வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்து விட்டதாகச் சொன்னவர் அந்தப் பெண்கள் எங்கு உள்ளார்கள் என்ற தகவலை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்.

இருந்தாலும் அவரது பேச்சு வாக்கில் பல ஊர்களின் பெயர்கள் வந்து விழுந்திருக்கிறது. அதையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு இரண்டு பெண் காவலர்களை அனுப்பி அங்கெல்லாம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் மூலம் மூதாட்டியின் இரண்டு மகள்களை கண்டறிய முடிந்தது.

அவர்களை அழைத்து வந்து மூதாட்டியை அவர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவர்களோ, தாங்களே கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்படுவதாகவும் தங்களால் தாயைப் பார்த்துக் கொள்ள முடியாது என்றும் கைவிரித்து விட்டனர். தொடர் விசாரணையில், சோழம்பேட்டை என்ற ஊரில் மூதாட்டியின் அக்காள் ஒருவர் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அவர்களுக்குத் தகவல் தெரிவித்தவுடன் அங்கிருந்து பதறிக் கொண்டு வந்துவிட்டனர். பெற்ற பிள்ளைகள் மூதாட்டியை நிராதரவாய் விட்டபிறகு, இவர்கள்தான் வைத்துப் பராமரித்து வந்திருக்கின்றனர். நல்ல முறையில் பராமரித்தாலும் மனநலம் சற்று சரியில்லாததால் இப்படிக் கிளம்பி விட்டாராம். எங்கெல்லாமோ தேடி அலைந்த நிலையில் அவரைக் கண்டுபிடித்து ஒப்படைத்த அனைத்து மகளிர் போலீஸாரை அவர்கள் கைகூப்பி வணங்கி இருக்கின்றனர்.

தாங்களே அவரை அழைத்துச் செல்வதாகவும், இனி வெளியே போகாமல் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதாகவும் மூதாட்டியின் சகோதரி மகன் உள்ளிட்டவர்கள் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களிடம் மூதாட்டியை ஒப்படைத்திருக்கிறார் ஆய்வாளர் கோப்பெருந்தேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x