Published : 16 Aug 2015 12:17 PM
Last Updated : 16 Aug 2015 12:17 PM
முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகை யாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா (A.Madhaviah) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் (1872) பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் மாணவராகத் தேறி, அக்கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.
* நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியில் 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.
* உப்பு சுங்க இலாகா தேர்வில் முதலிடம் பெற்றவர், ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில் உப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பணி நிமித்தமாக குதிரையில் பல மைல்கள் பயணம் செய்வார். குதிரை சவாரி மிகவும் பிடிக்கும்.
* கடமை வீரர், கடும் உழைப்பாளி, கொடையாளி, நகைச்சுவை உணர்வு உடையவர். ‘மாதவையா களங்கமற்ற அதிகாரி. ஒரு எலுமிச்சை பழத்தைக்கூடக் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டார்’ என்பார்களாம் சக ஊழியர்கள். கர்னாடக சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் விரும்பிக் கேட்பார்.
* இவர் பணியாற்றிய பல ஊர்களில் மருத்துவ வசதி கிடையாது என்பதால், தன் பிள்ளைகளுக்கு இவர்தான் குடும்ப வைத்தியர். மருத்துவப் புத்தகம், முதலுதவிப் பெட்டி, மருந்துகள் எந்நேரமும் அவரது வீட்டில் இருக்குமாம்.
* தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும். 20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள் என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை சேகரித்திருந்தார்.
* இவரது நண்பர் சி.வி.சுவாமிநாத ஐயர் தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை எழுதினார். இது 1903-ல் ‘முத்துமீனாட்சி’ என்ற நாவலாக வெளிவந்தது. தனது புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதல் 2 பகுதிகளை 1898-1899ல் எழுதினார். 1924-ல் எழுதத் தொடங்கிய 3-ம் பாகம் முழுமை அடையவில்லை.
* ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.
* ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள், ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
* சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT