Published : 29 May 2020 01:24 PM
Last Updated : 29 May 2020 01:24 PM

இந்தியாவின் பாதாள லோகம்: பரபரப்பைப் பற்றவைத்திருக்கும் 'பாத்தாள் லோக்' ஆன்லைன் தொடர்

“இப்பிரபஞ்சம் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தேவமாந்தர்கள் வாழும் சொர்க்க லோகம், அதற்குக் கீழ் மனிதர்கள் வாழும் பூமி, அதற்கும் கீழே அடிமட்டத்தில் பூச்சிகளாலும் அருவருக்கத்தக்க விஷயங்களாலும் நிரம்பிய பாதாள உலகம். இது அனைத்தும் நம் புராணத்தில் உள்ளது. ஆனால், நான் இதை வாட்ஸ் அப்பில் படித்தேன். நான் வேலை செய்யும் ஜம்னாபார் புறநகர் காவல் நிலையம் பாதாள லோகத்தைச் சேர்ந்தது” என்ற ஹாத்திராம் சௌத்திரியின் வசனத்துடன் துவங்குகிறது ‘பாத்தாள் லோக்’ தொடர்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த 15-ம் தேதி வெளியான இந்தத் தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் சமீபகாலமாக மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நடந்துவரும் அவலங்களை மையமாக வைத்து ‘சேக்ரட் கேம்ஸ்’, ‘ஃபேமலி மேன்’ போன்ற பல ஆன்லைன் தொடர்கள் வந்திருந்தாலும், ‘பாத்தாள் லோக்’ தொடரில் ஜாதி, மத பிரச்சினைகளை மிகைப்படுத்தாமல் போலித்தனம் சிறிதுமின்றி யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்கள் இந்த தொடரின் பின்னால் இருக்கும் நான்கு எழுத்தாளர்களும், இரண்டு இயக்குநர்களும்.

நடக்காத கொலையும், நடக்கும் விசாரணையும்
தலைநகர் டெல்லியில் உள்ள புறநகர்ப் பகுதியான ஜம்னாபாரில் வேலை செய்யும் காவல் ஆய்வாளர் ஹாத்திராம் சௌத்திரி... பலவருடங்களாக நல்ல வழக்கு எதுவும் கிடைக்காமல் சில்லறை வேலைகளைச் செய்து வரும் அலட்சியப் போக்கும், வேலைச் சூழல் மீது ஒருவித வெறுப்பும் கொண்ட சாதாரணமான போலீஸ் அதிகாரி.

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் சஞ்சீவ் மேக்ரா. இவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டும் நான்கு நபர்களைக் கொலை நடப்பதற்கு முன்பே ரகசியத் துப்பு கிடைப்பதன் மூலம் போலீஸார் கைது செய்கிறார்கள். அவர்கள் கைது செய்யும் இடம் ஜம்னாபார் காவல்நிலைய சரகத்தில் இருப்பதால் இந்த வழக்கு ஹாத்திராம் சௌத்திரியின் கைகளுக்கு வந்து சேர்கிறது. இந்த வழக்கின் மதிப்பை அறியும் ஹாத்திராம், முழு ஈடுபாட்டுடன் விசாரணையில் இறங்குகிறார்.

விசாரணையில் நான்கு கொலையாளிகளின் வேர்களைத் தேடிப் பயணிக்க ஆரம்பிக்கும் ஹாத்திராம், தான் வாழும் பூமி என்ற பரப்பிலிருந்து இந்த சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று முத்திரை குத்தப்பட்ட மக்கள் வசிக்கும் இருண்ட பக்கங்கள் கொண்ட பாதாள லோகம் என்று வர்ணிக்கப்படும் நிலப்பரப்புக்குள், நழுவி அங்கே உண்மையை நேருக்கு நேர் சந்தித்து, பாதாள லோகம் அதன் அவல நிலையில் இருப்பதற்குக் காரணம் பூமியில் தூய்மை வேடமணிந்து வாழும் மனிதர்களும், அவர்களை அதிகாரம் பண்ணும் தேவர்கள் என்ற அதிகார வர்க்கத்தினரும்தான் காரணம் என்ற தெளிவுடன் அங்கிருந்து மீண்டு வரும் கதைதான் ‘பாத்தாள் லோக்’ தொடரின் அடிநாதம்.

இத்தொடரின் அதிரடியான வெற்றிக்குக் காரணம் இதில் சாதியையும் மதத்தையும் இலைமறைகாயாக சொல்லி மழுப்பாமல் நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்ற காட்சி அமைப்புகள் தான். சாதிக்கொடுமை, மத அரசியல், பெண்கள் மீதான வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அதிகார இயந்திரத்தின் இரக்கமற்ற தன்மை என்று அனைத்தையும் தெள்ளத்தெளிவாகக் காட்டி இந்த சமூக அமைப்பை நோக்கிய பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது ‘பாத்தாள் லோக்’ தொடர்.

‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான ஜெய்தீப் அக்லாவத், ஹாத்தி ராம் சௌத்திரி வேடத்தின் மூலம் தன் நடிப்பின் உச்சத்தை அடைந்துள்ளார். ‘வாழ்க்கையின் பாதி பங்கை என் அப்பா என்னை ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்வதைக் கேட்டே கழித்துவிட்டேன். மீதி வாழ்க்கை முழுக்க என் மகன் என்னை அப்படிச் சொல்வதைக் கேட்க நான் தயாராக இல்லை’ போன்ற வசனங்கள் பேசும் இடத்திலும் தன் முன்னாள் நண்பன் மேலதிகாரியாக வந்து கொடுமைப்படுத்துவதை எதிர்கொள்ளும் இடங்களிலும் அபாரமான நடிப்பை வழங்கி ஹாத்தி ராம் சௌத்திரி என்ற போலீஸ்காரரை நம் கண்முன் நிறுத்துகிறார் அக்லாவத்.

இத்தொடரின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரமான விஷால் ‘ஹத்தோடா’ தியாகி என்ற கொடும் கொலைகாரனாக நடித்திருக்கும் அபிஷேக் பானர்ஜியும் ரசிகர்களை மிரட்டி இருக்கிறார். இத்தொடரில் அவருக்குக் குறைவான வசனங்கள் என்றாலும் இடுங்கிய உதடும், வெறுமை நிறைந்த பார்வையுமாய் இரும்புச் சுத்தியலால் அவர் செய்யும் கொலைகள் பார்ப்பவரை உலுக்கிவிடும். விஷால் தியாகி இப்படி ஒரு கொடூர கொலைகாரனாக மாறியதின் பின்னணியில் இருக்கும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க ஜாதியின் காரணம், கவனிக்கப்பட வேண்டிய நடைமுறையில் உள்ள பிரச்சினையாகும்.

வட இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் தருன் தேஜ்பால் எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மை அசசின்ஸ்’ என்ற நாவலின் தாக்கத்துடன் திரைக்கதை ஆசிரியரான சுதிப் ஷர்மாவுடன் சாகர் ஹாவெலி, ஹர்டிக் மேத்தா, குஞ்சித் சோப்ரா ஆகியோர் இணைந்து இந்த தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளார்கள். அவினாஷ் அருண் மற்றும் ப்ரோஷித் ராய் என்ற இரண்டு இயக்குநர்கள் இத்தொடரை இயக்கியுள்ளார்கள்.

இவர்கள் அனைவரின் முயற்சியும் உழைப்பும் சரியான பலனைத் தந்துள்ளது என்பதே ரசிகர்களின் கருத்து. ஒரு போலீஸ், நான்கு குற்றவாளிகள், நடக்காத ஒரு கொலை என்ற எளிய கதையம்சங்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய சண்டைக்காட்சிகள் எதுவும் இன்றி தேசத்தில் வடக்கு முதல் தெற்கு வரை பரவிக்கிடக்கும் பிரச்சினைகளை மிக நேர்த்தியாக அணுகியுள்ளார்கள். ஒன்பது பாகங்களைக் கொண்ட இத்தொடரில் எங்கும் துளிகூட சலிப்புத் தட்டாமல் திரைக்கதை நகருவதே இதன் சிறப்பம்சம்.

இத்தொடரில் வரும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன “திருடர்கள் மட்டுமல்ல உண்மை பேசுபவர்களும் போலீஸைக் கண்டால் பயந்து ஓடத்தான் செய்வார்கள்”, “ இந்த அரசு இயந்திரம் துருப்பிடித்துப் போய்க் கிடப்பதாக வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும், உள்ளுக்குள் எண்ணெய் போடப்பட்ட இயந்திரம் போல் அதன் பாகங்கள் அனைத்தும் மிகச் சரியாக தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எதிர்க்கேள்வி இல்லாமல் செய்து கொண்டுள்ளது. ஏதாவது ஒரு பகுதி மக்கர் செய்தால் உடனடியாக அது வேறொரு பாகத்தால் மாற்றப்படும்” போன்ற சில வசனங்கள் அதற்கு உதாரணம்.

அதனால்தான் இந்தியாவின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் “பாத்தாள் லோக் தொடர் நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து வெளிவந்திருக்கும் சிறப்பான க்ரைம் த்ரில்லர் தொடர். ஒருவேளை என்றைக்கும் இதுதான் சிறந்ததாகக் கூட இருக்கலாம்” என்று இத்தொடருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

வழக்கமாக அடிப்படைவாதிகள் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ‘பாத்தாள் லோக்’ தொடரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் பொது முடக்கத்தில் நீங்கள் வீட்டில் முடங்கி இருந்தால் பாதாள லோகத்திற்குள் சற்று எட்டி பார்த்துவிட்டு வாருங்கள்.

-க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x