Published : 29 May 2020 11:37 AM
Last Updated : 29 May 2020 11:37 AM
காலை எழுந்ததுமே டீக்கடைக்கு வரும் பழக்கம் உள்ளவர்கள் டெல்டா பகுதி மக்கள். டீக்கடைக்கு வந்துதான் முகம் கழுவி வாய் கொப்பளித்து, டீ சாப்பிடுவார்கள். அதன் பின்னர் வீட்டில் உள்ள மனைவி, மக்களுக்காக பாலித்தீன் கவர்களில் பார்சல் டீயும் வாங்கிச் செல்வார்கள். வியாபாரம் கருதி கடைக்காரர்களும் பால் கவர் உள்ளிட்ட கவர்களில் டீயைத் தருவது வழக்கம்.
ஆனால், மண்ணை நாசமாக்கும் பிளாஸ்டிக் அரக்கனைத் தொடவே மாட்டேன் என்று தீர்க்கமாக நிற்கிறார் டீக்கடைக்காரர் ஒருவர். அதற்குப் பதிலாகப் பாத்திரம், பிளாஸ்க், டீ கேன் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு அதில் பார்சல் டீயைக் கொடுத்து அனுப்புகிறார் அந்த டீக்கடைக்காரர்.
நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய தலமான வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் ‘ஸ்ரீமுருகன் டீ & காபி பார்’ என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார் தண்டபாணி. வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றி விவசாய கிராமங்கள் அதிகம். அதனால் கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம். எப்போதும் வயல்களில் வேலை நடந்து கொண்டே இருக்கும். அங்கு வேலை செய்பவர்கள் டீ மற்றும் பட்சணங்களைப் பார்சல் வாங்கிச் சென்று சாப்பிடுவார்கள். அதேபோல கட்டுமான வேலைகள் நடக்கும் இடங்களுக்கும் பார்சல் வாங்கிச் செல்வார்கள்.
இவர்களுக்கு எல்லாம் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வரை எல்லோரையும் போல பாலித்தீன் கவர்களில்தான் பார்சல் டீயை ஊற்றித் தந்தார் தண்டபாணி. திடீரெனப் பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவர், தாமே பாத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு அதில் பார்சல் டீயைக் கொடுத்து அனுப்பலாம் என்று முடிவெடுத்தார்.
அன்றைக்கு ஆரம்பித்த இவரது பாதுகாப்பான வழிமுறை இந்த கரோனா காலத்தில் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. எனக்கு
நாலு டீ , எனக்கு இருபது டீ என்று கேட்டு வந்துகொண்டே இருப்பவர்களுக்கு அதற்குப் பொருத்தமான பாத்திரங்களில் கொதிக்கக் கொதிக்க டீயை ஊற்றித் தந்து கொண்டிருக்கிறார் தண்டபாணி. பட்சணங்கள் துணிப்பையில் அடைக்கப்படுகின்றன.
"இந்த மண்ணையும், நிலத்தடி நீரையும் காக்க, நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்த போதுதான் எனக்குப் பாத்திரம் வாங்கி வைக்கும் எண்ணம் வந்தது. ஒரு டீயில் ஆரம்பித்து 100 டீ வரைக்கும் பார்சல் கொடுத்து அனுப்பத் தேவையான பாத்திரங்கள் என்னிடம் இருக்கின்றன. 20 பிளாஸ்க், 30 வாளி, 10 டீ கேன் கைவசம் இருக்கு.
விவசாய நிலத்தில் பிளாஸ்டிக்கை அப்படியே போடும்போது நிலம் பாழ்படுவதோடு மட்டுமல்லாமல், நிலத்துக்குள்ளும் நீர் போகாமலும் தடுத்து விடும். ஒரு வயலில் சுமார் ஐம்பது பேர் வேலை செய்தால் எவ்வளவு பிளாஸ்டிக் அங்கு கொட்டப்படும். எனது இந்த முயற்சியால் முடிந்தவரை மண்ணில் விஷத்தைக் கலப்பது தவிர்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பார்சல் வாங்கும்போது அவர்களுக்கு பணமும் மிச்சமாகும். பத்து பேர் இருக்கும் இடத்தில் ஐந்து டீ வாங்கினால் போதும். எல்லோரும் குடித்து விடலாம்" என்கிறார் தண்டபாணி.
கடையில் டீயின் விலை 10 ரூபாய். பார்சல் டீ 15 ரூபாய். தின்பண்டங்கள் ஏழு ருபாய். கடையில் கண்ணாடிக் குவளைகளில்தான் டீ தரப்படும். பேப்பர் கப்புகள் கிடையாது. எல்லாம் சரிதான், பார்சல் டீ கொடுத்து அனுப்பும் பாத்திரங்கள் எல்லாம் சரியாகத் திரும்பி வந்துவிடுமா? என்று கேட்டால் சிரிக்கிறார். "இது கிராமம். இங்க எல்லாரும் தெரிஞ்சவங்க தான். கொத்தனாருங்க அன்னிக்கு சாயங்காலம் வேலை முடிஞ்சு போறப்பத் திருப்பிக் கொண்டு வந்துடுவாங்க. விவசாய வேலைகளுக்கு வாங்கிட்டுப் போறவங்க மறுநாள் காலைல கொண்டாந்து கொடுத்துட்டு அன்னிக்கு எத்தனை பேருக்குத் தேவைன்னு சொல்லிட்டுப் போவாங்க. காசும் பாத்திரமும் பத்திரமா வந்திடும்" என்கிறார் தண்டபாணி.
மண்ணுக்கும், மக்களுக்கும் ஒருசேரச் சேவை செய்யும் தண்டபாணியும் ஒருவகையில் வைத்தீஸ்வரன் தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT