Published : 29 May 2020 10:11 AM
Last Updated : 29 May 2020 10:11 AM
தமிழ்த் திரையுலகில், ஸ்ரீதரும் நாகேஷும் இணைந்த படங்களை மறக்கவே முடியாது. அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’, தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. இதையடுத்து ‘ஊட்டி வரை உறவு’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார் நாகேஷ்.
பாலசந்தர் - நாகேஷ் கூட்டணி போல், ஸ்ரீதர் - நாகேஷ் கூட்டணியும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஸ்ரீதர் படங்களின் பட்டியலெடுத்துப் பார்த்தால், நாகேஷ்க்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களையும் அவற்றில் உள்ள முக்கியத்துவத்தையும் அறியலாம்.
ஆனால், ஸ்ரீதர் - நாகேஷ் முதன்முதலாக எப்போது இணைந்தார்கள் தெரியுமா?
1959-ம் ஆண்டு வெளியான ‘கல்யாணபரிசு’தான் ஸ்ரீதரின் முதல் படம். அடுத்த வருடம் அதாவது 60-ம் வருடம் ‘விடிவெள்ளி’ படம் வெளியானது. அதே வருடம் ‘மீண்ட சொர்க்கம்’ படத்தை இயக்கினார் ஸ்ரீதர்.
61-ம் வருடம், ‘தேன் நிலவு’ படம் வெளியானது. 62- ம் ஆண்டு ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெளியானது. அடுத்து அதே வருடத்தில் ‘சுமைதாங்கி’ வெளியானது. இதில், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’தான் ஸ்ரீதர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த முதல் படம்.
நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, நாகேஷின் திறமையைக் கண்டு உணர்ந்து கொண்டார். மேலும் அவர் கஷ்டப்பட்டு வருவதை அறிந்து, தன் வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்து உதவினார்.
அதுமட்டுமா? ஸ்ரீதரிடமும் சித்ராலயா கோபுவிடமும் நாகேஷை அழைத்துக் கொண்டு பாலாஜி வந்தார். ‘இந்தப் பையன் நல்லா நடிக்கிறான். இவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன்’ என்று கேட்டுக் கொண்டார்.
நாகேஷைப் பார்த்ததுமே கோபுவுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஸ்ரீதரிடம் நாகேஷைப் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் சிறிய வேடமொன்றைக் கொடுத்தார் நாகேஷ்.
படத்தில் மருத்துவமனை வார்டு பாய் கேரக்டரில் நடிக்க வேறொருவரைத்தான் செலக்ட் செய்திருந்தார் ஸ்ரீதர். ஆனால் படப்பிடிப்பு நாளன்று அவர் வரவே இல்லை. அதனால், அந்தக் கேரக்டர் நாகேஷுக்கு வழங்கப்பட்டது. வார்டு பாய் கதாபாத்திரத்தை மிகப்பிரமாதமாக நடிப்பதைக் கண்டு, பிரமித்துப் போனார்கள் ஸ்ரீதரும் கோபுவும். படம் வெளியாகி, நாகேசஷின் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.
இதன் பின்னர், தொடர்ந்து தன் படங்களில் நாகேஷைப் பயன்படுத்திக் கொண்டார் ஸ்ரீதர். அதேபோல், சித்ராலயா கோபுவும் நாகேஷும் அப்படியொரு நட்பானார்கள். இருவரும் வாடாபோடா நண்பர்களானார்கள்.
நம் நெஞ்சங்களில், ஸ்ரீதரும் நாகேஷும் தனித்தனியே இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்த பல வெற்றிகளைச் சுவைத்திருக்கிறார்கள். அந்த வெற்றிக்கும் கூட்டணிக்கும் அச்சாரம் போட்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் நம் இதயத்தில் நீங்காத இடம்பிடித்த திரைக்காவியம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT