Published : 28 May 2020 06:32 PM
Last Updated : 28 May 2020 06:32 PM
தன்னுடைய இறுதிக்காலம் வரை கரோனா நோய்த் தடுப்புப் பணியில் பணியாற்றி வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் பிரஸில்லா நேற்று இரவு காலமானார்.
'இந்த தமிழ்' நாளிதழின் 'பெண் இன்று' இணைப்பிதழில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி 'களத்தில் பெண்கள்: கரோனாவிலிருந்து காக்கும் கரங்கள்' என்ற தலைப்பில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரைக்காக செவிலியர் பிரஸில்லாவிடம் பேசினேன். அப்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா மருத்துவப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த பிரஸில்லா தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சேவைக்கு கிடைத்த வாய்ப்பு
முப்பது ஆண்டு கால செவிலியர் பணியிலிருந்த அவர் இந்த ஆண்டுதான் பணி ஓய்வு பெறவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், கரோனா பேரிடர் காலத்தைச் சமாளிக்க அவருக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. பொதுவாகப் பணி நீட்டிப்பு குறித்து பலர் வருத்தப்பட்ட நிலையில் செவிலியர் பிரஸில்லா தன்னுடைய பணி நீட்டிப்பை நினைத்து சந்தோஷப்பட்டவர்.
"எனக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதை இந்தக் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய இத்தனை ஆண்டுக்கால பணியில் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான்" என்றார்.
வாழ்விலிருந்தும் ஓய்வுபெற்றார்
புதிய வகை கரோனா வைரஸைக் கண்டு அஞ்சாமல் பணி நிறைவு பெறும் நேரத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் புத்துணர்ச்சியுடன் செவிலியர் பணியைச் செய்து வந்தார் அவர். தன்னைச் சிறு வயதில் நோயிலிருந்து காப்பாற்றிய செவிலியரைப் போல் தானும் ஒருநாள் செவிலியராகப் பணிபுரிந்து நோயாளிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் செவிலியர் பணிக்கு வந்ததாக அவர் சொன்னார்.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்த நேரத்தில் மருத்துவமனையில் வேலை நேரம் அதிகரித்தாலும் அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்போதுதான் தன்னுடைய செவிலியர் பணியை மனநிறைவுடன் செய்ய முடிகிறது. இதன் பிறகு நான் நிம்மதியாக பணியிலிருந்து ஓய்வுபெறுவேன்" என மகிழ்ச்சியாகச் சொன்ன செவிலியர் பிரஸில்லா தற்போது தனது மொத்த வாழ்விலிருந்தே ஓய்வு பெற்றுவிட்டார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியைக் குணப்படுத்தி அவரை ஆரோக்கியமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த தருணம் பற்றி பிரஸில்லா சொன்னபோது ஏதோ தன்னுடைய உடன் பிறந்தவரை நலமுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்ததுபோல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
தன்னுடைய இறுதிக்காலம் வரை கரோனா நோய்த் தடுப்பு பணியில் பணியாற்றி வந்த செவிலியர் பிரஸில்லா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (மே 27) இரவு செவிலியர் பிரஸில்லா காலமானார். அவர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை கரோனா நோய்த் தடுப்பு பிரிவில்தான் செவிலியர் பிரஸில்லா பணியாற்றி வந்துள்ளார். இதனால் அவர் கரோனாவால் இறந்திருப்பாரோ என்ற கேள்வி மற்ற செவிலியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கரோனாவால் இறந்தாரா, இல்லையா என்ற வாதத்தை விடுத்து தன்னுடைய இறுதி நாட்கள் வரை கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்ட செவிலியர் கண்காணிப்பாளர் பிரஸில்லாவுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்குவதே சேவையே வாழ்க்கை என வாழ்ந்த செவிலியர் பிரஸில்லாவுக்கு தரும் மரியாதைக்குரிய அஞ்சலியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT