Published : 28 May 2020 02:35 PM
Last Updated : 28 May 2020 02:35 PM
நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஊரடங்கு அறிவித்ததிலிருந்து மேற்கொண்டுவரும் நிவாரணப் பணிகளுக்காகப் பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். அவர் தான் தொடங்கியிருக்கும் ‘கர் பேஜோ’ (வீட்டுக்கு அனுப்பு) இயக்கத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
“நம்முடைய சாலைகள், வீடுகள், அலுவலகங்களைக் கட்டுவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உதவியிருக்கிறார்கள். அவர்கள் வீடில்லாமல் அவதிப்படுவதை நாம் பார்த்துகொண்டிருக்க முடியாது” என்று சொல்கிறார் நடிகர் சோனு சூட். கோவிட்-19 ஊரடங்கு அறிவித்ததிலிருந்து மும்பையிலிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பேருந்து வசதிகளை அவர் ஏற்பாடு செய்துகொடுத்துவருகிறார்.
அவர் தன் ‘கர் பேஜோ’ இயக்கத்தின் மூலம் இதுவரை ஏறத்தாழ 12,000 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அத்துடன், மேலும் 45,000 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் சுமார் 45,000 பேருக்கு உணவு, குடிநீர் வசதிகளை அவர் ஏற்பாடு செய்துகொடுத்து வருகிறார். ஒருநாளில், சுமார் 22 மணி நேரம், நிவாரணப் பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்பை மேற்கொண்டுவருவதாகச் சொல்கிறார் அவர்.
உதவும் கரங்கள்
‘தபங்’(இந்தி), ‘அருந்ததி’ (தெலுங்கு), சந்திரமுகி (தமிழ்) உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சோனு. ஆனால், திரைக்கு வெளியே, அனைவரிடமும் நட்புடன் பழகக்கூடிய நடிகர் என்ற பெயர் பெற்றவர். தற்போது, அவர் தானாக முன்வந்து மேற்கொண்டுவரும் நிவாரணப் பணிகளால் நிஜ கதாநாயகனாகப் பாராட்டப்படுகிறார். அவரது குழு 18001213711- என்ற டோல்ஃப்ரீ நம்பரை சமீபத்தில் அறிவித்துள்ளது. அத்துடன், சமூக ஊடகங்கள் வழியாக அவருக்கு வரும் கோரிக்கைகளையும் நிர்வகித்துவருகிறார்.
“ஆரம்பத்தில், நான் இங்கிருக்கும் சில புலம்பெயர் தொழிலாளர்களுடன் பேசினேன். அவர்கள் கண்ணீர் மல்க நின்றிருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் மோசமான நிலையில் இருந்தார்கள். நான் அவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் எனக்கு அவகாசம் கொடுக்குமாறு கேட்டேன். என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முயல்கிறேன்” என்று சொல்லியிருந்தேன் என்கிறார் சோனு. அவர் தனக்குத் தெரிந்த நண்பர்களின் உதவியோடு போக்குவரத்து அதிகாரிகள், காவல் துறையினர், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்றுள்ளார். “ஒருங்கிணைப்புப் பணிகள், தகவல் சேகரிப்புக்கு நேரம் எடுத்தது. எங்களுக்கு அனுமதி கிடைத்தது. மருத்துவப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைளை மேற்கொண்டபிறகு, முதற்கட்டமாக எங்களால் 350 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா அனுப்ப முடிந்தது” என்று விளக்குகிறார் அவர்.
அதிலிருந்து பேருந்துகள் மும்பையிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லத் தொடங்கின. உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்புவதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. மற்ற மாநிலங்களுக்குச் செல்வதற்கான கோரிக்கைகளும் அவருக்கு வருவதாகச் சொல்கிறார். மும்பையிலிருந்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கும் அவர் உதவத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார் சோனு. ஆனால், மகாராஷ்டிராவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் வேளையில், தெலங்கானா மாதிரியான மாநிலங்களிடம் அனுமதி பெறுவது கடினமாக இருக்கிறது. “எங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே இப்போதைக்குப் பேருந்துகளை இயக்கிவருகிறோம்” என்கிறார் சோனு.
பல லட்சம் பேருக்கு உதவி தேவைப்படுகிறது
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் ரயில்கள் நாடு முழுவதும் இயங்க தொடங்கியிருப்பதால், இந்த நெருக்கடியை ஒரளவு சமாளிக்க முடிகிறது. ஆனால், இன்னமும் பேருந்துகளுக்கான தேவை இருப்பதாகச் சொல்கிறார் சோனு. “பல லட்சம் பேருக்கு உதவி தேவைப்படுகிறது. எங்களால் இயன்ற வரையில், உதவ முயன்று வருகிறோம். இங்கிருக்கும் கடைசி புலம்பெயர் தொழிலாளர் வீட்டுக்குச் செல்லும் வரையில், நாங்கள் இந்தப் பணியை நிறுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைவதைப் பார்ப்பது பெரும் மனத்திருப்தியை அளிக்கிறது” என்கிறார் அவர்.
அவர் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் இது தொடர்பான பணிகளில் உதவி வருவதாகச் சொல்கிறார் சோனு. “சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட ஒருங்கிணைப்புத் தேவைப்படுகிறது. யார் எந்தப் பேருந்தில், எந்த நேரத்தில் பயணம் செய்கிறார்கள் என்பது போன்றவற்றைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் சிக்கியிருக்கும் சில புலம்பெயர் தொழிலாளர்களை என் நண்பர்கள் நேரில் சென்று பேருந்துகள் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறார்கள்” என்கிறார் அவர்.
இது முழுக்க முழுக்க ஒரு குழு முயற்சி. திரைத்துறையினர் பலரும் தனக்கு உதவ முன்வந்ததாகச் சொல்கிறார் அவர். பாலிவுட் இயக்குநர் ஃபரா கான் அன்றாடம் தன்னை அழைத்து தேவைகளை விசாரித்து வருவதைக் குறிப்பிடுகிறார். அனைவருக்கும் அன்றாடம் தேவைப்படும் குடிநீர் வசதியை ஃபரா கான் ஏற்பாடு செய்துதருவதாகச் சொல்கிறார் சோனு.
கடந்த சில வாரங்களில், இந்த நிவாரணப் பணிகளுக்காக எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க சோனு மறுத்தாலும், ஒரு பேருந்தை வாடகைக்கு எடுக்க ரூ.65,000-லிருந்து ரூ.2 லட்சம் வரை செலவாகியிருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை நடிகர் சோனு தன் சொந்தச் செலவிலேயே பணிக்கு அமர்த்தியிருக்கிறார். புலம்பெயர் தொழிலாளர்களின் பயணங்களின்போது, உணவு, குடிநீர், மற்ற தேவைகளுக்குச் சிலர் தாமாக முன்வந்து உதவிவருவதாகத் தெரிவித்துள்ளார் சோனு.
சுகாதாரப் பணியாளர்களுக்கு
இந்த நிவாரணப் பணிகள் மட்டுமல்லாமல், தன் குடும்பத்துக்குச் சொந்தமாக ஜுஹுவில் தன் தந்தை பெயரில் இயங்கிவரும் சக்கி சாகர் ஹோட்டலில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் சோனு. “இந்தப் பெருந்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள். அவர்களுக்கு உணவு, ஓய்வெடுப்பதற்கு இடம் அளிப்பது எங்களுக்கு மகிழ்க்சியளிக்கிறது” என்கிறார். இந்த நிவாரணப் பணிகள் சவாலானது என்பதை ஒப்புக்கொள்ளும் சோனு, “கடவுள் இதை நடத்துவதற்கு எங்களைக் கருவிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பயணம் தொடரும்” என்கிறார்.
தமிழில்: என். கௌரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT