Published : 27 May 2020 07:38 PM
Last Updated : 27 May 2020 07:38 PM
நகரத்தையே அழிக்கும் பிராணிகள், பறவைகளை நாம் ஹாலிவுட் திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையாக வந்து விவசாய வயல்களைத் தாக்கும் காட்சிகள் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அரங்கேறத் தொடங்கியுள்ளன. கோவிட் -19 தொற்று தொடர்பிலான பாதிப்புகளிலிருந்து இந்தியா மீளாத நிலையில், உழைத்துப் பயிர் செய்து கதிர் முற்றி நிற்கும் பருவத்தில், லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளுக்கு வயல்கள் இரையாகிப் போவதை விவசாயிகள் கண்ணுற்று வருகின்றனர். வெட்டுக்கிளித் தாக்குதலால் பஞ்சத்துக்கும் வறுமைக்கும் ஆளாகி வேளாண்மையை நம்பியிருக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஊரைவிட்டுச் சென்ற கதைகள் வரலாறெங்கும் உள்ளன. விவிலியம், குரான், எகிப்திய சுவர் ஓவியங்கள் எல்லாவற்றிலும் வெட்டுக்கிளி படையெடுப்பு சித்திரங்களாக உள்ளன. இந்தியாவில் இப்படிப்பட்ட வெட்டுக்கிளி படையெடுப்பு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ராஜஸ்தானில் மட்டும் வெட்டுக்கிளிகள் நடத்திய தாக்குதலில் சேதமான பயிரின் மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய்.
வெட்டுக்கிளி படையெடுப்பு எப்படி?
இந்தப் பாலைவனத்து வெட்டுக்கிளிகள் காற்றின் வேகத்துக்கு ஏற்ப தினசரி 150 கிலோ மீட்டர் தூரம் பறக்கக்கூடியவை. இலைகள், பூ, பழங்கள், விதைகள், மரத்தின் தண்டு, முளைகள் என எல்லாவற்றையும் சாப்பிடக்கூடியவை இந்த வெட்டுக்கிளிகள். மனிதனைக் கடிக்காது என்பது மட்டும் தான் நிம்மதியான தகவல். ஒரு வெட்டுக்கிளிப் படை, ஒரு நாளில் பத்து யானைகள், 25 ஒட்டகங்கள் அல்லது 2 ஆயிரத்து 500 மனிதர்களின் உணவைத் தின்றுவிடக்கூடியது. சமீபத்தில் இந்தியாவைத் தாக்கிய ஒரு வெட்டுக்கிளியின் படையின் சதுர பரப்பளவு ஆயிரத்து 500 கிலோ மீட்டர். 1875-ம் ஆண்டில் அமெரிக்காவைத் தாக்கிய ஒரு வெட்டுக்கிளிப் படையின் பரப்பளவும் ஐந்து லட்சத்து 12 ஆயிரத்து 817 சதுர கிலோமீட்டர். டெல்லி சமீபத்தில் பார்த்த வெட்டுக்கிளிப் படை சாப்பிடும் உணவு, ராஜஸ்தான் அல்லது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சாப்பிடும் ஒரு நாள் உணவு ஆகும்.
ராஜஸ்தானின் நகர்ப்புறப் பகுதிகள், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் உள்ள விவசாய கிராமங்களில் சமீப நாட்களில் தென்படத் தொடங்கின. ஏப்ரல் 11-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் எல்லையில்தான் முதலில் இவை தென்பட்டிருக்கின்றன.
எல்லை தாண்டிய வெட்டுக்கிளிகள்
1993-ம் ஆண்டுவரையில் இந்தியாவில் வெட்டுக்கிளிப் படையெடுப்புகள் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளேயே நின்றவை. இந்த ஆண்டு ராபி பருவத்தில் தான் வெட்டுக்கிளிப் படையெடுப்புகள் மாநிலங்களைக் கடப்பதற்கு பருவநிலை மிகவும் சாதகமாக இருந்துள்ளது. வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்துக்குச் சாதகமான காலம் மழைக்காலம். வெப்பமான பருவநிலையில் வெட்டுக்கிளிகள் அதிகம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. இந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாலைவன வெட்டுக்கிளிகள் வழக்கத்தை விட 400 மடங்கு அதிகமாக இனப்பெரும் செய்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகள் இந்தப் பருவத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய மகாசமுத்திரத்தில் ஏற்பட்ட சூறாவளிப் புயல்களும் கனமழைகளும் பாலைவன வெட்டுக்கிளிகளின் அதிக இனப்பெருக்கத்துக்கும் தாக்குதலுக்கும் காரணமாகச் சொல்லப்படுகின்றன. உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, அடுத்த மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் புதிதாக இனப்பெருக்கமாகும் வெட்டுக்கிளிகள் இந்தியாவுக்கு வந்து இன்னொரு பெரும் தாக்குதலைக் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
லட்சக்கணக்கில் சேர்ந்து விவசாயப் பயிர்களைத் தாக்கி அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிப் படைகளை ஆளற்ற விமானங்கள், டிராக்டர்கள் கொண்ட பெரும்படையைக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் அழிக்க இந்திய அரசு முயன்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT