Last Updated : 27 May, 2020 05:50 PM

 

Published : 27 May 2020 05:50 PM
Last Updated : 27 May 2020 05:50 PM

’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்!’’ -  வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள் - பிரத்யேகப் பேட்டி

‘முதல்மரியாதை’ல நடிக்கறதுக்கு பாரதிராஜா சார் கூப்பிட்டாரு. ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு அப்புறம் இதுதான். நடுவுல, ‘அலைகள் ஓய்வதில்லை’ ல சில்க் ஸ்மிதா கேரக்டருக்கு என்னைத்தான் கூப்பிட்டாரு. ஒரு ரெண்டுநாள் லேட்டாப் போயிட்டேன். அதனால, சில்க் ஸ்மிதாவும் தியாகராஜனும் நடிச்சிட்டாங்க. இல்லேன்னா, நானும் சந்திரசேகரும்தான் நடிக்கவேண்டியது.


‘டேட் கூட கொடுக்கமுடியாத அளவுக்கு நீங்க பிஸியா?’ன்னு திட்டினாரு பாரதிராஜா சார்’’ என்று சிரித்துக் கொண்டே தன் வாழ்க்கை அனுபவங்களை விவரித்தார் வடிவுக்கரசி.

‘இந்து தமிழ் திசை’யின் ‘Rewind With Ramji' நிகழ்ச்சிக்காக, வடிவுக்கரசி அளித்த நீண்டதான முழுமையான வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது.


‘’பாரதிராஜா சார் ‘முதல் மரியாதை’ல நடிக்கிறதுக்காகக் கூப்பிட்டார். அவரோட ஆபீஸுக்கு வரச் சொல்லியிருந்தாங்க. இதுல நமக்கு எதிர்ப்பும் அங்கே கிளம்புச்சு. ‘ஏன் சார் வடிவுக்கரசி? வேற யாரையாவது போடலாம் சார்’னு சொன்னாங்க. சிவாஜி சாருக்கு மனைவியா வடிவுக்கரசி எப்படிங்க செட்டாகும்? ஸ்ரீவித்யா, லட்சுமின்னு யாரையாவது போடலாம்’னு சொன்னாங்க. ஆனா எங்க டைரக்டர் மட்டும் ’யோவ், ஸ்ரீவித்யா பிராமணப் பெண் அப்படின்னு ஒலகத்துக்கே தெரியும். தேவர் வீட்டு பொண்ணா யாரும் ஏத்துக்கமாட்டாங்க. லட்சுமியும் அப்படித்தான். இந்தப் பொம்பளை (என்னை) தான்யா, என்னை மாதிரியே கறுப்பா இருக்கு. என் கலர்ல இருக்குது. வரச்சொல்லு, நான் டெஸ்ட் எடுத்துக்கறேன்’னு உறுதியா இருந்தாரு.


ஆபீஸ் போனேன். ‘சிகப்பு ரோஜாக்கள்’. அப்புறம் ‘அலைகள் ஓய்வதில்லை’க்கு கூப்பிட்டாரு. பண்ணமுடியாமப் போச்சு. இப்போ, இதுல எப்படியாவது நடிச்சிடணும். இல்லேன்னா, கோவிச்சுக்குவாருன்னு கரெக்டாப் போயிட்டேன். ஆனா ‘எனக்கு சான்ஸ் கொடுங்க’ன்னு இதுவரைக்கும் அவர்கிட்ட கேட்டதே இல்ல.
போனேன். காதை மடக்குனாங்க. தண்டட்டி போட்டாங்க. இன்னும் மூஞ்சில கறுப்பு ஏத்துனாங்க. நான் கவலையேபடலை. சிவாஜி சாருக்கு ஜோடியா நடிக்கணும். நாம ஜோடியா நடிக்கிறோம். சுஜாதாம்மா மாதிரி ரெட்டை மூக்குத்தி போட்டுக்கணும். ஒரு சைடுதான் மூக்கு குத்திக்கிட்டிருந்தேன். இன்னொரு பக்கமும் குத்திக்கணும்னு முடிவு பண்ணினேன்.


டைரக்டர் சாரும் எல்லாம் பாத்துட்டு ஓகேன்னு சொல்லிட்டாரு. மைசூர்ல ஷூட்டிங்னு தேதியெல்லாம் சொல்லிட்டாரு. ஓகே ஓகே... ‘தங்கப்பதக்கம்’ கே.ஆர்.விஜயாம்மா மாதிரி நடிச்சுக் கலக்கப் போறோம். சிவாஜி சாருக்கு அடுத்த சூப்பர் ஜோடி வடிவுக்கரசிதான்னு இனிமே சொல்லணும், அந்த அளவுக்கு நடிக்கணும்னெல்லாம் நினைச்சிக்கிட்டுப் போனேன். இன்னொரு மூக்கு குத்திக்கிட்டதுல, புண்ணாகி, அப்புறம் சரியாப் போச்சு.


மைசூர் போயிட்டேன். அங்கே கறுப்பு மேக்கப் போட்டாங்க. தண்டட்டிலாம் போட்டாங்க. இப்போ மாதிரிலாம் இல்ல அப்போ. வலி பின்னியெடுத்திரும். சைக்கிள் டியூப் பஞ்சருக்கு ஒட்டுவாங்களே... அதை வைச்சு காதுல ஒட்டுனாங்க. காதை மடக்கி, இதைவைச்சு ஒட்டி, தண்டட்டியைப் போட்டுன்னு இதுக்கே ரெண்டுமணி நேரமாயிரும். அப்புறம் ஒடிகோலன் ஊத்தி ஊத்திதான் எடுக்கணும். ஆனா இதெல்லாம் எனக்கு கவலையே இல்ல. நான் சிவாஜி சாரோட ஜோடி. அவ்ளோதான் நினைப்பு எனக்கு. எல்லாம் ஓகே.


கதாசிரியர் ஆர்.செல்வராஜ் சார் வந்து படிச்சாரு... ‘அப்பச்சி கோவணத்தை காக்கா தூக்கிட்டுப் போயிருச்சாம். அடுப்பு ஊதுற குழல்ல அப்படி என்னடா ராகம்?’னு சொன்னாரு. உடனே நான் கேஷுவலா, ‘இதை யாரு சார் சொல்றாங்க?’ன்னு கேட்டேன். ‘நீங்கதான் சொல்லணும்’னு சொன்னாரு. உடனே நான் உதவி டைரக்டர் சித்ரா லட்சுமணன் சாரைப் பாத்தேன். ‘ஏன் சார் இப்படி ரஃப்பா பேசணும்?’னு கேட்டேன். ‘படத்துல நீ ரஃப்பான பொம்பளதானே’ன்னு சொன்னாரு.


அப்படியே அதிர்ந்து போயிட்டேன். என்னை மீறி அழுகை வருது. ’டைரக்டர் ஆபீஸுக்குப் போய் இதுவரைக்கும் சான்ஸ் கேட்டதில்ல நான். அவர் ஏன் என்னை இப்படிப் பழிவாங்குறாரு. ‘அலைகள் ஓய்வதில்லை’ல நான் நடிக்கறதுக்கு வரலைங்கறதுக்காக என்னைப் பழிவாங்குறாரா?’ன்னு எனக்கு என்னெலாம் தோணுதோ, அப்படிலாம் பாரதிராஜா சாரைத் திட்டினேன். ’இல்லீங்க, நான் ‘முதல் மரியாதை’ கேரக்டர் பண்ணமாட்டேன்’னு சொல்லிட்டேன்.


மைசூர். படப்பிடிப்பு நடக்கற ஸ்பாட். இன்னும் கொஞ்ச நேரத்துல சிவாஜி சார் வந்துருவாரு. ஆனா, உக்கார்ந்து அழுவுறேன் நான். ’என்னய்யா இந்தப் பொண்ணு?’ன்னு டென்ஷனாயிட்டாரு பாரதிராஜா சார். எல்லாரும் ‘சார். அது நடிக்காதாம் சார். ஊருக்குப் போறேன்னு சொல்லுது சார்’னு சொன்னாங்க. ‘யோவ் என்னய்யா இது. இதோ... அண்ணன் வந்துருவாருய்யா. என்னவாம் அதுக்கு?’ன்னு கோபமாக் கேட்டாரு. ‘இல்ல சார், இந்தக் கேரக்டர் அவங்களுக்குப் பிடிக்கலையாம்’னு சொன்னாங்க.
அவ்ளோதான். பாரதிராஜா சார் இன்னும் கடுப்பாயிட்டாரு... ’அதுக்கு என்னய்யா தெரியும் இந்தக் கேரக்டரைப் பத்தி? போய் நடிக்கச் சொல்லு மரியாதையா’ன்னு கத்துனாரு. உடனே நான் டைரக்டர் சாரைப் பாத்து முறைச்சேன். ’உங்ககிட்ட நான் சான்ஸ் கேட்டேனா? ஏன் இப்படிப் பண்றீங்க?’ன்னு அழுவுறேன்.ஆனா நடிக்க ஒத்துக்கிட்டேன்.


ஏன்னா... மைசூரைத் தாண்டி ஏதோவொரு கிராமம். ஆட்டோ கூட கிடைக்காது. அப்படியொரு ஏரியா அது.


‘இந்தக் கூடையை எடுத்துக்கிட்டு வர்றீங்க. அந்தப் பையன் (தீபன், எம்ஜிஆரோட ரிலேடிவ்) புல்லாங்குழல் வாசிக்கிறாரு. நீங்க வந்து கூடையை டங்குன்னு வைக்கிறீங்க. எனக்கு எங்க டைரக்டர் மேல அவ்ளோ கோபம். கூடையைக் கொண்டு வந்து டொப்புன்னு போட்டுட்டு, ‘அப்பச்சி கோவணத்தை காக்கா தூக்கிட்டுப் போச்சாம். அடுப்பூதுற குழல்ல அப்படியென்னடா ராகம்?’னு சொல்லி, அவர் மேல இருந்த கோபத்தையெல்லாம் வைச்சுத்தான் நடிச்சேன்.


ஒவ்வொரு ஃப்ரேமும் நடிச்சுக் காட்டுவாரு பாரதிராஜா சார். ஒவ்வொரு ஃப்ரேமும் அவர் மேல இருக்கிற கோபத்தை வைச்சுக்கிட்டேதான் நடிச்சேன். ராதா வரும்... ராதாவை நான் விளக்குமாத்தால அடிக்கணும். ராதாவை நான் ‘அலைகள் ஓய்வதில்லை’ல பாத்ததோட சரி. இப்பதான் பாக்கறேன்.


‘சேச்சி... நீங்களே சரியா அடிச்சிருங்க சேச்சி. இல்லேன்னா, நீங்க நடிக்கிறது சரியா இல்லேன்னா, டைரக்டர் வந்து உண்மையாவே அடிச்சிருவாரு சேச்சி’ன்னு சொன்னாங்க. நான் டைரக்டர் மேல கடுப்புல இருக்கேன். சரிம்மா பாக்கலாம்னு சொன்னேன்.


அந்த சந்துல சிவாஜி சார் கொப்புளிச்சுதான் தண்ணியைத் துப்பிருப்பாரு. அந்த சந்துல ராதா கேரக்டர் வரும். அப்ப நான் வெளியே போய், ‘எவடி அவ, உரசிக்கிறதுக்கு பொன்னாத்தா வீட்டு சுவருதான் வசதியா இருக்குன்னா, வாங்கடி...வாங்க’ன்னு கத்திட்டு ஓடணும். அப்போ விளக்குமாத்தை எடுத்துக்கிட்டு ஓடிப்போய் பிடிச்சிருவேன். அப்போ ஓடுனதுக்கு, நான் தண் தண் தண்னு நடப்பேனே... அதுதான் கைகொடுத்துச்சு. டைரக்டர் சார், ஜீன்ஸ் பேண்ட்டைப் பிடிச்சிக்கிட்டு நடந்துகாமிப்பாரு. ‘இப்படி நடக்கணும்’னு சொன்னாரு. ஒவ்வொரு ஃப்ரேமும் நடிச்சுக் காமிச்சாரு பாரதிராஜா சார்.


இன்னிக்கி, நேட்டிவிட்டியோட யாராவது கதை சொன்னாங்கன்னா, டக்குன்னு அந்தக் கேரக்டரைப் பிக்கப் பண்ணிடுறேன்னா... அதுக்குக் காரணம்... ’முதல் மரியாதை’தான். பாரதிராஜா சார்தான்’’ என்று நெகிழ்ந்து சொல்கிறார் வடிவுக்கரசி.


- நினைவுகள் தொடரும்


வடிவுக்கரசியின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x