Published : 27 May 2020 02:44 PM
Last Updated : 27 May 2020 02:44 PM
கரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் ‘locust swarm’ எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் பெரும் அழிவை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்த அழிவு? இவற்றைக் கட்டுப்படுத்த உலக அளவில் என்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்? தமிழகத்துக்கு இந்த வெட்டுக்கிளிகளால் பாதிப்பு இருக்குமா? என்று துறை சார்ந்த சிலரிடம் கேட்டடோம்.
மதுரைக் கல்லூரி விலங்கியல் பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகியுமான தினகரன் கூறியதாவது:
“இயல்பாகவே வெட்டுக்கிளிகள் தனிமை விரும்பிகள். இரவாடி. பொதுவாக இரண்டு வெட்டுக்கிளிகள் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே. கூட்டமாகச் சுற்றுவது அதன் இயல்பு அல்ல. ஆனால், செரோடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும்போது இதன் குணங்களில் பெரும் மாற்றம் நிகழ்கிறது. உடல் நீளம், வண்ணம், தோற்றம், நடத்தைகளில் இந்த மாற்றம் ஏற்படுகிறது. தனியாகத் திரிந்தவை கூட்டம் சேரத் தொடங்குகின்றன. ஒரு கூட்டம் இன்னொன்றோடு, பின் மற்றதோடு எனப் பெருங்கூட்டமாக இணைந்து பயிர்களை துவம்சம் செய்யத் தொடங்கிவிடுகின்றன. இந்த நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் ஸ்வார்மிங் என்று பெயர்.
ஆராய்ச்சிக் கூடங்களில், கணினி நிரல்களோடு சோதனை மேற்கொண்டதில் வெட்டுக்கிளியின் பின்னங்காலில் ஏற்படும் தூண்டுதல் காரணமாக இது நிகழ்வதாகக் கூறுகிறார்கள். இந்தக் கூட்டம் 460 சதுர மைல்களுக்குப் பரவும் வல்லமை படைத்தவை. கிட்டத்தட்ட 400-ல் இருந்து 800 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். ஒவ்வொரு வெட்டுக்கிளியும், ஒவ்வொரு நாளும் தனது எடைக்கு நிகராகத் தாவரங்களை உண்ணும். அப்படியென்றால் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கூட்டமும் சுமாராக 430 மில்லியன் பவுண்டுகள் உணவைக் காலி செய்துவிடும். இந்நிகழ்வு 10 வாரங்கள் கூட நீடிக்கலாம்.
போன வருடம் பாகிஸ்தான் வழியாக இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம் வந்த வெட்டுக்கிளிகள், வேளாண் நிலங்களைக் கடும் சேதத்துக்கு உள்ளாக்கின கடந்த 27 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிக மோசமான விளைவுகளை சந்தித்திருக்கிறது இந்தியா. இந்தத் தாக்குதல் தொடர்ந்தால், இந்தியர்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒரே ஆறுதல் இந்நிகழ்வு தமிழ்நாட்டில் ஏற்படுவதில்லை” என்றார் தினகரன் .
பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஜியோ டாமின் கூறியதாவது:-
“இந்திய விளைநிலங்களைத் தற்போது ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்கள் இருந்தாலும் அதில், வெறும் 22 இனங்களே இந்த ‘locust swarm’ எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கள் தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை.
இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது கரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர் இடப்பெயர்வு, பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும் நச்சையே இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம், நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இயற்கையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் இந்நேரத்தில் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயர்ச்சியைச் சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் எச்சரித்திருக்கிறார். தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
கரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்தது போன்றில்லாது இப்போதே மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்விதத் தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது” என்றார் ஜியோ டாமின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT