Published : 26 May 2020 09:01 PM
Last Updated : 26 May 2020 09:01 PM
கணவனால் அடித்து துன்புறுத்தப்படும் பெண்கள் பொதுவாக உதவி வேண்டி அக்கம்பக்கத்தாரை, உறவினரை நாடுவர். ஒன்று பாதுகாப்பானவர்களை நாடி பெண்கள் செல்வார்கள் அல்லது மத்தியஸ்தம் செய்யவாவது யாரேனும் முன் வருவார்கள். ஆனால் ஊரடங்கினால் இரண்டுக்கும் வழி இல்லாமல் போய்விட்டது.
வீடடங்கி இருக்கும் நாட்கள் நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக ஒரு புறம் இருக்கிறது. ஆனால் மோசமான இணையரைக் கொண்ட பெண்களுக்கு அதுவே கொடிய தண்டனைக் காலமாக மாறி இருக்கிறது. குடும்ப வன்முறை உச்சபட்சத்தை எட்டி இருக்கும் நாட்களாக இவை மாறிவிட்டன. இதன் புள்ளிவிவரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் பதிவான புகார்களை மட்டுமே ஆதாரமாக வைத்து இங்கு உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேசிய மகளிர் ஆணையத்தின் உதவி எண் செயல்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் பதிவாகி இருக்கும் புகார்கள் அனைத்துமே மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், இணையதளங்கள் வழியாகப் பெறப்பட்டவை மட்டுமே.
இணைய வசதியுடன் கூடிய அலைபேசி கொண்ட பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடவும் பலமடங்கு குறைவு என்பதுதான் நிதர்சனம். குறிப்பாகப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் வாழும் பெண்கள் இணையம் மூலம் புகார் அளிக்க வாய்ப்பில்லை. இந்தக் கோணத்தை 'லிசன் டு ஹர்' (Listen To Her) என்ற 7 நிமிட குறும்படத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான நந்திதா தாஸ்.
'நடந்ததை எல்லாம் சொல்லுங்கள்'
உயர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவியாக நந்திதா தாஸ் திரையில் தோன்றப் படம் தொடங்குகிறது. தன் வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் சாப்பாட்டு மேஜை மீது லேப்டாப் வைத்து வீட்டில் இருந்து அலுவலகப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார் நந்திதா. அருகில் 10 வயது மதிக்கத்தக்க மகன் விளையாடியபடி தாயிடம் உரையாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே லேப் டாப்பில் வீடியோ கான்ஃபிரன்ஸிங்கில் தோன்றும் முகங்களுடனும் வேலை நிமித்தமான பேச்சை நந்திதா தொடர்கிறார்.
இதற்கிடையில் சமையல் வேலை, அறையில் இருந்தபடி கணவர் கேட்கும் காபியைப் போட்டுத் தருவது என பலவற்றைத் துரிதமாகச் சமாளித்துக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் முன்பின் தெரியாத எண் மற்றும் நபரிடம் இருந்து அந்த அலைபேசி அழைப்பு வருகிறது.
உதவி வேண்டி ஒரு பெண்ணின் அழுகுரல் ஒலிக்கிறது. என்னவென்று சுதாரிப்பதற்குள் மறுமுனையில் ரகசியமாகப் பேசும் அந்தப் பெண் தாக்கப்படுவது கேட்கிறது. குழந்தைகள் அலறி அழும் குரல்களும் கேட்கின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் காவல்துறைக்கு போன் செய்து துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு உடனடியாக உதவும்படி கோருகிறார் நந்திதா. காவல்துறையிடம் இருந்து அலட்சியமான பதில் கிடைக்கிறது. மீண்டும் லேப்டாப், வீட்டு வேலை என தன்னுடைய உலகத்துக்குள் செல்வதற்குள் மீண்டும் அந்தப் பெண் பலவீனமான குரலில், 'எனக்கு உதவுவீர்களா?' என்று கேட்க, 'நடந்ததை எல்லாம் சொல்லுங்கள்' என்று பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்குச் செவிமடுத்துத் தனி அறைக்குள் நடந்து சென்று கதவைச் சாத்துகிறார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பெண்களுமே ஏதோ ஒரு விதத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளாகவே செய்கிறார்கள். மேட்டுக்குடி பெண் அத்தனை பொறுப்புகளையும் தூக்கிச் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறாள். மறுமுனையில் அலைக்கழியும் சாமானியப் பெண் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறாள். நந்திதாவின் வீடு தேடி மாம்பழ மூட்டை வந்தாலும் கதவைத் திறந்து அதை வாங்கிக் கொள்ளக்கூட கணவன் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வராமல் மனைவிக்குக் கட்டளை இடுகிறான். மறுமுனையில் கடைக்கு உணவு வாங்கச் சென்ற பெண் தாமதமாக வீடு திரும்பியதால் அடித்துத் துன்புறுத்தப்படும் அவலநிலையைச் சொல்ல ஆளில்லாமல் தவிக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொன்று கடைசிக் காட்சியாகும். குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் அந்தப் பெண் தன் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கக்கூட அவளுக்கு அந்தரங்கமான இடமில்லை. அவளுக்குச் செவிமடுக்கும் நந்திதாவுக்கு தன் வீட்டில் இருக்கும் தனி அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதுவே நிதர்சனம். ஒண்டுக் குடித்தனம் நடத்தும் பெண்கள் தங்களுடைய சுகம், துக்கம் எதையுமே வெளிப்படுத்த அந்தரங்க வெளி அற்றவர்களாகச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் மீதான குடும்ப வன்முறை அத்துமீறிச் செல்கிறது என்பதை நுட்பமாகப் படம் பதிவு செய்துள்ளது. அதேபோன்று பெண்களின் இன்னல்கள் இங்கு கேட்பாரற்றுக் கிடப்பதை காவல்துறையின் எதிர்வினை உணர்த்துகிறது. ஆபத்தில் இருக்கும் பெண்ணுக்கு அவசர கதியில் உதவுமாறு நந்திதா காவல்துறையினரிடம் அலைபேசியில் வலியுறுத்தும்போது, "ஏற்கெனவே பல புகார்கள் இருக்கும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எங்களுக்குச் சொல்ல வேண்டாம்" என்பதே காவல்துறையின் குரலாக ஒலிக்கிறது.
குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும்பெண்கள் புகார் அளிக்கும் சூழல் முதலில் உருவாக்கப்பட வேண்டும், அளிக்கப்படும் புகார்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையைக் கேட்க மனங்கள் வேண்டும் என பல அடுக்குகளில் செய்ய வேண்டியவற்றைத் தனிமனிதர்களுக்கும் அரசுக்கும் சுட்டிக்காட்டுகிறது படம். மொத்தத்தில் 'வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்' என்ற கரோனா காலத்து தாரக மந்திரத்தின் அபத்தத்தைப் போட்டுடைக்கிறது இக்குறும்படம்.
நந்திதா தாஸ் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'லிசன் டு ஹர்' (Listen To Her) குறும்படத்தைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT