Last Updated : 23 May, 2020 03:06 PM

 

Published : 23 May 2020 03:06 PM
Last Updated : 23 May 2020 03:06 PM

நதியின் மடியில்

அது ஒரு மழைக்காலம். பிஹாரில், கங்கையின் கரையோரத்தில் உள்ள பருனே எனும் சிற்றூருக்கு அலுவலுக நிமித்தமாகச் செல்ல நேரிட்டது. காலை சுமார் 7 மணி இருக்கும். ரயில் நிலையத்துக்குச் சற்று முன்பாக, கம்பீரமாகப் பாய்ந்தோடும் கங்கை ஆற்றின் மீதுள்ள ஈரடுக்குப் பாலத்தின் மீது ரயில் ஊர்ந்து சென்றது. பாலத்துக்குக் கீழே நதி, சமுத்திரம் போன்று காட்சியளித்தது. மழையோ கங்கை மேல் கொணட காதலில், அதனுடன் கலக்கும் ஆசையில், வெறிகொண்டு பொழிந்துகொண்டிருந்தது. நான் மட்டுமே இறங்க வேண்டியிருந்ததால், பெட்டியே தூங்கிக்கொண்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்களைத் தரை வழியாக இணைப்பது இந்தப் பாலம்தான். அந்த அடை மழையிலும், ஆச்சரியம் தரும் வகையில், கரையோரம் ஜனத்தலைகள் நிரம்பியிருந்தன. சற்றுத் தொலைவில் சிறு புகை மண்டலமும் தெரிந்தது.

கங்கையின் பிரம்மாண்டம்

பிரம்மாண்டமாகத் தவழ்ந்தோடும் அந்தக் கங்கையின் நினைவாகவே அன்றைய அலுவலுகப் பொழுது கழிந்தது. அலுவல் முடிந்தவுடன், கங்கையைக் காண விரைந்தேன். மழையின் சுவடே இல்லாதவண்ணம் வெயில் காய்ந்தது. வெயிலில் கங்கை மின்னிக்கொண்டிருந்தது. ஆனால், கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு தேநீர்க் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மண்பானையில் காய்ச்சிய பாலில் தேநீர் போட்டுக் கொண்டிருந்ததால், கருகிய மண் வாசனை மூக்கைத் துளைத்தது. சாமியார் போல் இருந்த ஒருவர் அருகில் வந்து, தேநீர் வாங்கி தரச் சொல்லி உரிமையுடன் கேட்டார். அவருக்கும் எனக்கும் சேர்த்து தேநீர் வாங்கினேன்.

நதிமூலம்

‘எப்போதும் இப்படித் தான் கூட்டம் இருக்குமா’ என்று கேட்டேன். ‘இன்று அமாவாசை என்பதால், இவ்வளவு கூட்டம்’ என்று சொன்னார். ‘கங்கையின் மீது மட்டும் மக்களுக்கு ஏன் இந்த அளவு காதல்’ என்று கேட்டேன். சற்றே கோபத்துடன், ‘கங்கை இந்தியாவின் ஜீவநதி மட்டுமல்ல, அது நமது புனித நதி. இமய மலையில் உற்பத்தியாகி, ரிஷிகேஷ், ஹரித்வார் வழியாக, அலகாபாத் வருகிறது. அங்கு அதனுடன் யமுனா நதியும் ராம் கங்கா நதியும் கலப்பதால், அந்த இடத்துக்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர். இதில் மனிதர்களும் தொழிற்சாலைகளும் எவ்வளவுதான் கழிவைக் கொட்டினாலும் அதன் புனிதத் தன்மை குறையவே செய்யாது’ என்று சொல்லிவிட்டு விறைப்பாகச் சென்றார்.

நதியை நோக்கிச் செல்லும் பாதையெல்லாம், வரிசையாகக் கடைகள் இருந்தன. பொம்மைகள், குழந்தை விளையாட்டுச் சாமான்கள், கடவுள் படங்கள், சிலைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்கள் இருந்தன. எல்லோரும் தவறாமல், கங்கை தீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக, அந்த கேனை வாங்கி சென்றனர். நதியின் அருகில் செல்லச் செல்லக் கூட்டமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. கூட்டம் மட்டுமல்ல, குப்பைகளும் அதிகமாயின. கங்கை நதி, மனிதர்களின் பாவத்தைச் சுமக்க முடியாமல், சாம்பல் நிறத்தில் தள்ளாடிச் சென்றுகொண்டிருந்தது.

பூஜைகள் பலரகம்

ஒரு முதிய தம்பதி, அதில் குளித்துவிட்டு வந்து பூஜை செய்துகொண்டிருந்தனர். பூஜை முடிந்த பின் அவர்களிடம் பூஜைக்கான காரணம் கேட்டேன். தங்கள் மகளுக்குக் குழந்தை வரம் கேட்டு பூஜை செய்ததாகக் கூறினர். அருகில் ஒரு குடும்பம், கைக் குழந்தையுடன், மேளதாளத்துடன், குளித்து முடித்து வந்து கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அருகில் இருந்த என்னை அழைத்து, ஏதோ ஒரு ருசியான இனிப்புக் கொடுத்தனர். சற்றுத் தள்ளி, புகை மண்டலம் தெரிந்தது.

அங்கு சென்ற பின் தான், அது மயான பூமி என்று தெரிந்தது. அங்கு செல்லும் வழியெங்கும், விதவிதமான மரக்கட்டைகளும் காய்ந்த புற்களும் மலைபோல் குவிந்திருந்தன. இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மரணம் ஒரு வியாபாரம். வசதியைப் பொறுத்து சாதாரண மரக்கட்டையோ அல்லது நறுமணக் கட்டையோ வாங்கப்படுகிறது. நதிக் கரையின் ஓரத்தில் வைத்து உடலைத் தகனம் செய்கிறார்கள். உடல் முழுவதும் எரிந்து முடிந்தபின், அதை நதியில் கரைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல், செல்கிறார்கள்.

நான் பார்த்தவரை அங்கு யாரும் அழவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இறந்தவர், இந்த உலகைவிட வேறு ஒரு நல்ல உலகுக்குச் செல்கிறார் என்ற நம்பிக்கை. எனவே அவரை நல்ல முறையில் அனுப்பி வைத்துவிட்ட நிம்மதியில் சற்று திருப்தியுடன் திரும்பிச் செல்வது போல்தான் இருந்தது. தேநீர் குடித்த அந்த சாமியார், எதற்கோ விடை தேடுவது போல, புகை மண்டலத்துக்குப் பின் அமர்ந்து, எரியும் உடலையும் ஓடும் நதியையும் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்,

நொடிக்கொரு ஆச்சரியத்தை வாரி வழங்கிக்கொண்டேயிருக்கும், இந்த வாழ்க்கையைவிட சுவராசியமான பயணம், வேறு எதுவும் இருக்க வாய்ப்புண்டா?

படங்கள்: முகமது ஹுசைன்

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x