Published : 21 May 2020 06:11 PM
Last Updated : 21 May 2020 06:11 PM
நள்ளிரவு 12 மணி இருக்கும். என் மாமாவிடம் இருந்து போன் வந்தது. கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அத்தை மயங்கி விழுந்துவிட்டாராம். அருகில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றதாகவும், அங்கு டாக்டர் ஏதேதோ சொல்வதால் பயமாக இருக்கிறது என்றும் அழாத குறையாகச் சொன்னார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்.
முந்தைய நாள் சாயங்காலம் நான் பார்த்தபோது அத்தை நன்றாகத்தான் இருந்தார். எனவே, பயப்படும்படி எதுவும் இருக்காது என நம்பினேன். அத்தையும் மாமாவும் தங்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் காதல் மணம் புரிந்தவர்கள். குழந்தையில்லை என்பதை அவர்கள் குறையாகவே கருதியதில்லை. ஒருவருக்கு மற்றொருவர் குழந்தையாக வாழ்ந்தார்கள். வசதிக் குறைவென்றாலும் நிறைவான வாழ்வு அவர்களுடையது.
மருத்துவமனையில் உறவுகள் எல்லோரும் கூடியிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் மாமா அழ ஆரம்பித்தார். அத்தைக்கு ரத்தப் புற்றுநோயாக இருக்கலாம் என்று டாக்டர் சந்தேகிப்பதாகச் சொன்னார். அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், டாக்டரைப் பார்க்கச் சென்றேன். அத்தைக்கு வந்திருப்பது ரத்தப் புற்றுநோய்தான் என்று உறுதிப்படுத்தினார் டாக்டர். இது ஆரம்பக் கட்டம்தான் என்பதால் முழுவதும் குணப்படுத்திவிடலாம் என்றும் சொன்னார்.
நண்பர்களின் ஆலோசனைப்படி மறுநாள் காலையில் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர். ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்ற உறுதி அவர்களின் கண்களில் தென்பட்டது.
வீட்டுக்கு வந்த புது விருந்தாளியை வரவேற்பதுபோல், எங்கள் அத்தனை பேரையும் இன்முகத்துடன் அவர்கள் அனைவரும் வரவேற்றனர். பலர் தங்கள் பலவீனத்தையும் மீறி, தள்ளாடி நடந்து வந்து, என் அத்தையின் கையைப் பிடித்துத் தைரியமாக இருக்கும்படி ஊக்கமளித்தனர். நாலு நாள் கீமோதெரபி இருக்கும், அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு என்றார்கள்.
“முடி கொட்டினால், மயிரா போச்சு என்று நினைத்துக்கொள்” என்று ஒரு மூதாட்டி சொல்லியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். என்ன அங்கு சத்தம் என்று சற்று செல்ல அதட்டலுடன் நுழைந்த நர்ஸைப் பார்த்தவுடன், ‘ஐயையோ டெரர் கீதா வந்துட்டா’ என்றபடி, ஆசிரியருக்குப் பயந்து இருக்கைக்குச் செல்லும் பள்ளிக் குழந்தைகள்போல், அவரவர் படுக்கைக்குச் சென்றனர். அத்தைக்கு அந்தச் சூழ்நிலை பிடித்துப் போயிற்று என்பது அவரின் குதூகலமான பேச்சில் தெரிந்தது.
அவரது பக்கத்துப் படுக்கையில் தேவதை போன்ற, சுமார் இருபது வயது நிரம்பிய பெண் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் மூலம் உள் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் கால்கள் வீங்கியிருந்தன. அவ்வப்போது அவளுடைய அம்மா அவளின் கால்களைத் தடவிக் கொடுத்தபடி இருந்தார். கையில் ஏதோ புத்தகத்தை வைத்து வாசித்தபடி, அவள் அம்மா கடவுளிடம் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டிருந்தார். “நான் தூங்கும்போது நீ கடவுளிடம் வேண்டிக்கொள். நான் விழித்திருக்கும்போது என்னிடம் பேசிக்கொண்டிரு அம்மா” என்று அந்தப் பெண் தன் அம்மாவிடம் சொன்னாள். அம்மாவின் பேச்சு, அழுகையாய் மாறியது. மீண்டும் அந்த மூதாட்டி, “ஏன்மா நீ அழுவதால் ஏதும் மாறப்போகிறதா அல்லது அந்த டெரர் கீதாதான் ஊசி போடாமல் இருக்கப் போகிறாளா?” என்று சத்தமாகக் கேட்க, அவள் அம்மா உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். நர்ஸ் மட்டும் தனக்குக் கேட்டும் கேட்காத மாதிரி தலைகுனிந்து தனக்குள் சிரித்துக்கொண்டார்.
முதல் ஊசியை உடம்பு ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அத்தை கொஞ்சம் சிரமப்பட்டார். முன்னர் பேசிய பாட்டி தள்ளாடியபடியே எழுந்து, இவர் அருகில் வந்தார். “ஒரு ஊசி முடிந்துவிட்டது என்று சந்தோஷப்படு தாயி. மற்ற ஊசிகளை எல்லாம் இனி உன் உடம்பு நல்லா ஏற்றுக்கொள்ளும்” என்று ஊக்கமளிக்க முயன்றார். மற்றவர்களும் இதை ஆமோதித்தனர். அவர்களின் நம்பிக்கை எங்களையும் தொற்றிக்கொள்ள, நாங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இரவு வீடு வந்தோம்.
மறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் சென்றோம். அவர் அருகில் இருந்த அந்த இளம் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அவளுடைய அம்மா கையில் வைத்திருந்த புத்தகம் மட்டும் அந்தப் படுக்கையில் இருந்தது. அந்த அறையைச் சுற்றிப் பார்த்தேன். அதில் சுமார் 50 படுக்கைகள் இருந்தன. சில நோயாளிகள் துணையுடன் இருந்தனர். சில நோயாளிகள் துணையற்றுத் தனியாக இருந்தனர்.
அந்த மூதாட்டி சொன்னபடி மற்ற இரண்டு ஊசிகளை அத்தையின் உடம்பு சற்றுச் சிரமமின்றி ஏற்றுக்கொண்டது. ஆனால், அந்த மூன்று நாட்களில் பல படுக்கைகள் காலியாகின, பின் அந்தப் படுக்கைகள் புதியவர்களால் நிறைந்தன. மூன்றாம் நாள் சாயங்காலம் அந்த மூதாட்டியின் படுக்கை காலியானது. ‘வெளியே இருப்பவர்கள் மட்டும் என்ன ஆயிரம் வருடங்களா வாழப் போகிறார்கள்? இவர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரம் போய்விட்டார்கள்’ என்று யாரிடமோ டெரர் கீதா சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால், என் அத்தை எந்தப் பாதிப்பும் இன்றி மிகவும் உற்சாகமாக இருந்தார். வாசிக்கப் புத்தகம் கேட்டார். வாங்கிக் கொடுத்தேன். சிறிது நேரம் வாசித்தார். பின் அவரது கைபேசியில் அவரது சிறுவயது படங்களைக் காட்டி, அவரது சிறு வயதுக் கதைகளை மிக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். திடீரென்று, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார். “நேரமாச்சு நீ கிளம்பு, காலையில் பார்ப்போம்” என்றார். ஆனால், அவரைப் பார்க்கும் அந்தக் காலை, வராமலே போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT