Published : 21 May 2020 11:26 AM
Last Updated : 21 May 2020 11:26 AM
ஊரடங்கு தொடங்கிய சில வாரங்களுக்குள் நடந்த சம்பவம் இது. மும்பையின் முலுந்த் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு அது. அங்கே சில கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பிரிவில் வாழ்ந்துவருபவர் ஷ்யாம். இணையதள டிக்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். மற்றவர்களைப் போல் அல்லாமல் ஷ்யாமுக்கு வாசிப்புப் பழக்கம் அதிகம். தன்னிடம் இருந்த புத்தகங்களைப் படித்து முடித்துவிட்ட நிலையில், அவருக்குச் சலிப்பாக இருந்தது. ஊரடங்கு மட்டுமல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்பே சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் எங்கே போவது? அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்புப் பிரிவுக்கு என தனி வாட்ஸ் அப் குழு உண்டு. அந்தக் குழுவில் தன்னுடைய புத்தகத் தேவையைப் பற்றி அவர் பதிவிட்டார். வேறு யாரிடமாவது புத்தகம் வாசிக்க இருந்தால், கொடுத்து உதவும்படி கேட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதற்கு ஒருவர் பதிலளித்திருந்தார். தன்னுடைய புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்கள் தெரியும்படி அந்த நபர் படமெடுத்து அனுப்பியிருந்தார். புகழ்பெற்ற ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் பி.ஜி. வூட்ஹவுஸ் எழுதிய நிறைய புத்தகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. தனக்குப் பிடித்த 'தேங்க் யு, ஜீவ்ஸ்' என்ற புத்தகம் வேண்டுமென ஷ்யாம் கோரிக்கை விடுத்தார். சரி, அந்தப் புத்தகம் உங்கள் வீட்டுக்கு வெளியே உள்ள காலணி அடுக்கில் வைக்கப்படும் என்று புத்தக அலமாரிக்காரர் தகவல் தெரிவித்தார். அதன்படி ஷ்யாமும் புத்தகத்தை எடுத்துக்கொண்டார். இதுபோல் மூன்று முறை புத்தகங்களைப் பெற்று ஷ்யாம் வாசித்துவிட்டார். இப்போதும்கூட அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தரும் நபரின் பெயரோ முகமோ ஷ்யாமுக்குத் தெரியாது. புத்தகம் தரும் நபரின் வீட்டு எண் மட்டுமே தெரியும்.
சமீபத்தில் இறந்துபோன பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்த 'லன்ச் பாக்ஸ்' படத்தில் வருவதைப்போல், தனக்குப் புத்தகம் தரும் நபரைப் பற்றிக் கூடுதல் தகவல் எதுவும் தெரியாமல் ஷ்யாம் இருந்துவருகிறார். அடுத்த முறை புத்தகத்தைப் படித்துவிட்டு காலணி அடுக்கில் வைப்பதற்கு முன்னால், அதில் நன்றி தெரிவித்துக் குறிப்பு வைக்கவும் ஷ்யாம் திட்டமிட்டுள்ளார்.
"வாட்ஸ் அப் புரொஃபைலில் பலரும் தங்கள் பெயரையோ படத்தையோ வைப்பதில்லை. அதனால் எனக்குப் புத்தகம் தரும் நபரைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. புத்தகம் படிக்கத் தரும் அந்த நல்ல உள்ளத்தை விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்" என்கிறார் ஷ்யாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT