Published : 20 May 2020 08:13 PM
Last Updated : 20 May 2020 08:13 PM
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள்; அவர்களில் சொந்த ஊருக்குப் போக விருப்பம் தெரிவித்தவர்கள் எத்தனை பேர் என்பன போன்ற புள்ளிவிவரங்களில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் போலீஸாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் தொழில் மாவட்டங்களாக விளங்குபவை கோவை, திருப்பூர் மாவட்டங்கள். இங்கு 20 -30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே புலம்பெயர்ந்து வந்து பனியன் மற்றும் பஞ்சாலைகளில் பணிக்குச் சேர்ந்தனர். அவர்களது வாழ்க்கைத் தரமும் ஓரளவுக்கு உயர்ந்தது. எனினும் அவர்கள் கேட்கும் கூலி, அடிக்கடி சொந்த ஊருக்குச் சென்றுவிடுவது போன்ற காரணங்களால் அவர்களுக்குப் பதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இங்குள்ள ஆலைகள் வாய்ப்பளிக்கத் தொடங்கின.
கடந்த 15 ஆண்டுகளாக பிஹார், ஒடிசா, ராஜஸ்தான், உ.பி, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து ஆட்கள் வர ஆரம்பித்தனர். அவர்களுக்குத் தங்கும் வசதி, உணவு எல்லாம் கிடைக்கவே, அவர்களில் ஒரு சிலரே தரகர்களாக மாறி தங்கள் உறவினர்களை எல்லாம் அழைத்து வரத் தொடங்கினர்.
இப்படி வந்தவர்கள் கோவை டவுன்ஹால், தெலுங்கு வீதி, காந்தி பார்க் பகுதிகளில் உள்ள தங்க நகைப் பட்டறைகளில், தங்க நகைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிவதாக உள்ளூர்க்காரர்கள் தெரிவித்து வந்தனர். ஒருகட்டத்தில் ஓட்டல்கள், பவுண்டரிகள், கட்டுமானப் பணிகள், வால்பாறை தேயிலை எஸ்டேட் என சகலத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரியத் தொடங்கினர். இவர்களுக்காகக் கோயில், சமூகக்கூடம், தொழிலாளர் சங்கங்கள் எல்லாம் உருவெடுத்தன. பலர் இங்கேயே ரேஷன் கார்டு, வாக்காளர் சீட்டு, ஆதார் எல்லாம் வாங்கி குடும்பத்துடன் செட்டில் ஆகினர்.
அத்துடன், தொடர்ந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்துகொண்டே இருந்தனர். கோவை ரயில் நிலையத்தில் ராஜதானி, மும்பை, கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து நின்றால் போதும், ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் இறங்கியபடியே இருந்தார்கள். இதே நிலை திருப்பூர், சேலம், சென்னை, மதுரை எனப் பரவியது. கோவையில் ஒன்றரை லட்சம் பேர், திருப்பூரில் 80 ஆயிரம் பேர், ஈரோடு, சேலத்தில் 30 ஆயிரம், சென்னையில் ஒன்றரை லட்சம் என தமிழகமெங்கும் 5 லட்சம் வரை புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கலாம் என்பதே பொதுவான கணிப்பாக இருந்தது.
கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு இந்தப் புள்ளிவிவரங்கள் தலைகீழாக மாறின. தமிழகம் முழுக்கவே ஒரு லட்சம் அல்லது 1. 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தாலே அதிகம் என போலீஸார் தெரிவித்து வந்தனர். உதாரணமாக, திருப்பூரில் ஒவ்வொரு நிறுவனத்திலும், ‘உங்கள் கம்பெனியில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர் எத்தனை பேர்?’ என்று போலீஸார் கேட்டிருந்தார்கள். அதற்கான ஆதார் அட்டை நகல்களையும் காட்டச் சொல்லியிருந்தார்கள். அப்படிக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கூட எட்டவில்லையாம்.
இந்நிலையில், இப்போது சொந்த ஊருக்குச் செல்ல விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை, முதலில் சொல்லப்பட்ட எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறதாம். ‘அப்படியானால் இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள்... பனியன் முதலாளிகள் கம்பெனிக்குள்ளேயே வைத்துக்கொண்டு போலிக் கணக்கு காட்டிவந்தார்களா?’ என்பதுதான் இப்போது திருப்பூர் போலீஸாரிடம் உள்ள கேள்வி.
இதே நிலைமைதான் கோவையிலும். இங்கே 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் கணக்கிட்டார்கள். இப்போதோ ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரியின் கணக்கீட்டின்படியும், 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்களாம். கடந்த வாரத்தில் மட்டும் 21 சிறப்பு ரயில்கள் இவர்களுக்காக விடப்பட்டுள்ளன. அதில் 5 ரயில்களில் மட்டும் தலா 1,140 பேர் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல் சிறப்புப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மூலமும் பலர் சென்றுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய கோவை போலீஸார், “மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் இங்கேயேதான் இருக்கிறார்கள். மற்றவர்கள்தான் வெளியேறுகிறார்கள். அவர்களே இந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றால் மொத்தமாக எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT